இறைவன் ஏன் பூமியில் வந்து அவதாரங்கள் செய்கிறார்?

ஒரு மன்னர் தனது மந்திரியோடும் இளவரசனோடும் ஒரு படகில் பயணித்துக் கொண்டிருந்தார். மன்னரின் பரிவாரங்கள் எல்லோரும் இரண்டு படகுகளில் மன்னரைப் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது மன்னர் மந்திரியிடம், “அமைச்சரே! இறைவன் ஏன் பூமியில் வந்து அவதாரங்கள் செய்கிறார்?” என்று கேட்டார். அதற்கு மந்திரி, 

“பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் |
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே || 

என்று.இறைவனே கீதையில் கூறியுள்ளாரே! நல்லோர்களைக் காப்பதற்காகவும் அசுரசக்திகளை அழிப்பதற்காக வும் தர்மத்தை நிலை நாட்டுவதற்காகவும் இறைவன் யுகந்தோறும் அவதரிக்கிறார்!” என்று விடையளித்தார்.

ஆனால் மன்னரோ, “இல்லை அமைச்சரே! இறைவன் நினைத்தால், வைகுண்டத்தில் இருந்தபடியே தனது சக்கராயுதத்தை அனுப்பி,. ராவணன், கம்சன், இரணியன் உள்ளிட்ட அசுர சக்திகளின் தலைகளைக் கொய்து விடலாமே! அல்லது அனைத்துலகுக்கும் சக்கரவர்த்தியான அவர், கருடன், ஆதிசேஷன் போன்ற தனது பணியாட்களுள் ஒருவரைப் பூமிக்கு அனுப்பி, அவர்களின் மூலம் இந்த அசுர சக்திகளை அழிக்கலாமே! இறைவனே ஏன் பூமிக்கு இறங்கி வர வேண்டும்?” என்று கேட்டார். இவ்வாறு மன்னர் பேசிக் கொண்டிருந்த போதே திடீரென்று படகு ஆட்டம் கண்டது. படகின் விளிம்பில் அமர்ந்திருந்த இளவரசன் ஆற்றில் தவறி விழுந்து விட்டான். 

“ஐயோ! என் மகனே!” என்று துடித்தார் மன்னர்.. பின்னால் வந்த படகிலிருந்த மன்னரின் காவலாளிகள் எல்லோரும் இளவரசனை மீட்கத் தண்ணீரில் குதித்தார்கள். ஆனால் அவர்களுக்கு முன், மன்னர் தானே ஆற்றில் குதித்துத் தன் மகனை மீட்டுக் கொண்டு வந்து படகில் சேர்த்தார். இதை எல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மந்திரி, “மன்னரே! தங்களது கேள்விக்கான பதில் கிடைத்துவிட்டது போலிருக்கிறதே!” என்று கேட்டார்.
“என்ன சொல்கிறீர் அமைச்சரே?” என்று கேட்டார் மன்னர். “ஆம் மன்னா! உங்களது மகன் ஆற்றில் விழுந்தபோது, நீங்கள் ஏன் உங்களது காவலாளிகளை ஏவி உங்கள் மகனை மீட்காமல் நீங்களே ஆற்றில் குதித்தீர்கள்?” என்று கேட்டார் மந்திரி. அதற்கு மன்னர், “என் காவலாளிகள் மூலம் என் மகனைக் காத்திருந்தால், இந்நாட்டுக்கு நல்ல சக்கரவர்த்தி என்று நான் பெயர் எடுக்கலாமே ஒழிய, என் மகனுக்கு நல்ல தந்தையாக ஆகமாட்டேன். நானே ஆற்றில் குதித்து என் மகனை மீட்டால் தானே தந்தை என்ற ஸ்தானத்துக்கே மரியாதை! இது உங்களுக்குப் புரியவில்லையா?” என்று கேட்டார்.

அதற்கு மந்திரி, “அதுபோலத் தான் இறைவனும்!! பூமியில் அடியார்கள் துன்பப்படும் போது, இறைவன் மேலே வைகுண்டத்தில் இருந்து கொண்டு, தனது ஏவலாட்களை அனுப்பி அந்த அடியார்களைக் காத்தால், அது பெரிய சக்கரவர்த்திக்குரிய லட்சணமாக இருக்குமே ஒழிய, கருணையே வடிவெடுத்த இறைவனுக்குரிய லட்சணமாக இருக்காது..."

"இளவரசருக்கு ஆபத்து என்றவுடன், நீங்கள் ஒரு சக்கரவர்த்தி என்பதையும் மறந்து எப்படி ஆற்றில் குதித்து இளவரசனை மேலே கொண்டு வந்தீர்களோ, அது போல் இறைவனும் பிறவி பெருங்கடலில் அழுந்தித் துயரப்படும் மக்களை, அதிலிருந்து மேலே கொண்டுவரும் நோக்கில் தானே கீழே இறங்கி வருகிறார்!” என்று விடையளித்தார்.

இக் கருத்தையே மணவாள மாமுனிகள், ஆர்த்திப் பிரபந்தம் என்னும் நூலில்,
“கூபத்தில் வீழும் குழவியுடன் குதித்து அவ் ஆபத்தை நீக்கும் அந்த அன்னை போல்” என்று பாடியுள்ளார்.

இவ்வாறு நம் ஒவ்வொருவரையும் மேலே உயர்த்துவதற்காக இறைவன் செய்த அவதாரங்களுள் முதன்மையானது மத்ஸ்யாவதாரம்.. பிரளயக் கடலில் காணாமல் போன வேதங்களை மீட்டதோடு மட்டுமின்றி, பிறவிக் கடலில் சிக்கித் தவிக்கும் நம்மையும் மீட்டு மேலே உயர்த்திட எண்ணி, வேத ரகசியங்களை விளக்கும் மத்ஸ்யபுராணத்தை உபதேசித்தார் மத்ஸ்யமூர்த்தி.

‘அக்ரம்’ என்றசொல் முதன்மையான ஸ்தானமாகிய வைகுண்டத்தைக் குறிக்கும். ‘அக்ரணீ:’ என்றால் அந்த வைகுண்டத்தை நோக்கி நம்மை முன்னேற்றி அழைத்துச் செல்பவர் என்று பொருள். அனைத்துயிர்களும் முன்னேறி மேலே வர வேண்டும் என்ற நோக்கில் கீழே இறங்கி வந்தபடியால், மத்ஸ்யமூர்த்தி ‘அக்ரணீ:’ என்றழைக்கப்படுகிறார்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!