மஹா பூர்ண ஆசார்யரும்,மஹா பூர்ண சீடரும் !!

ஸ்ரீராமாநுஜருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்த ஆசார்யர், "பூர்ணாசார்யர் "என்று காஞ்சி தேவப்பெருமாளே கொண்டாடிய ஸ்ரீ பெரிய நம்பி ஸ்வாமிகளின் திருநட்சத்திரம் - மார்கழி கேட்டை ஸ்ரீரங்கத்தில் அவதரித்த இவர், பராங்குச தாசர் என்னும் திருநாமத்தாலும் போற்றப் பட்டார் (ஸ்ரீபராங்குச தாசாய நம: என்னும் குருபரம்பரை வாக்யம் இந்த ஸ்வாமியைக்க குறிக்கிறது.)

இவரது தனியன்:

"கமலாபதி கல்யாண, குணாம்ருத நிஷேவயா!
பூர்ண காமாய ஸததம், பூர்ணா மஹதே நம:!!"

'எப்போதும் கமலாபதியான ஸ்ரீமந்நாராயணின் கல்யாண குணக்கடலில், ஆழ்ந்திருக்கும், பரிபூரணரான பெரிய நம்பிகளை வணங்குகிறேன்'

ஜகதாசார்யர் ராமாநுஜரோடு தொடர்புடைய,பெரியநம்பி ஸ்வாமியின் வைபவங்களை அனுபவிப்போம்:

1.பவிஷ்யதாசார்யரை அழைத்து வர, பரமாசார்யர் அனுப்பிய தூதுவர்!!

ராமாநுஜரின் பரமாசார்யரான (ஆசார்யரின் ஆசார்யர்) ஆளவந்தார், ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீவைஷ்ணவப் பீடத்தின் தலைவராக எழுந்தருளியிருந்தார்.
அவருக்கு வயதாகி திருமேனி நோவு கண்டார்.தம் அந்திமக் காலம் நெருங்கு வதை உணர்ந்த அவர்,தமக்கு அடுத்து ஸ்ரீவைஷ்ணவத் தலைமை ஆசார்யராக விளங்கத் தகுதியானவர் ராமாநுஜரே என்று முடிவு செய்தார். அப்போது காஞ்சிபுரத்தில் இருந்த ராமாநுஜரை, உடனே ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வருமாறு,தம் பிரதான சீடர் பெரியநம்பிகளை,அனுப்பினார்.அங்கு சென்ற பெரியநம்பிகள் ஆளவந்தாரின் 'ஸ்தோத்ர ரத்னம்' ஸ்லோகங்களைப் பாடி,ராமாநுஜரைக் கவர்ந்து,ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வந்தார்.ஆனால் அவர்கள் வருவதற்குள் ஆளவந்தார் பரமபதம் எய்திவிட்டார். அவர்கள் ஆளவந்தாரின் சரம திருமேனியை மட்டுமே சேவித்தனர்.

அவர் சரம திருமேனியில் கைவிரல்கள் மூன்று மடிந்திருந்ததைக் கண்ட ராமாநுஜர் அவரது மூன்று நிறைவேறாத ஆசைகளை அங்கு உள்ளோரிடமிருந்து அறிந்து, பரமாசார்யர் ஆளவந்தார் அருளால்,தாம் அவரது மூன்று ஆசைகளையும் நிறைவேற்றி வைப்போம் என்று சங்கல்பம் செய்தார். உடனே மடங்கியிருந்த விரல்கள் நிமிர்ந்தன!!! 

2.பேரருளாளப் பெருமாள் பெருங்கருணையால்,அருளித்
தந்த பேராசார்யர்!

யாதவப் பிரகாசர் பாடசாலையில் ராமாநுஜர் பயின்று வந்த போது, அவருக்கும் யாதவப் பிரகாசருக்கும் சாஸ்த்ர அர்த்தங்களில் பல கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டன.ஒரு கால கட்டத்தில் ராமாநுஜர் பாடசாலை யிலிருந்து விலகி,தாம் பெரிதும் மதித்த ஆசார்யர் திருக்கச்சி நம்பிகளை அணுகி,தம் மனக்குழப்பங்களுக்கு/சந்தேகங்களுக்கு தேவப்பெருமாளிடம் விடை கேட்டுத் தருமாறுவேண்டினார்.

திருக்கச்சி நம்பி மூலம், பேரருளாளர் அருளிய "ஆறு வார்த்தைகளில்" கடைசி வார்த்தை "பூர்ணாசார்ய ஸமாஸ்ரய :"-பூர்ணாசார்யரான பெரியநம்பிகளை ஆசார்யராகச் சேவித்து பஞ்ச சம்ஸஹாரம் செய்து கொள்ளவும்".
ஆதி ஆசார்யர் எம்பெருமானே, ஜகதாசார்யருக்கு,பூர்ணாசார்யரைக் காட்டி அருளினார்!!

3.தேடிச் சென்ற சீடரும், தேடிவந்த ஆசார்யரும்.

ராமாநுஜர் உடனே ஆசார்யரைச் சேவிக்க ஸ்ரீரங்கம் புறப்பட்டார்.அதே சமயம் ராமாநுஜரை அழைத்து வந்து, ஸ்ரீவைஷ்ணவ பீடத்தில்,அமரவைக்க
பெரியநம்பிகள் ஸ்ரீரங்கத்திலிருந்து காஞ்சிபுரம் புறப்பட்டார். இருவரும் மதுராந்தகத்தில் சந்தித்துக்கொண்டனர்.
ராமாநுஜர் ஆசார்யரைச் சேவித்து தமக்கு அங்கேயே பஞ்சசம்ஸ்ஹாரம் செய்து வைக்கவேண்டினார். பெரிய நம்பிகள்,காஞ்சி சென்று தேவப்பெருமாள் கோயிலில் செய்து கொள்ளலாமே என்றார்.ஆனால் அவர் உடனே செய்ய வேண்டும்

("மின்னின் நிலை இல மன்னுயிர் ஆக்கைகள்' என்னும் இடத்துஇறை, உன்னுமின நீரே") என்னும் திருவாய்மொழிப் பாசுரத்தைச் சொல்லி (1-2-1) என்று மீண்டும் பிரார்த்தித்தார். நம்பிகள் மதுராந்தகம் ஏரி காத்த பெருமாள் கோவில் வளாகத்தில் இருக்கும் மகிழ மரத்தடியில் அமர்ந்து, ராமாநுஜருக்குப் பஞ்ச சம்ஸ்ஹாரம் செய்து வைத்தார்.

4.ஆசார்யரின் தேவியருக்கு விளைந்த அபச்சாரத்தால், துறவறம் ஏற்ற எதிராஜர்:

பெரியநம்பிகள் தம் தேவியருடன் காஞ்சி சென்று, ராமாநுஜரின் திருமாளிகை யின் மற்றொரு பகுதியில் வாசம் செய்து,உடையவருக்குப் பல சாஸ்த்ர அர்த்த விசேஷங்களை உபதேசித்து வந்தார்.அங்கிருக்கும் போது நம்பிகளின் தேவியாருக்கும், ராமாநுஜரின் தேவி தஞ்சமாம்பாளுக்கும்,சிறு பிணக்கு ஏற்பட்டது.இதனால் நம்பிகள் பெரிதும் வருந்தினார்.இதை அறிந்த ராமாநுஜர்,தம் மனைவியால் இந்த அபச்சாரம் ஏற்பட்டதே என்று மனம் வெம்பி,இனி இல்லறம் வேண்டாம் என்று துறவறம் மேற்கொண்டார்!(வேறு இரண்டு பாகவதர்களுக்கும் அவரால் அபச்சாரம் விளைந்ததால்,இந்த நிகழ்வு
அவரது துறவறத்தை துரிதப் படுத்தியது.)

5.ஆசார்யர் திருக்குமாரத்தி அத்துழாய்க்கு, அண்ணன் சீர்மிகு வரிசை!

நம்பிகள் திருக்குமாரத்தி அத்துழாய், அவரது புகுந்த வீட்டில்,ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வர துணைக்கு யாரேனும் வர முடியாமா எனக்கேட்ட போது,உங்கள் வீட்டிலிருந்து "சீதன வெள்ளாட்டி"யைக் கொண்டு வரவும் என்றார்கள். அந்தக் காலத்தில், பெண்களைத் திருமணம் செய்து கொடுக்கும் போது, தாய்வீட்டிலிருந்து மற்ற சீர் வரிசைகளுடன்,ஒரு வேலைக்காரி(காரன்) யையும் அனுப்பி வைப்பார்கள் (ஓரளவு வசதியானவர்கள்); அவரே 'சீதன வெள்ளாட்டி'.அத்துழாய் இதைத் தம் தந்தையாரிடம், சொன்ன போது,அவர்"நான் என்ன செய்ய முடியும்?உன் அண்ணா ராமாநுஜரிடம் சொல்லவும்" என்றார். அத்துழாய் ராமாநுஜரிடம் விண்ணப்பிக்க, அவர் தம்முடைய பிரதான சீடரும், பெரியகோவில் மணியகாரராக,கோவில் நிர்வாகத்தைக் கவனித்து வந்த முதலியாண்டான் ஸ்வாமியை, சீதன வெள்ளாட்டியாக அனுப்பி வைத்தார்! ஆசார்யநியமனத்தை ஏற்று, அங்கு சென்ற முதலியாண்டான், அவர் யார் என்று தெரிவிக்காமல் ஆறு மாத காலம், ஒரு வேலைக்காரராக எல்லா வேலைகளையும் செய்தார்!! 

6.சீடரிடம்,ஆசார்யரைக் கண்டு சேவித்த மஹான்:

ஒரு முறை ராமாநுஜர் தம் சீடர்களுடன் ஸ்ரீரங்கம் வீதியில் வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த பெரிய நம்பிகள், ராமாநுஜருக்கு சாஷ்டாங்க தண்டம் சமர்ப்பித்து சேவித்தார்.ராமாநுஜரும், மற்றவர்களும் ஆச்சரியப்பட்டு,இவரைச் சேவித்து எழுந்து,சீடரான தம்மைச் சேவித்தது தகுமோ என்று கேட்க நம்பிகள்
"ஆளவந்தார் தம் சிஷ்யர்களுடன் வந்தது போல் இருந்ததால் சேவித்தேன்"
என்றார்!!.

7.திருப்பாவை ஜீயர், திருவுள்ளம் அறிந்த திருவாளர்

உடையவர் ஶ்ரீரங்கத்தில் இருக்கும்போது, நித்யமும் காலையில் உஞ்சவிருத்தி (பிட்சை) செய்து தான் பிரசாதம் எடுத்துக் கொள்வார். உஞ்ச விருத்திக்காக சித்திரை வீதிகளில் வரும் போது, திருப்பாவைப் பாசுரங்களை பாடிக் கொண்டே வருவார்.ஒரு நாள் அவ்வாறு வரும் போது, அவருடைய ஆசார்யர் பெரிய நம்பி ஸ்வாமிகள் திருமாளிகை முன்பு 'உந்து மத களிற்றன்' பாசுரம் அனுஸந்தானம் செய்து கொண்டே வந்தார்.

"செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப,வந்து திறவாய்" என்று முடிக்கும் போது,பெரிய நம்பிகளின் திருக்குமாரத்தி அத்துழாய், யதேச்சையாகக் கதவைத் திறந்து வெளியே வந்தார்.அவரைப் பார்த்ததும், நப்பின்னையே வந்து கதவைத் திறந்ததாக நினைத்து,மூர்ச்சை அடைந்து விழுந்து விட்டார் ராமானுஜர். அத்துழாய் பயந்து உள்ளே சென்று, தம் தந்தையாரிடம் நடந்தது என்ன என்று சொன்னார்.அதைக் கேட்ட பெரிய நம்பிகள் 'ஒன்றும் பதற்றப்பட வேண்டாம்;உந்து மதகளிற்றன் பாசுரம் பாடிக் கொண்டு வந்திருப்பார்'என்று சொன்னார் .ஒப்புயர்வற்ற சீடரான ராமானுஜரின் திருவுள்ளம் அறிந்த ஆசார்யசீலர் பெரிய நம்பிகள்!!(இந்த வைபவமே ராமாநுஜரைத் 'திருப்பாவை ஜீயர்' என்றழைக்கக் காரணம் ஆனது).

8.ஆசார்யர் மேன்மையை, உலகோருக்கு உணர்த்திய உன்னத சீடர்:

தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த, மாறநேர் நம்பி ஸ்வாமி(ஆளவந்தாரின் சீடர்) திருமேனி நோவு கண்டபோது, பெரிய நம்பிகள் அவருக்குச் சிசுருக்ஷை செய்து கவனித்துக் கொண்டார்.அவர் பரமபதம் எய்தி விட, அவருடைய சரம கைங்கர்யங்கள் அனைத்தையும் பெரியநம்பி செய்தார். உயர்ந்த அந்தண குல சீலரான,பெரியநம்பி இவ்வாறு செய்தது,ஸ்ரீரங்கத்தில், அன்றிருந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் ஏற்றுக் கொள்ளாமல்,அவரைப் பற்றி ராமாநுஜரிடம் புகார் செய்தார்கள். அவரைக் பெரிய கோவிலிலிருந்து விலக்கி வைக்கவும் துணிந்தார்கள். ஆசார்யரின் கருணையையும், மேன்மையையும் நன்கறிந்த ராமாநுஜர், மற்றவர்கள் இவரது பெருமையை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, நம்பிகளிடம்,அவர் ஏன் இவ்வாறு செய்தார் என்று கேட்டார்.

அதற்கு அவர், "பாகவத கைங்கர்யத்தை நானே செய்யவேண்டும் ஒழிய வேறொருவரை நியமிக்க முடியாது.ஸ்ரீராமபிரான் ஜடாயு என்னும் பறவைக்கு அந்திமக் கிரியைகள் செய்தார்;நான் ராமரை விட உயர்ந்தவன் அல்ல; மாறநேரி நம்பி ஜடாயுவைவிடத் தாழ்ந்தவர் அல்ல; எனவே அடியேன் செய்த கைங்கர்யத்தில் தவறில்லை. மேலும் நம்மாழ்வார் திருவாய்மொழி 
"பயிலும் சுடரொளிமூர்த்தி"
( 3-7),"நெடுமாற்கடிமை"(8-10) பதிகங்களில் எடுத்துரைத்த பாகவத சேஷத்வம் வெறும் தத்வார்த்த விஷ்யம் மட்டுமா? கடலோசையோ?" என்று
கேட்டார்.இதைக் கேட்டுப் பெரிதும் உகந்த உடையவர்,நம்பிகளின் மேன்மையை எல்லோருக்கும் 
எடுத்துரை த்தார்.

9.தர்சனத்திற்காக, தர்சனம் இழந்த, மஹாபூரணரும், ஆழ்வானும்.

சோழமன்னன்(கிருமிகண்ட சோழன்)ராமாநுஜரைத் தம் அரசவைக்கு அழைத்து வருமாறு,தம் படை வீரர்களை ஸ்ரீரங்கத்துக்கு அனுப்பினான். ராமாநுஜர் அங்கு சென்றால் அவருக்கு ஆபத்து நேரலாம் என்றுணர்ந்த கூரத்தாழ்வான், தாமே ராமநுஜர் போல் காஷாயம் தரித்துக்கொண்டு 
ராமாநுஜராக அங்கு சென்றார்.(ராமாநுஜருக்கு, வெள்ளை வஸ்திரங்கள் சாத்தி மேல்நாட்டுக்கு (கர்நாடகாவில் உள்ள மேல்கோட்டை) அனுப்பி வைத்தார்.) கூரத்தாழ்வான் மட்டும் தனியே சென்றால் அவருக்கு ஆபத்து நேரிடும் என்று அஞ்சிய, பெரிய நம்பிகள், தாமும் தள்ளாத 105 வயதில் அவருடன் சோழராஜ சபைக்குச் சென்றார்.

அங்கு மன்னன் கூறியபடி, சிவனே பரதெய்வம் என்பதை ஆழ்வான் ஒத்துக்கொள்ள வில்லை.அந்தக் கூற்றை எதிர்த்து பல பிரமாணங்களை வைத்து ஸ்ரீமந் நாராயணனே பர தெய்வம் என்று நிரூபித்தார் ஆழ்வான்.
இதனாலும், அவரே இராமாநுஜர் போன்று வேடமிட்டு வந்ததாலும், கடுங்கோபமடைந்த மன்னன் அவர் கண்களைப் பிடுங்குமாறு ஆணையிட்டான். "நீர் என்ன பிடுங்குவது? நானே பிடுங்கிக் கொள்கிறேன்" என்று கூறிய ஆழ்வான் தம் கைகளால், கண்களைப் பிடுங்கி எறிந்தார். அருகில் இருந்த பெரியநம்பிகளின் கண்களை,படை வீரர்கள் ஆயுதம் கொண்டு பிடுங்கினர் !

இவ்வாறாக ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய மார்க்கம் (தர்சனம்) காக்கவும் , ராமாநுஜருக்கு நேரவிருந்த ஆபத்திலிருந்து அவரைக் காக்கவும் தங்கள் தர்சனத்தை (கண் பார்வையையே) இழந்தார்கள் நம்பிகளும்,ஆழ்வானும். 

10.ஸ்ரீரங்க திவ்ய தேசத்துக்கு" மந்திர மண் ரட்சை" இட்ட மஹான்

ஒரு சமயத்தில் ஸ்ரீரங்கத்தில் பல துர்சம்பவங்கள் நடந்தன. இதனால் பெரிய பெருமாளுக்கும் ஏதேனும் அபச்சாரம் விளையுமோ என்று, மனக் கிலேசமடைந்த ராமாநுஜர் தம் ஆசார்யர் பெரிய நம்பிகளிடம் ஆலோசனை கேட்டார்.நம்பிகள் ஸ்ரீரங்கத்தின் எல்லையைச் சுற்றி மந்திரங்கள் உச்சாடனம் செய்தால் அவை ஸ்ரீரங்கத்தைக் காப்பாற்றி பவித்ரமாக வைத்திருக்கும் என்றார்.தாமே மந்திர உச்சாடனம் செய்து செல்வதாகவும்,தாம் செல்லும் வழியில்,தமக்குப் பின்னால் கர்வம்/தற்பெருமை சிறிதும் இல்லாத ஒருவர் மணல் தூவிக்கொண்டே வந்து மணல்வேலி அமைக்க வேண்டும் என்றார்.அப்படி ஒருவரை அவரே தேர்ந்தெடுத்து அழைத்துச் செல்லுமாறு ராமாநுஜர் கூறினார்.நம்பிகள் ஆழ்வானை அனுப்பி வையும் என்றார் 
நம்பிகளும்,கூரத்தாழ்வானும் சேர்ந்து மந்திர மண் ரட்சையிட்டு, ஸ்ரீரங்கத்துக்குப் பங்கம் வராமல் காத்தனர். 

11.எம்பெருமானிடம் சரணடைந்தவர்கள், எங்கு, உயிர்நீத்தாலும்,மோட்சம் நிச்சயம் என்று உணர்த்திய செம்மை:

சோழமன்னன் அரசவையில் கண்களை இழந்த நம்பிகளும், ஆழ்வானும் ஸ்ரீரங்கத்துக்குத் திரும்பினர். நம்பிகளின் திருக்குமாரத்தி அத்துழாய், அவர்களுக்கு உதவி,அழைத்து வந்தார்.வரும் வழியில், அய்யம்பேட்டை
(தஞ்சாவூர்)க்கு அருகில் (தற்போதைய 'கள்ளர் பசுபதிகோவில்' என்னும் கிராமம்) வரும்போது நம்பிகள் நோவுபட்டார். தம் இறுதிக்காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்தவர், அங்கேயே சில நாட்கள் தங்கலாம் என்றார். அப்போது ஆழ்வான் ஸ்ரீரங்கம் செல்வதற்கு, அவர் நலம் பெற வேண்டும்;

ஸ்ரீரங்கத்தில் பரமபதம் எய்தினால் நன்று என்று கருதினார்.இதைக் கேட்ட நம்பிகள்,எம்பெருமானி டம் சரணடைந்தவர்கள் எங்கு உயிர்விட்டாலும் அவர்களுக்கு பரமபதம்/மோட்சம் நிச்சயம்; எனவே ஸ்ரீரங்கத்துக்கும்,மற்ற இடங்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று கூறினார்.சிறிது நேரத்தில் தம் திருமுடியை ஆழ்வான் மடியிலும், திருவடிகளை அத்துழாய் மடியிலும் வைத்துப் படுத்த வண்ணம் அவர் உயிர்துறந்து பரமபதம் எய்தினார்.அவர் உயிர் பிரியும் தருவாயில் காஞ்சி வரதராஜப் பெருமாளும்,பெருந்தேவித் தாயாரும் அவருக்குப் பிரத்யட்சமாகக் காட்சி கொடுத்தனர்.அங்கேயே அவரது சரமத்திருமேனி பள்ளிப்படுத்தப்பட்டது. மேல்கோட்டையிலிருந்து திரும்பிய ராமாநுஜர் இங்கு வந்து தம் ஆசார்யருக்கு அஞ்சலி செலுத்தினார். அந்த இடத்தில் அவருக்குத் திருவரசு மேடை கட்ட ஏற்பாடு செய்தார். 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!