போய் வா மகளே போய் வா

இன்றோடு மார்கழி அமுது ஒரு மாதத்திற்கும் மேலாக  என்னால் முடிந்த வரை  அளித்து,  

கோதை ஆண்டாளாகி ரங்கனோடு கல்யாணமும் ஆகி விட்டது. இனி அவள் கணவனோடு  கடவுளாக என்றும் வாழ்கிறாள். எல்லா பெருமாள்  கோயிலிலும் நமக்கருள்கிறாள். பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண்ணாக திவ்ய ப்ரபந்தமாக அன்றாடம்  நம்மால் பாடி வணங்கப்படுகிறாள். கொஞ்சம் பின்னோக்கி பார்ப்போம்.  

வில்லிபுத்தூரில் ஒரு அழகிய பெண்  குழந்தை பிறந்ததா? எங்கு? யாருக்கு? தெரியாது. அப்படியென்றால் எங்காவது இருந்ததா? எங்கு? எப்போது?  இந்த எல்லா கேள்விகளுக்கும் ஒரே விடை : ஆமாம் ஒரு தெய்வீக குழந்தை அப்போதே பிறந்ததாக தெய்வமே தன்னை  காட்டிக் கொண்டிருக்கலாம், அல்லது விஷ்ணு சித்தர் வீட்டில்  துளசி நந்தவனத்தில்  கிடைத்தது போல் காட்டிக் கொண்டிருக்கலாம். எப்போது ? ஏழாம் நூற்றாண்டில். என்றைக்கு? ஆடிப்பூரம் அன்று. என்ன குழந்தை, அழகிய ''மகாலக்ஷ்மி ',

அந்த குழந்தையை  கண்டெடுத்த விஷ்ணு சித்தர்  ''கோதை'' எனப் பெயர் சூட்டி பெண்ணாக வளர்த்தார். தன்னைப்போலவே அவளையும் ஒரு வைணவ சிகாமணியாக்கினார், இருவருமே ஆழ்வார்கள். அவளால் அவர் பெரியாழ்வார். அவள் பாசுரங்கள் எழுதி திருப்பாவை , நாச்சியார் திருமொழி, எல்லாமே உலக பிரசித்தமாகிவிட்டது.  சிறுவயதிலேயே மணம் முடிக்கும் அக்காலத்தில் ஆண்டாளுக்கு திருமணமானது, ரெண்டே பேர் இதுவரை சில வருஷங்கள் தனியாக வாழ்ந்து மகிழ்ந்திருந்து  இப்போது அவள் மணமாகி ''புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே'' ஆகிவிட்டதால்  விஷ்ணு சித்தர்  தனியாகி விட்டார்.

 ஸ்ரீரங்கத்தில் அவள் ரங்கனை அடைந்த பின்   வில்லிப்புத்தூருக்கு நடந்து வந்தார். தனது துளசி நந்தவன ஆஸ்ரமத்தில் நிற்கும்போது  எங்கும் வெறுமை தெரிகிறது, பிரிவு புரிகிறது. ஒரு  ''அப்பா''  வின்  மனநிலையை அறிவோமா?

ஆண்டாள்  கொடுத்து வைத்தவள். மனதிற்கிசைந்த கணவனை அடைந்து திருவரங்கனோடு ஒன்றி விட்டாள் . வேண்டியதை அடைந்துவிட்டாள் .
சிலை போல  எவ்வளவு நேரமாக விஷ்ணு சித்தர் நிற்கிறார்?  அவர் மனம்  ஸ்ரீரங்க திருமண வைபவம்  திவ்யமாக நிறைவேறியதில்  நிலைத்திருந்தது.   மனம்  அவள் பிரிந்ததை ஏற்றுக்கொள்கிறதா?

''எங்கே  என்கோதையைக் காணோம்? நந்தவனத்தை  சுற்றி முற்றிலும் பார்த்தார். ஒருவேளை அங்கே ஏதாவது பூச்செடியோடு கோதை பேசிக் கொண்டிருப்பாளோ?  ஸ்ரீரங்கத்தில் விட்டுவிட்டு வந்த அவளை  மனம்  வில்லிபுத்தூரில் தேடியது.    வெறிச்சோடி இருந்த  வில்லிபுத்தூர்  ஆஸ்ரமத்தின்  மௌனம், தனிமை அவரைத்  தின்றது.  தனக்குத்தானே என்ன பேசுகிறார்:  கேட்போமா?

''எனக்கு அன்னம் ஆகாரம் எல்லாம் மறந்து விட்டதா வெறுத்து விட்டதா? அவளில்லையே! இனி அன்னம் எதற்கு, நீர் எதற்கு , வீடு வாசல் இந்த நந்தவனம் ஏன், என் உடலே எதற்கு? எல்லாம் அவளாகவே இருந்து, திடீரென்று அவளே இல்லாமல் போன பின் நானே எதற்கு?. என் கண்களில் வழியும் நீர் ஆனந்தக் கண்ணீரா? இல்லை அளக்க முடியாத சோகக்  கண்ணீரா? தெரியவில்லையே.  மனம் பித்துப்  பிடித்து விட்டதே!!.

இதோ! இந்த துளசி வனத்தில் தானே, ஒரு ஆடிப் பூரம் அன்று, விடியற் காலை என் ரங்கனைப்  பாடிக் கொண்டே புஷ்பம் பறிக்க வந்தபோது அந்தச் சின்ன   குவா குவாக்  குரல் கேட்டேன். ஆச்சர்யமாக, அவளை ஒரு தெய்வ பிம்பமாக, தாயாரின் சிறு வடிவாகப்பார்த்து இதோ இந்த கூடத்தில் இட்டு பால் வார்த்தேன். இங்கு தானே ரங்கன் முன்னால் அமர்ந்து அவளை மடியில் போட்டுகொண்டு அனைவர் மத்தியிலும் அவளுக்கு இரவெல்லாம் யோசித்து பொருத்தமாக தேர்ந்தெடுத்த “கோதை ”(பூமியில் கிடைத்தவள்) என்ற பெயரிட்டேன். இங்கு தானே அவள் எப்போதும் என்னோ டு அமர்ந்து பேசுவாள். ரங்கன் கதையெல்லாம் திரும்ப திரும்ப கேட்பாள். வாய் ஓயாமல் நானும் சொல்லி சொல்லி மகிழ்வேனே.எப்போதும் இந்த பூக்கூடையை பார்த்து “மாலை ரெடியா?” என்று கேட்பாளே. ஏன் எதற்கு என்று ரொம்ப காலம் புரியாமலே இருந்து விட்டேனே!. தினமும் நான்  கட்டி வைத்த மாலையைத்  தன் தோளில் சூட்டிக்கொண்டு இங்கே பின்னால் இருக்கும் கிணற்றில் நீரில் தன் அழகை பார்த்து “ரங்கா, நான் உனக்கு ஏற்றவளா? உனக்கு பிடிக்கிறதா என்னை” என்று கேட்பாளாமே!.

இறைவனின் மனதில் இடம் பிடித்த அவளை ஒன்றும் அறியாதவனான நான் கோபித்ததே மாபெரும் தவறு. அவள் ''சூடிக்கொடுத்த''   மாலை தான் வேண்டும் என்று ரங்கனே அல்லவா உணர்த்தினான் எனக்கு.

அவள் அவனுக்காகவே பிறந்தவள். என்னிடம் வளர்வதற்காகவே வந்தவள். நான் பாக்யவானே. அப்பறம் தானே இதெல்லாம் அந்த அழகிய மணவாளனே எனக்கு புரிய வைத்தான்!.

ஆஹா, என்ன தேனினும் இனிய  திவ்யமான  குரல் அவளுக்கு. எவ்வளவு சூடிகை யான பெண். எவ்வளவு அறிவு. என்னமாய் தமிழ் பாசுரங்கள் எழுதலானாள். என் பெண் சாதாரண பிறவி அல்ல என்று வாய்க்கு வாய் சொல்வேனே. அவள் பாசுரங்ளை நானே எத்தனையோ முறை பாடிப்பாடி  மகிழ்ந்தேனே .  எல்லாமே அவள் என்னை விட்டு பிரிவதற்காகவேவா?”.

“ச்சே” என்ன எண்ணம் இது? . அவள் எங்கு என்னை விட்டு பிரிந்தாள்?. நான் அல்லவோ மேள தாளங்களோடு அரசன் அனுப்பிய பல்லக்கிலே சகல மாலை மரியாதைகளோடு மகாலக்ஷ்மியாக அவளை சீவிச்  சிங்காரித்து சீர் வரிசையோடு மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பினேன். கூடவே போனவனும் கூட.! 

ஆஹா,  என்ன அழகி என் மகள்.  எத்தனை மகிழ்ச்சி முகத்தில். “இன்னும் எத்தனை தூரம் இருக்கிறது, , எவ்வளவு நேரம்  ஆகும்  ஸ்ரீ ரங்கம்  போக '' என்று கேட்டு கொண்டே வந்தாளே. ஸ்ரீரங்கம் போனோம். அரங்கன் ஆலயம் எதிரே தெரிந்தது.

“என்ன ஆச்சர்யம், என்ன அதிசயம்!    என்னைக் கிள்ளி பார்த்துக் கொண்டும் கூட என்னால் நம்ப முடிய வில்லையே”.

'இதோ, வந்து விட்டது, என் ரங்கன் எனக்காக காத்திருக்கும் இடம்!   இதோ வந்துவிட்டேன் ரங்கா, ........ ரங்கா, எனக்காக உன்னைக் காக்க வைத்து விட்டேனே!. சீக்கிரம், பல்லக்கை இறக்குங்கள்”

அவசர அவசரமாக பல்லக்கை இறக்கச் சொல்லித்  தாவிக் குதித்து ரங்கனின் சந்நிதிக்குள் ஓடினாள். எல்லாரும் ''ரங்கா ரங்கா'' என்று உணர்ச்சி பொங்க கூவினோம். என் கோதை, எனை  ''ஆண்டாள்'' , எங்களை யெல்லாம் பார்க்கக் கூட நேரமில்லாமல் உள்ளே ஓடிச்  சென்றாள். அரங்கனை ஆரத்தழுவினாள். பிறகு? பிறகு .....? ரங்கனோடு கலந்தாள் ..... எங்கே அவள்......மறைந்தாள்!!!

இறைவனோடு எங்கள் ''இறைவி''  ஒன்றாக கலந்தது துக்கமா?? நிச்சயம் இல்லைதான்! ஆனால், ஆனால்,....
அவளை இனி என் கோதையாக பார்க்க முடியவில்லையே!”என் செய்வேன்?????

மிகச்  சோகமாக  தனிமரமாக நிற்கும்  விஷ்ணு சித்தரின்,  ஒரு   ஆசைத்  தகப்பனின் பாசக் குமுறல் தான் இது!. 

இனி நாம்  ஆண்டாளை பெருமாள் கோவில்களில் ஆண்டவனோடு சேர்த்து,  பார்த்து வணங்குவோம்.  

30  பாசுரங்களை அடிப்படையாகக் கொண்ட கதை வடிவில் இந்த நாவல் அணுகுமுறையை நீங்கள் ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஆண்டாள் திருவடிகளே சரணம் 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!