பணம் குவியும்! எதுனால?

எப்போதும் வேங்கடேசனையே நினைத்துக் கொண்டிருக்க..

விநா வேங்கடேசம் ந நாதோ ந நாத
சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி
ஹரே வேங்கடேச ப்ரசீத ப்ரசீத
ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச

விநா வேங்கடேசம் = வேங்கடேசனைத் தவிர
ந நாதோ ந நாத = வேறு தலைவன் இல்லை! வேறு தலைவன் இல்லை!
சதா வேங்கடேசம் = எப்போதும் வேங்கடேசனையே
ஸ்மராமி ஸ்மராமி = நினைத்துக் கொண்டிருக்கிறேன்! நினைத்துக் கொண்டிருக்கிறேன்!
ஹரே வேங்கடேச = அப்பனே வேங்கடேசா
ப்ரசீத ப்ரசீத = கருணை காட்டு! கருணை காட்டு!
ப்ரியம் வேங்கடேச = விருப்பமான வேங்கடேசா
ப்ரயச்ச ப்ரயச்ச = (மங்களங்களைக்) கொடுப்பாய்! கொடுப்பாய்!
அது என்ன "ப்ரியம்" வேங்கடேச? யாருக்குப் ப்ரியமானவன்? யாரெல்லாம் வேங்கடவனை விரும்புகிறார்கள்? 

மாறன் சொல்வதைக் கேளுங்கள்!

நிகரில் அமரர், முனிக் கணங்கள் "விரும்பும்" திருவேங்கடத்தானே!
புகல் ஒன்று இல்லா அடியேன் உன், அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே!
அது என்ன "விரும்பும்" திருவேங்கடத்தான்? "ப்ரியம்" வேங்கடேச?

* குடும்பஸ்தர்கள் முதல் துறவிகள் வரை,
* வாலிபன் முதல் வயோதிகன் வரை,
* ஏழை முதல் பணக்காரன் வரை,
* சைவர்கள் முதல் வைணவர்கள் வரை,
* இந்திக்காரர்கள் முதல் மறத் தமிழர்கள் வரை,
* ஆதி சங்கரர் முதல் இராமானுசர் வரை...

இவ்வளவு பேரும் "விரும்பும்" திருவேங்கடத்தான்! - ஏன்?
பணம் குவியுதே! அதுனாலயா?
இல்லை! பணம், பெருங்கூட்டம் எல்லாம் இப்போ தானே...சுமார் ஒரு ஐம்பது அறுபது ஆண்டுக்கு முன்னால் தானே! அதுக்கு முன்னாடியெல்லாம் ஆண்டுக்கு ஒரு முறை போய் வருவதற்கே சிரமப்படுவாங்களே! ஆனா அப்போதும் வீட்டில் இருந்து கொண்டே, அவனுக்குன்னு தனியா முடிஞ்சி வச்சிப்பாங்களே - ஏன்?

இரண்டாயிரம் வருசமா இருக்குதே! சிலப்பதிகாரம் காலம் தொட்டு அப்படி என்ன ஒரு ஈர்ப்பு? தமிழ் இலக்கியம் மட்டும் தானா அவனைக் கொண்டாடுகிறது? தெய்வத் தமிழுக்குப் பின்னால் வந்த
* தெலுங்குக் கீர்த்தனைகள்,
* கன்னட தாச நாமாக்கள்,
* மலையாள கானங்கள்,
* மராத்தி அபாங்குகள்,
* ஒரிய தரங்கங்கள்,
* குஜராத்திய கோலாட்டப் பாடல்கள்-ன்னு...

எப்படி இத்தனை மொழிகளிலும் இவன் "விரும்பும்" திருவேங்கடத்தான் ஆனான்? "ப்ரிய" பாலாஜி ஆனான்? ஆண்டாள் அரங்கனைத் தானே விரும்பினாள்? மணந்து கொண்டாள்? ஆனால் அரங்கன் மேல் பத்தே பாடல் தான் பாடினாள்! வேங்கடவன் மேல் தான் அதிகமான பாடல்கள்! வேங்கடற்குத் தான் தன்னை விதிக்கச் சொல்கிறாள்! குல முதல்வனான நம்மாழ்வார், சரணாகதி என்று வரும் போது மட்டும், அரங்கனிடம் செய்யாமல், வேங்கடவனிடம் செய்யும் மாயம் என்ன?

"புகல் ஒன்று இல்லா அடியேன், உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே" என்ற சரணாகதிக்கான ஒரே பாசுரம், வேங்கடவன் மேல் அமைந்தது வியப்பிலும் வியப்பே! இப்படி அனைவருக்கும் "ப்ரியம்" வேங்கடேசனாய் இருக்கும் காரணத்தை அறியத் தான் முடியுமா? முடியும்! முன்பே சுப்ரபாதப் பதிவில் சொன்னது போல்,

வேங்கடத்து நெடியோன் மட்டும் தான் மோட்சத்துக்கான வழியை நம் எல்லாருக்கும் சொல்லிக் கொடுத்துக் கொண்டே நிற்கிறான்!