இடமறிந்து பேசுதல், இதமாகப் பேசுதல் என்பது பெரிய கலை. மனதில் எதுவும் வைத்துக் கொள்ளாமல் சிலர் யதார்த்தமாகச் சில கடினமான வார்த்தைகளைப் பேசுவார்கள். கேட்பவர்கள் அதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதை அவர்கள் உணர்வதில்லை.
ஒருவர் வாயைத் திறந்தாலே, 'நாசமாப் போச்சு' என்ற வாக்கியத்தை அடிக்கடி சொல்வார், நெருங்கிய நண்பர் வீட்டுத் திருமணத்துக்குத் தாமதமாக வந்தார் அவர், "நீயே லேட்டா வந்தா எப்படி?" என்று நண்பர் உரிமையுடன் கேட்க, இவர் அதற்குச் சொன்ன காரணத்தில் நான்கைந்து முறை நாசமாப் போச்சு' எட்டிப் பார்த்தது. திருமண வீட்டில் எல்லோரும் முகம் சுளித்தார்கள். பொது இடங்களில் பேசும் பேச்சில் நிதானம் வேண்டும்.
பெரியவர்கள் என்ன செய்கிறோமோ, பேசுகிறோமோ, அதைத்தான் குழந்தைகளும் பிரதிபலிக்கும். குழந்தைகள் முன்பு தகாத வார்த்தைகளை நாம் பேசினாலும், அவர்களும் அதே வார்த்தைகளைப் பேசுவார்கள்.
திருமணம், சுப விசேஷங்கள், உறவினர் இல்ல நிகழ்வுகள், அலுவலகக் கூட்டங்கள் போன்ற இடங்களில் யாரையும் பற்றி விமர்சிக்காதீர்கள். சுற்றியிருப்பவர்கள் உங்களுக்கு அறிமுகமில்லாதவர்களாக இருக்கலாம். ஆனால் உங்களால்
விமர்சிக்கப்படுபவருக்கு வேண்டியவராக அல்லது வேண்டாதவராக இருக்கக்கூடும். அவர்கள் கண், மூக்கு, காது வைத்து அதைப் பரப்பினால், சம்பந்தப்பட்டவர் வாழ்க்கையே பாதிக்கப்படும் அளவுக்குப் போய்விடும். பொது இடங்களில் பொதுவான விஷயங்களைத்தான் பேச வேண்டும்.
கணவன்- மனைவி, தந்தை- மகன், அம்மா - மகள், சகோதரர்கள் இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு உங்களிடம் அதுபற்றிப் புகார் செய்ய வந்தால் மிக மிக எச்சரிக்கையாகப் பேசுங்கள். பாசப் பிணைப்பில், உரிமையின் ஆதிக்கத்தில் ஏற்படும் நெருடல்கள் இவை. உணர்ச்சி வேகத்தில் எழுந்த மோதல்கள், அறிவுப்பூர்வமாகச் செயல்படும்போது சமரசமாகிவிடும். இடையில் நீங்கள் தலையிட்டு யாராவது ஒருவரை ஆதரித்து, இன்னொருவரை விமர்சனம் செய்து பேசினால், அது உறவின் நெருக்கத்தையே பாதிக்கும். 'குடும்பம் என்றால் அப்படித்தான் இருக்கும். தயிர் சாதத்திற்கு சுவை கூட்டுவது ஊறுகாய்தானே. அது மாதிரிதான் இந்தச் சண்டையெல்லாம். கோழி மிதித்து குஞ்சு அடிபடுவதில்லை” என்கிற மாதிரி இளையவருக்கும். நம்மைவிட வயதில் சிறியவர்கள் தவறு செய்யும்போது நாம்தான் பொறுத்துப் போக வேண்டும். அவர்களை அனுசரிக்காவிட்டா வேறு யார் அனுசரித்து நடந்துகொள்வார்கள்" என்று பக்குவமாகப் பெரியவர்களுக்கும் ஆறுதல் வார்த்தைகள் சொல்லிச் சிந்திக்க வையுங்கள்.
எதிலும் 'நான் சொல்வது தான் சரி' என்று வாதாடும் விதண்டாவாதப் பேர்வழிகளிடம் மௌனமே சிறந்த உரையாடல், அவசியம் ஏற்பட்டால் மட்டும் யோசித்துச் சிக்கனமாகப் பேசுங்கள். ஏனென்றால், பேச்சுதான் வளருமே தவிர, அதனால் எந்தப் பயனும் இருக்காது.
நாம் பேசாத வார்த்தைகளுக்கு நாம் எஜமானர். பேசிய வார்த்தைகள் நமக்கு எஜமானர்களாகி விடுகின்றன.