1) ஞான : அனைத்து காலத்திலும் படைக்கப்பட்ட அனைத்தையும் ஒரே நேரத்தில் ஒருசேரக் கண்காணிக்கும் திறமை உடையவன் எம்பெருமான்। படைக்கப்பட்ட பொருள்களின் ஆத்ம வேறுபாடுகள் மற்றும் கர்மா வேறுபாடு பிரித்து அறியும் ஞானம்।
2) பல : அனைத்தையும் தனது சங்கல்பத்தின் ஒரு சிறிய பகுதியில் தாங்கவல்ல தன்மை உள்ளவன் எம்பெருமான்.
3) ஐஸ்வர்ய : அனைத்து விதமான பொருட்களையும் அவற்றில் உள்ள ஆத்மாவையும் தங்கள் கர்மத்திற்கு ஏற்ப நியமிக்கும் மற்றும் உருவாக்கும் தன்மை உள்ளவன் எம்பெருமான். அடியவர்கள் கேட்பவற்றை உடனடியாக கொடுக்கும் செல்வம் உடையவன்। இது கொடுக்கக் கொடுக்க இவனது செல்வங்கள் குறையாமல் மேலும் வளருகிறது.
4) வீர்ய : இவ்வாறு பொருட்களை உருவாக்கும் போதும் தொழில்களில் நியமிக்கும் போதும் எந்த விதமான களைப்பும் ஏற்படாமல் பொழுது போக்காகவே செய்யும் தன்மை உள்ளவன் எம்பெருமான்.
5) சக்தி : மனிதர்களுக்கு (சேதனாசேதனங்களுக்கு) செயல்களைச் செய்வதற்குச் தேவையான சக்தியினையும் திறனையும் கொடுப்பவன் எம்பெருமான். செய்ய முடியாத செயல்களை தன்னால் செய்யக்கூடிய ஆற்றல்.
6) தேஜஸ் : மற்ற அனைத்தையும் அடக்கி ஆளும் திறனும் ஒளி உள்ள அனைத்தையும் படைத்து அவற்றுக்குத் தேவையான ஒளியையும் கொடுப்பவன் எம்பெருமான்.
7.சௌசீல்யம்..சீலம் என்றால் பெரியவர்கள். மிக்க மேன்மையுடையவன் மிகத் தாழ்ந்தவனிடம் கலந்து பழகும் தன்மை। இது தன் தாழ்வைக் கருதி அவனை அணுக அஞ்சி விலகிப் போகாமைக்குச் சாதனமாகும். (எளியவர்க்கு எளியவனாக காண்பிப்பது। ஸ்ரீ ராமபிரான் தன்னை மனிதனாகவும் தசரதனின் மகனாகவும் எண்ணுகிறான்)
8..வாத்ஸல்யம்.. அடியார்களின் குற்றங்களைப் பொருட்படுத்தாத அன்புடைமை। இது அடியார்கள் தங்களிடம் உள்ள தாழ்வையும் அவனிடம் உள்ள பெருமையையும் கண்டு அவன் தம்மைப் புறக்கணித்து விடுவானோ என்று அஞ்சி ஓடிவிடாமல் செய்யும். (அடியார்களின் குற்றங்களைக் காணாமல் நிறைகளை மட்டுமே காணும் தன்மை। அடியார்கள் மீது குற்றம் கூறுபவள் பெரிய பிராட்டியேயாயினும் அதனை ஏற்காத குணம் உள்ளவன்)
9.மார்தவம்..மென்மை-இந்த குணம் எம்பெருமானிடம் இருப்பதால் அடியவர்களிடம் சீற்றம் கொள்ள மாட்டான் என்ற நம்பிக்கை ஏற்பட ஹேதுவாகிறது। (தன்னை விட்டு அடியார்கள் பிரிந்து சென்றால் அதை பொறுக்க மாட்டாத தன்மை। அந்த அளவிற்கு மென்மையான உள்ளம் உடையவன்। ராமன் உறங்கி எழும் பொழுது சீதையின் பெயரைக் கூறிக்கொண்டே எழுவது போன்று அடியார்களின் பிரிவினை தாங்காதவன்।)
10.ஆர்ஜவம்.. நேர்மை-இந்த குணம் எம்பெருமானிடம் இருப்பதால் முறை தவறி எதையும் செய்ய மாட்டான் என்ற நம்பிக்கை ஏற்பட ஹேதுவாகிறது। (அடியார்களை தனது மனம்-உடல்-வாக்கு ஆகியவை மூலம் தன் நேர்மையால் எப்பொழுதும் வசப்படுத்தி இருப்பவன்। இந்த குணத்தினை அடியார்களுக்கும் காண்பிப்பவன்।)
11.சௌஹார்தம்.. அடியார்களுக்கு நன்மையையே (அவர்கள் தன்னிடத்தில் வந்தாலும் வராவிட்டாலும்) செய்வார்-நினைப்பார். (அடியார்களுக்கு எந்தவித தீங்கும் வராமல் அனைத்து நன்மைகளையும் அவர்களுக்காக தேடி அலையும் குணம்)
12.ஸாம்யம்..(அடியார்களிடம் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதம் பாராமை. ராமன் குகனிடமும்-சபரியினிடமும்-சுக்ரீவனிடமும் கொண்ட அன்பு இதுவே। கண்ணன் இடையர்களிடம் கொண்ட பரிவும் நட்பும் இது ஆகும்। தன்னை அழைத்த அற்ப யானைக்காக ஓடி வந்த குணம் இது ஆகும்।)
13.காருண்யம்..நம்மிடம் உள்ள குற்றங்களைப் பாராது நாம் செய்யும் பரந்யாஸம் என்ற ஒரு சிறு செயலைக் கொண்டே நம் துன்பங்களைக் கழித்து நம்மைக் காக்கத் திருவுள்ளம் கொள்ளல்। எப்படியும் ஒரு நல்ல காலம் வந்து நம்மை நிச்சயமாய்க் காத்தருள்வான் என்று நமக்கு நம்பிக்கை ஏற்படுவதற்கு இந்த அவனது கருணை சாதனமாயிருக்கும்। (தனது அடியார்களின் துன்பத்தினை பொறுத்துக்கொள்ளமுடியாத தன்மையும் அவர்களிடம் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் உதவும் குணமும் ஆகும்)
14.மாதுர்யம்.. இனிமை, ( குணங்கள் மற்றும் திருமேனி முதலியவை) சத்ருவிடமும் இனிமையாக இருத்தல். உதாரணம்: பீஷ்மர் தன்னைக் கொல்ல வந்த கண்ணனை, "தாமரை போன்ற கண்கள் உடையவனே-அனைத்திற்கும் நாயகனே என்னை இந்தத் தேரில் இருந்து வீழ்த்துவாய்" என்றார்.
15.காம்பீர்யம்.. தனது அடியார்களுக்கு தான் அளிக்கும் அருளை யாராலும் (தன்னாலும் கூட) அளந்து அறிய முடியாமல் செய்யும் குணம்। தன்னையே அடியார்களுக்கு அளிக்கும் தன்மையும் இதில் அடங்கும். இத்தனை செய்து விட்டும் "அடடா இவ்வளவு தான் செய்தோம்" என்று நினைப்பான்.
16.ஔதார்யம்.. பெருங்கொடையாளனாம் தன்மை। சிறியதான ஆத்ம ஸ்வரூபத்தையும் தன்னுடையதான அற்ப வஸ்துக்களையும் அவனுக்கு சமர்ப்பித்தால் அளவிடமுடியாத தன் ஸ்வரூபத்தையும் அளவற்ற தன் வஸ்துக்களையும் அனுபவித்துக் கொள்ளுமாறு சேதநனுக்கு அளிக்கின்றான்। இது மிகப் பெரிய கொடையன்றோ? சேதநன் தன் ஸ்வரூபத்தையும் தன் உடைமைகளையும் சமர்ப்பிப்பது என்பது என்ன? இவனுக்குத்தான் உண்மையில் ஒன்றிலும் உரிமையில்லையே। எல்லாம் எம்பெருமானுடைய உடைமைகள் தாமே। இவ்வுண்மையை அறியாது தன்னுடையனவாகத் தவறாக எண்ணியிருந்தான்। அவற்றை இப்பொழுது உண்மை அறிவு பெற்று அவன் உடைமைகளை அவனிடமே சமர்பிக்கின்றான்। (அடியார்களுக்கு எத்தனை கொடுத்தாலும் மன நிறைவு அடையாதவன்। அடியார்கள் கேட்பவற்றை அவர்களுக்கு உரிமை உள்ளது என்று கொடுப்பவன்। அவ்வாறு கொடுத்ததை இவ்வளவு என்று எண்ணாதவன்)
17.சாதுர்யம்.. தனது அடியார்களின் குற்றங்களை பெரியபிராட்டியாரே அறியாமல் மறைத்து அவர்களைக் காப்பவன்। தாயானவள் தனது பிள்ளையின் குற்றங்களை தந்தையிடமிருந்து மறைப்பது போன்ற குணம் ஆகும். இரண்டாவது பொருள் : அடியார்களுக்கு தனது காப்பாற்றும் தன்மை மீது ஏதேனும் சந்தேகம் தோன்றினால் அதனை நீக்கும் வகையில் ஏதேனும் செயல் புரிதல்।
18.ஸ்தைர்யம்..-ஸ்திரத்தன்மை-தன்னை சரணடைந்தவனை காப்பதில் உறுதியுடைமை. யார் வந்து தடுத்தாலும் உறுதி குறைவதில்லை. (தனக்கு எத்தனை இடர் வந்தாலும் 'எனது அடியார்களை கண்டிப்பாகக் காப்பேன்' என்ற தன்மை। பலரும் ஏசிய விபீஷணனை ஏற்றுக் கொண்டது இந்த குணம் ஆகும்)
19.தைரியம்.. எத்தகைய அருஞ்செயலையும் செய்ய வல்ல மனப்பாங்கு. தனக்கு எத்தனை இடர் வந்தாலும் 'எனது அடியார்களை கண்டிப்பாகக் காப்பேன்' என்ற தன்மையில் உறுதி கொண்டவன். தனக்கோ அடியார்களுக்கோ எதிரியாக இருப்பவர்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாத தன்மை। ராவணன் உயிருடன் உள்ள போதே விபீஷணனுக்கு அரசன் என முடி சூட்டியது இந்த குணமாகும்.
20.சௌர்யம்.. பகைவர்களின் படைபலம் எவ்வளவு பெரிதாக இருப்பினும் அதனைச் சிதற ஓட வைக்கும் திறமை. அடியார்களின் விரோதிகளை அழிக்கும் குணம் உடையவன்.
21.பராக்கிரமம்..விரோதிகள் எப்படிப் போரிட்டாலும், தனது அடியார்களைக் காக்கும் பொருட்டு அவர்களை முறியடிக்கும் தன்மை.
22.சத்யகாமன்.. அடியார்கள் அனைவராலும் விரும்பப்படும் குணங்கள் உடையவன். அடியார்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்து அதனால் மனநிறைவு பெரும் திருக்கல்யாண குணம் உடையவன்.
23.சத்யஸங்கல்பன்.. தடையற்ற சங்கல்பமுடைமை। அவன் ஒன்றை சங்கல்பித்துவிட்டால் அதைத் தானும் மாற்ற முடியாது। இத்தகைய சங்கல்பம்தான் "பிரபத்தி செய்தவனை சம்சார பந்தத்தினின்று விடுவிப்பேன்" என்று அவனை உறுதி கூறும்படி செய்கின்றது। அடியார்களின் சங்கல்பங்களையும் ப்ரதிஞைகளையும் (எம்பெருமானின் திருவடிகளை அடைந்து அவனுக்கு கைங்கர்யம் செய்தல் முதலிய) பூர்த்தி செய்யும் திருக்கல்யாண குணம். (அடியார்களைக் காப்பாற்றுவதற்காக எந்தவிதமான பிறவியும் எடுக்கச் சித்தமாக உள்ள குணம்)
24.க்ருதித்வம்..(அடியார்களுக்கு செய்ய வேண்டிய நன்மைகளை தானே செய்ய வேண்டும் என்றும் அது தன் பாக்கியம் என்றும் அச்செயல்கள் வெற்றி பெற்ற பின்னர் அதனால் மகிழும் குணம்। விபீஷணனுக்கு மகுடம் சூட்டி மகிழ்ந்தது இக்குணமே ஆகும்)
25.க்ருதஜ்ஞதா.. நன்றியுடைமை। இது அடியார்கள் "எம்பெருமான் நாம் ஒரு மிகச் சிறு செயலைச் செய்தாலும் அதைப் பெரிய உதவி செய்துவிட்டதாய்த் திருவுள்ளம் கொண்டு இனி அவன் நம்மை எந்நாளும் கைவிட மாட்டான்" என்று மனம் தேறியிருக்கச் சாதனமாகும்। (சரணம் என்று கூறிய அடியார்கள் அதன் பிறகு என்ன குற்றஞ் செய்தாலும் அதை பொறுத்து அவர்கள் கூறிய சரணம் என்ற சொல்லையே அருளுதல்। மேலும் இதுவரை தான் அடியார்களுக்கு செய்த நன்மைகளை நினைக்காமல் மேலும் என்ன நன்மை செய்யலாம் என்ற குணம் உடையவன்)
26) ப்ரணதார்த்திஹர: உன்னையே சரணம் என்று அடைந்தவர்களின் துயரங்களை நீக்குபவனே (காஞ்சி பேரருளாளனை இங்கு குறிக்கிறது)
27) ஜகதாதார: ஜகத்துக்கு ஆத்மாவாக இருந்து அனைத்து ஜகத்தையும் சரீரமாக கொண்டுள்ளதால் அனைத்து குற்றங்களையும் பொறுத்து மன்னிக்கும் குணம்.
28) ஜகத்ஸ்வாமின்: ஜகத்துக்கு ஸ்வாமியாக இருந்து அனைத்து ஜகத்தையும் வழி நடத்துவதால் (கட்டளைப்படி நடக்கும்படி செய்வதால்) ஸத் உபாயத்தில் ப்ரவர்த்திப்பித்து தன் திருவடிகளில் சேர்த்துக்கொள்ளும் குணம்.
29) ஸகலேதர விலக்ஷண: அடியார்கள் கண்டு மகிழ்ந்து அனுபவிக்கும் படியான திருமேனி அழகும் குணங்களும் கொண்டவன்।
30) அர்த்தி கல்பக : யாசிப்பவர்கள் யாசிப்பதை தூரத்தில் இருந்தாலும் கொடுக்கும் கற்பகத்தரு போல் கொடுப்பதோடு தன்னையே அடியார்கள் அனுபவிக்கும்படி கொடுத்து மோக்ஷத்தையும் கொடுப்பவன் எம்பெருமான்।
31) ஆபத்ஸக : ஆபத்து என்று வந்தால் சக தோழனைப்போல் ஆதரவுடன் அணைப்பவனே। தாய்-தந்தை-உறவினர் என்று அனைவரும் கைவிட்டாலும் துணையாய் இருப்பவனே।
32) பரப்ரஹ்மபூதம் : ஆதி அந்தம் அற்ற, என்றும் அழிவில்லாத, எல்லாவற்றையும் விட உயர்ந்த பரம்பொருளே। அதாவது அடியார்களுக்கு தன்னுடைய அளவு (தான் உயர்ந்துள்ள அளவு) அருள் செய்பவன் - அவர்களைத் தனது அளவு உயர்த்துபவன் (மோக்ஷமளித்து)
33) புருஷோத்தமம் : அனைத்து புருஷர்களிலும் உயர்ந்தவன்। மீதி அனைவரும் ஸ்திரீகளே। அடியார்கள் வேண்டுவதைத் தயங்காமல் அளிக்கும் குணம் உள்ளவன்।
34) ஸௌலப்யம் : சுலபத்வம்- பரமபதநாதனாய் எல்லோரினும் மேம்பட்டு நிற்கும் சர்வேஸ்வரன் இங்கு வந்து அவதரித்துக் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை எல்லோரும் அருகில் வந்து தம் ஊனக்கண்ணால் காணும்படி எளியனாயிருத்தல்। இக்குணம் சேதநர்கள் தங்கள் தாழ்வை நினைத்து அகலாமல் எப்படியும் தாம் விரும்பிய பலனை அளித்தருள்வான் என்ற நம்பிக்கைக்குச் சாதனமாகும்।
35) பரிபூர்ணத்வம் : அவன் நினைத்தால் பெறமுடியாத வஸ்து இல்லாமை। எம்பெருமான் சேதநனது மனநிலையைப் பார்ப்பானேயன்றி அவன் சமர்ப்பிக்கும் வஸ்துக்களில் உயர்வு தாழ்வு-மிகுதி குறைவு முதலிய தாரதம்யத்தைப் பார்க்கமாட்டான்। இது தான் இந்தக் குணத்தின் விளைவு।
36) சர்வசக்தித்வம் : எதையும் செய்யும் சக்தியுடைமை। இது அடியார்கள் விரும்பும் இந்தப் பயனையும் தருவதற்கும் சம்ஸாரிகளான சேதநர்களை எம்பெருமான் தான் நினைத்த போது பரமபதத்தில் நித்யஸூரிகளின் கோஷ்டியில் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கும் பயன்படும்।
37) சர்வஞத்வம் : எல்லாவற்றையும் ஏக காலத்தில் எப்பொழுதும் தானே கண்கூடாகக் காண்பது। இது அடியார்கள் விரும்பும் நன்மைகளைப் பெறுவிப்பதற்கும் தீமைகளைக் கழிப்பதற்கும் ஏற்ற உபாயத்தை அறிவதற்கும் அதற்குத் தடையான விரோதிகளை அறிவதற்கும் பயன்படும்।
38) நிரதிசய போக்யத்வம் : எம்பெருமானைத் தவிர அனுபவிக்க இனியது இல்லை என்னும் படி எம்பெருமானை மோக்ஷத்திலும் அனுபவிக்கும்படி மிக இனியனாயிருத்தல்.
39) அவாப்த ஸமஸ்த காமத்தவம் : இது இல்லை என்ற ஒரு குறையும் இன்றியே அனைத்து விரும்பும் விஷயங்களையும் எப்பொழுதும் பெற்றிருப்பவன்.
40) ஸ்தித ப்ரதிஞத்வம் : தன் ப்ரதிஞைகளை கட்டாயம் நிறைவேற்றுபவன்। (உதாரணமாக வாலியைக் கொல்கிறேன் என்று சொல்லி நிறைவேற்றியமை முதலியவை)
41) அனந்த : எதனாலும் அளவிட முடியாத தன்மை வேறு எந்த பொருளுடனும் ஒப்பிடுதல் போன்ற எந்த முறையாலும் அளக்க முடியாது।
42) ஞானாநந்தைக ஸ்வரூப : இங்கு ஞானம்+ஆனந்தம்+ஸ்வரூபம்। ஞானம் என்பது ஸ்வயமாகவே உள்ள ஒளி, தேஜஸ் ஆகும்। இங்கு ஞானம் என்பதன் மூலம் உண்டாகும் பேரானந்தம் என்பதை கூறுகிறார்। ஆக பெரும் ஆனந்தத்தினை உண்டாக்கும் ஞானம் என்பதை தனது ஸ்வரூபமாகவே உடையவன்।
43) ஸுத்த ஸத்வ ஸ்வரூப : அப்ராக்ருதமான சுத்த சத்வ திருமேனியை எப்பொழுதும் (அவதார மற்றும் அர்ச்சா மூர்த்திகளிலும் கூட) உடையவன் எம்பெருமான்.
44) ஸ்வாபிமத : தனது திருமேனியே தனக்கு இன்பம் அளிக்கும் என்றபடி உள்ளவன் எம்பெருமான்.
45) அநுரூப : இப்படிப்பட்ட தனது அப்ராக்ருத திருமேனியை மறைக்காமல் உள்ளவன் எம்பெருமான்
46) ஏகரூப : தோற்றம்-வளர்ச்சி-குறைவு-அழிதல் போன்ற அவஸ்தைகள் இல்லாத அப்ராக்ருத திருமேனியை எப்பொழுதும் கொண்டவன் எம்பெருமான்.
47) அசிந்த்ய : கற்பனைக்குக் கூட எம்பெருமானை மற்ற எந்த ஒன்றுடனும் ஒப்பிட்டு சிந்திக்க முடியாது.
48) திவ்ய: நாம் எவ்வளவு கடினப்பட்டு தேடினாலும், அவனுக்கு ஒப்புமையாக மற்றுஒன்றைக் காண முடியாத தன்மையுடையவன் எம்பெருமான்
48) அத்புத : ஒவ்வொரு நொடிப்பொழுதும் புதியவனாக-புதிய தன்மையுடையவனாக உள்ளவன் எம்பெருமான்.
49) நித்ய நிரவத்ய : எப்பொழுதும் தனக்காக மட்டுமல்லாமல் தன்னைப் பணியும் அடியார்களுக்காகவே இருப்பவன் எம்பெருமான்.
50) நிரதிசய ஒளஜ்வல்ய : மிகவும் அதிகமான ஒளியுடன் கூடியவன் (இவனது திருமேனியின் ஒளியின் முன்பு மற்ற ஒளி பொருந்தியவை எல்லாம் ஒளி குறைந்ததாகவே இருக்கும்) எம்பெருமான்.
51) சௌந்தர்ய : இவனது திருமேனியின் அனைத்து பகுதிகளும் மிக்க அழகுடன் கூடியவை, (ஸ்ரீ ராமனின் அழகானது ஆண்களையும் கவர்கிறது)
52) சௌகந்த்ய : இவனது திருமேனியின் அனைத்து பகுதிகளும் மிக்க நறுமணத்துடன் கூடியவை। தன்னுடன் சேர்பவர்களுக்கும் அதனை அளிப்பவன் எம்பெருமான்
53) யெளவன : என்றும் இளமைப்பருவம் உடையவன் எம்பெருமான்.