அரங்கனைக் காண முடியாமல் குலசேகரர் தவிக்கிறார்! அரங்கனோ, அவரிடம் கருணை காண்பிக்க மறுக்கிறான்! கருணை காட்ட மறுக்கும் அரங்கனை விட்டு, மற்ற தெய்வங்களைப் பற்றும் சாமானியர்களைப் போல் அல்லாது, 'நீ என்னை எவ்வளவு சோதித்தாலும், வெறுத்து ஒதுக்கினாலும், அது நல்லதற்கே என்று நினைத்து, மீண்டும் மீண்டும் உன் திருவடிக்கே வருவேன்' என்று, திருவித்துவக் கோட்டு எம்பெருமானான உய்ய வந்த பெருமாளைப் பார்த்துச் சொல்கின்றார் குலசேகரர்:
வித்துவக் கோட்டு அம்மானே! கோபத்தால், தனது சிறு குழந்தையை வெறுத்துத் தள்ளினாலும், மீண்டும் தாயிடமே வந்து சேரும் குழந்தையைப் போல், உன்னிடமே மீண்டும் வருவேன் (தந்தை-தனயன் உறவு)!
என் கண்ணா! கணவன், எல்லோரும் வெறுக்கத் தக்க செயல்களைச் செய்தாலும், அவனைத் தவிர வேறு ஆண்மகனை ஏறெடுத்தும் பார்க்காத பதிவிரதையைப் போல், உன்னிடமே மீண்டும் வருவேன் (நாயகன்-நாயகி உறவு)!
அபய வரதா! அரசன் எத்தனை துயரம் செய்தாலும், அவன் நல்லது செய்வான் என்று காத்திருக்கும் (இந்தக் கால வழக்கப்படி, மீண்டும் ஓட்டுப் போடும்) குடிமகனைப் போல், உன்னிடமே மீண்டும் வருவேன் (உடல்-உயிர் உறவு - 'மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' - புறநானூறு)!
மருத்துவனாய் நின்ற மாமணி வண்ணா! மருத்துவர், கத்தியால் எவ்வளவு அறுத்தாலும் (சட்டை Pocket-ஐ எவ்வளவு சுரண்டினாலும்) மீண்டும் அவரிடமே செல்லும் நோயாளி போல், உன்னிடமே மீண்டும் வருவேன் (காப்பாறுபவன்-காப்பாற்றப் படும் பொருள் உறவு)!