ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் முன்னோர்கள், பெற்றோர்கள் செய்த, நாம் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப இன்ப, துன்பங்கள் அமைகிறது. புண்ணியங்களை அனுபவிக்கும் போது அதனால், எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், பாவத்திற்குரிய பலன்களை அனுபவிக்கும் போது வாழ்க்கையில் துன்பத்திற்கு அளவே இல்லாமல் போய்விடும். இதற்காக நாம் செல்லாத கோயில்கள் இருக்காது. அப்படியிருக்கும் போது பாவ, புண்ணியங்களை மகான்களால் மாற்ற முடியுமா? என்று கேட்டால் முடியாது என்பது தான் உண்மை. ஆனால், நமது வினையை அனுபவிக்கும் முறையை மாற்றுகிறார்கள். இதை ஒரு எடுத்துக்காட்டுடன் பார்க்கலாம். 

ஒருவர் ஆறாயிரம் ரூபாய்க்கு சில்லறை நாணயங்களாக வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுவோம். அது ஒரு மூட்டை மாதிரி இருக்கும். அதை சுமப்பது கையாள்வது எல்லாமே கஷ்டம். அவர் படுகிற பாட்டைப் பார்த்து விட்டு ஒருவர் சில்லறையைத் தாம் வாங்கிக் கொண்டு புது இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக 3ஐ தருகிறார் என்றால், இப்போதும் அதே ஆறாயிரம் தான் இருக்கிறது. ஆனால் சுமை தெரியவில்லை, பாரம் குறைந்து விட்டது. இதைத்தான் மகான்கள் செய்கிறார்கள். எப்படி? சரியான உபதேசத்தின் மூலம். இறை அருளை உணர்த்துவதின் மூலம். 

சீடன் ஒருவன், "எல்லாம் விதிப்படி தான் நடக்கும் எனும்போது, நாம் ஏன் கடவுளை வணங்க வேண்டும்?" என்று குருவிடம் வாதாடினான். அவர் அவனிடம், "கடும் வெயிலில் நீ வெளியில் செல்லும்போது எப்படிச் செல்கிறாய்?" என்று கேட்டார். அதற்கு சீடன், "குருவே! கடும் வெயிலில் செல்லும்போது, குடை பிடித்துக் கொண்டு, கால்களில் காலணி அணிந்து கொண்டு, கையில் கொஞ்சம் தண்ணீரும் எடுத்துக் கொண்டு, மரநிழலில் சற்று இளைப்பாறியபடிதான் செல்வேன்"என்றான். 

குரு பதிலளித்தார், "வெயில் காயும் போது குடை, காலணி, மரநிழல், தண்ணீர் இவை உன்னை சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து எப்படி காக்கின்றனவோ, அதேப் போல, இறைவனிடம் நீ விடாது பிரார்த்தனை செய்து கொண்டே வந்தால், அது உன்னை விதி என்னும் கொடிய வெப்பத்திலிருந்து காத்துக் கொள்ள உதவும். இறைவழிபாடு, கடும் வெயிலில் குளிர்தரும் நிழலாகும்" என்று சொல்ல, சீடனும் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டான். 

கர்மவினை நம்மிடம் தான் உள்ளது அனால் நாம் கஷ்டப்படாத படி நம் மனோ நிலையை ஞானிகள் மாற்றி நமது ஆத்ம சக்தியை பலப்படுத்தி விடுகிறார்கள். வினை கழிந்த மகான்களை வணங்க, போற்றி துதிக்க, நமது பாவ வினை ஏற்றுக் கொள்ளும் வகையில் மாறும் என்பது அசைக்க முடியாத உண்மை.