கடவுள் சகாயம் இல்லாமல் எதுவும் கைகூடாது...

கண்ணபுரி ராஜ்யத்தை ஒரு காலத்தில் ஆண்டுவந்த மன்னன் சுந்தரவதன். இவனிடம் ஒரே ஒரு குறை இருந்தது. அதாவது, அவனுக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது.

ஒருநாள் அமைச்சருடன் மாறுவேடத்தில் நகர் சோதனையில் ஈடுபட்டிருந்தான். அப்பொழுது இருவர் பிச்சை கேட்ட விதம் மன்னனை வியப்படைய செய்தது. மறுநாள் அவர்கள் இருவரும் அரண்மனைக்கு அழைக்கப்பட்டார்கள்.

பிச்சை எடுக்கும்போது நீ "ராம சகாயம் ராம சகாயம்" என்று கூறுகிறாய், "ராஜ சகாயம், ராஜ சகாயம்" என்று சொல்கிறான். இதன் அர்த்தம் என்ன சொல்லுங்கள்" என்றார் அமைச்சர். முதலாமவன் "ஐயா! இந்த உலகத்தில் எல்லாருக்கும் படி அளக்கிறவன் சாட்சாத் ராமபிரான்தான். அவனது சகாயம் இருந்தால் போதும். எல்லாச் செல்வங்களும் தாமாகக் கிடைக்கும்" என்றான். இரண்டாமவன் "ஐயா! கண்ணுக்குத் தெரியாமலிருக்கும் கடவுளை விட, கண்ணுக்குத் தெரியும் அரசன் மேலல்லவா? ராஜாவின் சகாயம் இருந்தால் ஒருவன் பணக்காரனாகி விடலாம் என்பது எனது கருத்து|" என்றான்.

மறுநாள் அமைச்சரைப் பார்த்து "அந்த ராஜசகாயம் என்ற பிச்சைக்காரன் மகா புத்திசாலி" என்றார் மன்னன். "அரசே! என்னதான் மனிதர்கள் உதவி செய்தாலும்.., கடவுள் அருள் இல்லாவிட்டால் அந்த உதவி அவனுக்கு கிடைக்காது என்றே நான் நினைக்கிறேன்" என்றார் அமைச்சர்.

ஒருநாள், மன்னனால் தானம் வழங்க ஏற்பாடாகி இருந்தது. அதற்கு ராமசகாயமும், ராஜசகாயமும் வந்திருந்தார்கள். ராமசகாயத்திற்கு ஒரு வேட்டியும் ஒரு பூசணிக்காயும் கிடைத்தது. ராஜசகாயத்தைக் கண்ட மன்னன், நீதானே ராஜசகாயம் என்று கேட்க, அவன் ஆம் என்று பதிலளித்தான். அமைச்சரை வரவழைத்து, காதில் ஏதோ கூறினார். பின்பு அவனுக்கும் ஒரு வேட்டியும் ஒரு பூசணிக்காயும் கொடுக்கப்பட்டது.

சிலநாள் கழிந்த பிறகு மன்னனும், அமைச்சரும் நகர்சோதனைக்குச் சென்ற பொழுது, ராஜசகாயம் பிச்சை எடுப்பதையும், ராமசகாயம் பல்லக்கில் போவதையும் கண்டனர்.

திரும்பவும் இருவரும் அரண்மனைக்கு அழைக்கப்பட்டார்கள். "ராஜசகாயம் உன் தரித்திரம் இன்னும் தீரவில்லையா? ஒரு நல்ல பூசணிக்காய் உனக்குக் கொடுத்தேனே|"என்றார் மன்னர். ஆம் அரசே! அந்தப் பூசணிக்காயை சந்தையில் விற்று விட்டேன். ஒரு வெள்ளிக் காசு கிடைத்தது. அதை வைத்து எப்படி நான் பணக்காரனாக முடியும்" என்றான் ராஜசகாயம்.

பிறகு ராமசகாயத்தைக் கூப்பிட்டு, கொஞ்ச நாட்களுக்கு முன் நீ பிச்சை எடுத்தாயே, இப்போது எப்படிப் பணக்காரனானாய்? என்று கேட்க, "அரசே! எல்லாம் ராமபிரான் சகாயம் தான். என்னுடைய தந்தைக்கு திதி கொடுக்க வேண்டியிருந்தது. நானோ ஏழை. பிராமணருக்கு பூசணிக்கீற்றாவது கொடுக்க நினைத்து, சந்தையில் பூசணிக்காய் வாங்கினேன்.

வீட்டுக்குச் சென்று அதைக் கீறியபோது, அதன் உள்ளே நகைகளும், பவுன்களும், வைரங்களும் இருந்தன. ராமபிரான் சகாயத்தினால் நான் பணக்காரனானேன்" என்றான் ராமசகாயம். நான் ராஜசகாயத்திற்கு கொடுத்த பூசணிக்காய் ராமசகாயத்திற்கு கிடைத்திருக்கிறது! கடவுள் கிருபை இருந்தால்தான் உயர்வு பெற முடியும் என்பதை உணர்ந்தார் மன்னன் சுந்தரவதன்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!