பரம பக்தர் பூந்தானம் ஒருதடவை நாராயண பட்டத்ரியிடம், "எனக்கும் குருவாயூரப்பனை நேர்ல தர்ஶனம் பண்ணணும்னு ரொம்ப தாபமா இருக்கு. அவனை எப்படி த்யானம் செய்யணும்?" என்று கேட்டார்.
"இவருக்கு த்யானம் ஒரு கேடா?" என்ற ஏளனத்தில், அங்கிருந்த ஒரு எருமை மாட்டைக் காட்டி, " இதோ! இந்த எருமையை த்யானம் பண்ணு!" என்று சொல்லிவிட்டு பட்டத்ரி போய்விட்டார்.
பூந்தானம் ஸ்வாமியோ, நாராயண பட்டத்ரியின் வாக்கை வேதவாக்காக கொண்டு, எருமை ரூபத்தில் குருவாயூரப்பனை த்யானித்து வந்தார்.
ஒருநாள் ஸ்வாமி புறப்பாடாகி பல்லக்கில் வெளியே வரும்போது, முன்பக்கம் பல்லக்கு தூக்குபவர்கள் ஸன்னதியின் படியைத் தாண்டி வெளியே வந்துவிட்டார்கள்.
ஆனால் பின்னால் இருப்பவர்களால் படியின் அருகில் கூட போகமுடியவில்லை!
லீலானாதனான ஸ்வாமியோ, நட்டநடுவில் பல்லக்கில் உட்கார்ந்து 'திருதிரு'வென்று முழித்துக் கொண்டிருக்கிறான்.
கோவிலில் உள்ளவர்களும், பக்தர்களும், பட்டத்ரியும் என்ன முயற்சி பண்ணியும் எதுவும் பண்ணமுடியவில்லை...!
யானைகளைக் கட்டிக்கூட இழுத்தாச்சு!
ஸ்வாமி மட்டும் ஒரு இஞ்ச் கூட நகரவேயில்லை!
அப்போது அங்கே வந்த பூந்தானம் ஸ்வாமிகள், ஸன்னதியில் நடக்கும் முயற்சிகளைப் பார்த்தார்.
" ஏன் இவ்வளவு கஷ்டப்படணும்? பல்லாக்கை லேஸாக ஸாய்ச்சுட்டா... போறுமே!" என்றார்.
எல்லாரும் அவர் ஏதோ உளறுகிறார் அவரை ஏளனமாக நினைத்தனர். அவர் பேச்சை சட்டை செய்யாமல் ரொம்ப நேரம் போராடினார்கள்.
இவரோ, திரும்பத்திரும்ப, " லேஸா ஸ்வாமியை பல்லக்கோட சாய்ச்சு கொண்டு வந்தா, கொம்பு இடிக்காது....! இப்போ, ரெண்டு கொம்பும் ஸன்னதி நிலைப்படி வாஸலை அடைக்கிறது..."
" என்ன ஓய்! பூந்தானம்! பைத்தியமா ஓய்! ஸ்வாமி புறப்பாடாறது.......! கொம்பு மொளைச்ச ஏதோ மாட்டோட புறப்பாடு இல்ல ஓய்!..."
பட்டத்ரி கோபத்தில் கத்தினார்.
அப்போது ஒரு அஶரீரி ஒலித்தது!
"பூந்தானம் சொல்வதுதான் ஸரி. பட்டத்ரியின் வாக்குப்படி, அவன் என்னை எருமை ரூபத்திலேயே த்யானம் செய்வதால், அவனுடைய த்ருடமான பக்தியால், அவன் கண்களுக்கு நான் எருமை ரூபத்தில்தான் இருக்கிறேன். அவன் சொன்னமாதிரி, என் இரண்டு கொம்பும் வாஸலை அடைத்திருக்கிறது. பல்லாக்கை சாய்த்து வெளியே கொண்டு செல்லுங்கள்!"
பக்தபராதீனன் பகவான், கபடமில்லாத பக்திக்கு மட்டுமே வஸப்படுவான்.
தன் பக்தர்களுக்காக எந்த ரூபத்தையும் எடுப்பான்! என்ன வேணாலும் செய்வான் !
ஜெய ஸ்ரீ ராதே கிருஷ்ணா...