கும்ப கோணத்தின் சாலைகள் வெப்பமயமாகக் காட்சி அளித்தன.
திருக்குடந்தை ஸ்ரீசாரங்கபாணி பெருமாள் கோயிலில் உச்சி கால பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது அடியார்கள் இருவர் அவசர அவசரமாகக் கோயிலுக்குள் ஓடி வந்தார்கள்.
அவர்களுள் ஒருவர் பன்னிரு ஆழ்வார்க ளில் நான்காவரான திருமழிசை ஆழ்வார். அவருடன் வந்தவர் ஆழ்வாரின் சீடரான கணிகண்ணன்.
திருமழிசை ஆழ்வாரின் முகம் மிகவும் வாடி இருந்தது.
அதற்கான காரணத்தைக் கோயில் பணியாளர்கள் கணிகண்ணனிடம் கேட்டார்கள் .
அதற்குக் கணிகண்ணன், “நம் சார்ங்கபாணிப் பெருமாளைத் தரிசிக்க எண்ணிக் காஞ்சியில் இருந்து நடைப் பயணமாக வந்தோம்.
மூன்று நாட்களாக வழியில் உணவு எதுவும் உட்கொள்ளவில்லை.
அந்தப் பசி மயக்கமும் களைப்பும் தான் ஆழ்வாரின் முகத்தில் தென்படுகின்றன!” என்றான்.
பெருமாள் சந்நதிக்கு விரைந்தார் திருமழிசை ஆழ்வார்.
ஆனால் திரை போடப்பட்டிருந்தது.
சக்கர பாணி பட்டாச்சாரியார் என்னும் அர்ச்சகர் இறைவனுக்குப் பிரசாதம் நிவேதனம் செய்து கொண்டிருந்தார்.
உச்சிகால பூஜை நிறைவடைந்து திரை விலகியபின் இறைவனைத் தரிசிக்கலாம்
என எண்ணி வெளியே காத்திருந்தார் திருமழிசை ஆழ்வார்.
ஆனால், திடீரென இறைவனிடம் இருந்து “நிறுத்துங்கள்!” என்ற ஒலி எழும்பியது.
பிரசாதம் நிவேதனம் செய்த அர்ச்சகரிடம் எம்பெருமான் பேசினான்.
“எனக்கு நெருங்கிய நண்பரான திருமழிசை ஆழ்வார் என்னைத் தரிசிப்பதற்காக மூன்று நாட்கள் நடைப்பயணமாக நடந்து வந்துள்ளார்.
இப்போது அவர் வெளியே காத்திருக்கிறா ர். அவரை முதலில் உள்ளே அழைத்து வாருங்கள்!” என்றான்.
திருமழிசை ஆழ்வார் உள்ளே அழைத்து வரப்பட்டார்.
‘ஆராவமுதன்’ என அழைக்கப்படும் சார்ங்கபாணிப் பெருமாளைக்
கண் குளிரத் தரிசித்தார்.
அவன் முன்னே கமகமவென மணக்கும் சர்க்கரைப் பொங்கல் இருப்பதையும் கண்டார்.
பெருமாள் ஆழ்வாரைப் பார்த்து, “பிரானே! இந்தச் சர்க்கரைப் பொங்கலை நீங்கள் முதலில் அமுது செய்யுங்கள்.
நீங்கள் உண்ட மிச்சத்தை நான் சாப்பிடப் போகிறேன்!” என்றான்.
அதிர்ந்து போன திருமழிசை ஆழ்வார்,
“எம்பெருமானே! தலைவன் உண்ட மிச்ச த்தைத் தானே தொண்டன் உண்ண
வேண்டும். இது தலைகீழாக உள்ளதே!” என வினவினார்.
அதற்கு எம்பெருமான், “நான் அனைத்து உயிர்களுக்குள்ளும் உயிராய் இருக்கிறே ன்.
நீங்கள் அனைவரும் எனக்கு உடலாக இருக்கிறீர்கள்.
எனக்கு உடலாக இருக்கும் உங்களுக்கு உணவளிப்பது என் கடமை அல்லவா?
எனவே நீங்கள் உங்கள் உடலுக்கு உணவாக இந்தச் சர்க்கரைப் பொங்க லையும், உங்கள் உயிருக்கு உணவாக என்னுடைய வடிவழகையும் எடுத்துக் கொள்ளுங்கள்.” என்றான்.
திருமழிசை ஆழ்வாரும் அவன் கட்டளை யை ஏற்றுச் சர்க்கரைப் பொங்கலை உண் டபின், அவர் உண்ட மிச்சத்தை எம்பெரு மான் உண்டான்.
பொதுவாக, அடியார்களை ‘ஆழ்வார்’ என் றும்,
இறைவனை ‘பிரான்’ என்றும் அழை ப்பது வழக்கம்.
ஆனால் வழக்கத்துக்கு மாறாக இறைவன் நிகழ்த்திய இந்நிகழ்ச்சியால், குடந்தையில் இறைவன் ஆராவமுதாழ்வான் என்றும், அடியவர் திருமழிசைப்பிரான் என்று அழைக்க படுகிறார்.
இப்படித் தன் பக்தர்கள் உடல் ஆரோக்கியமும் ஆன்மிக முன்னேற்றமும் பெறுவதற்காக அவர்களுக்கு உயிராக இருந்து உணவளிக்கும் எம்பெருமான் ‘பூதபாவந:’ என்றழைக்கப்படுகிறான்.
‘பூதபாவநாய நம:’ என விஷ்ணு சகஸ்ரநா மத்தின் ஒன்பதாவது திருநாமத்தைத் தினமும் சொல்லி வந்தால்,
திருமழிசைப் பிரானின் பசியைப் போக்கியது போல,
நமது வயிற்றுப்பசி, அறிவுப்பசி உள்ளிட்ட
அனைத்துப் பசிகளையும் எம்பெருமான் போக்கியருள்வான்.