1. ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமாளின் பார்வை, அடியார்கள் அனைவரையும் குளிரச் செய்யும் ஆற்றல் கொண்டதாக எண்ணற்ற புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2. ஹயக்ரீவ ஸ்தோத்திரம் 33 ஸ்துதிகள் கொண்டது. இந்த 33 ஸ்துதிகளையும் பொருள் உணர்ந்து பாராயணம் செய்தால், அவர்கள் 64 கலைகளிலும் தேர்ச்சி பெற முடியும். 

3. ஹயக்ரீவர் எழுப்பும் "ஹலஹல'' என்ற கனைப்பு சத்தம் எல்லை இல்லாத வேதாந்த உண்மைகளை உணர்த்துவதாக சொல்கிறார்கள்.

4. ஹயக்ரீவர் மூல மந்திரத்தை நாம் வாய்விட்டு சத்தமாக சொன்னால், அதை ஹயக்ரீவர் நம் அருகில் நேரில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவார்.

5. ஸ்ரீ ஹயக்ரீவரை தினமும் வழிபடுபவர்கள் எந்த கலைகளிலும் தெளிவான முடிவை எடுக்கும் ஆற்றலை கைவரப் பெறுவார்கள்.

6. பக்தர்கள் நல்வழிப் பெறுவதையே கடமையாகக் கொண்டுள்ள ஸ்ரீஹயக்ரீவர் ஞான வடிவமாகவும், கருணைக் கடலாகவும் உள்ளார்.

7 உலகம் புகழும் படியான நூல்களை இயற்றிய விஷ்ணுவின் அம்சமான வியாச முனிவருக்கு, அதே விஷ்ணுவின் அம்சமான ஸ்ரீஹயக்ரீவர் வழங்கிய அருளே காரணமாக கூறப்படுகிறது.

8. தேவர்களுக்கு எல்லாம் குருவாக இருப்பவர் பிரகஸ்பதி. அந்த பிரகஸ்பதி தனக்கு ஏற்படும் சந்தேகங்களை ஹயக்ரீவரிடம் கேட்டு தெளிவு பெற்றார்.

9. ஸ்ரீ ஹயக்ரீவர் ஓம் எனும் ப்ரணவ சொரூபமாகவும், அதன் அட்சரங்களாகவும் இருப்பதாக கருதப்படுகிறது.

10. பிரபஞ்சத்தின் முதலும் முடிவுமாக ஸ்ரீ ஹயக்ரீவர் இருப்பதாக வேதங்கள் போற்றிப் புகழ்கின்றன.

11. ஸ்ரீ ஹயக்ரீவரை பற்றி லேசாக சிந்தித்தாலே போதும், அது நம் மனதின் தாபத்தை போக்கி குளிர்ச்சியை ஏற்படுத்தி விடும் என்கிறார்கள்.

12. புண்ணியம் செய்தவர் களால் மட்டுமே ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானை தினமும் பூஜிக்க முடியும்.

13. ஹயக்ரீவப் பெருமானே கதி என்று கிடக்கும் பக்தர்களுக்கு நிச்சயம் மோட்சம் கிடைக்கும் என்கிறார்கள்.

14. ஹயக்ரீவரின் பாத கமலங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், அது பிரம்மன் நமக்கு எழுதிய தலை யெழுத்தையே மாற்றி அமைத்து விடும்.

15. ஸ்ரீ ஹயக்ரீவரை தினமும் புஷ்பத்தால் வணங்கினால் நம்மிடம் உள்ள அஞ்ஞான இருள் விலகும் என்பது நம்பிக்கை.

16. ஸ்ரீ ஹயக்ரீவர் தன் கையில் காட்டும் ஞானமுத் திரையின் மகிமை அளவிடற்கரியது.

17. ஸ்ரீ ஹயக்ரீவரை மனம் உருக வழிபாடு செய்தால் அது பல புண்ணிய தலங்களுக்கு சென்று தரிசனம் செய்த பலனைத் தரும்.

18. ஸ்ரீ ஹயக்ரீவ வழிபாடு மெய்ப் பொருளை உணரச் செய்து நம் மனதில் உள்ள மாசுவை விரட்டி விடும் ஆற்றல் கொண்டது.

19. ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத் திரத்தைப் பக்தியுடன் பாராயணம் செய்தால் கவி பாடும் வல்லமை உண்டாகும்.

20. ஹயக்ரீவர் கவசம் அதிக ஆற்றல் கொண்டது. இந்த கவசத்தை நம் உடம்பு பகுதிகளை தொட்டுக் கொண்டு படித்தால், அவர்களுக்கு எந்த துன்பமும் வராது.

21. ஸ்ரீ ஹயக்ரீவர் கவசத்தை தினமும் 3 தடவை படிப்பவர்கள், பிரகஸ்பதிக்கு நிகரான அறிவைப் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

22. ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்துதிகளில் ஸ்ரீமத் பீடாதிபதி வாதிராஜ சுவாமிகள் இயற்றிய ஸ்துதியே அற்புதமான புகழ் பெற்றது.

23. ஸ்ரீ ஹயக்ரீவர் வழிபாடு கல்வி, ஞானம் மட்டுமின்றி செல்வமும் தரக்கூடியது.

24. ஸ்ரீ ஹயக்ரீவரை தினமும் வழிபட்டால் பெரும் சபைகளில் சாதூர்யமாக பேசக்கூடிய தன்மை கிடைக்கும்.

25. ஹயக்ரீவர் பக்தர்களை எதிரிகளால் வெல்ல இயலாது.

26. ஆன்மீக பேச்சாளர்கள், ஜோதிடர்கள், கவிஞர்கள், வக்கீல்கள் போன்றவர்களுக்கு ஸ்ரீ ஹயக்ரீவரின் அருள் அவசியம் தேவை.

27. பிகல்வி கடவுள்' என்ற சிறப்பை பெற்றவர் ஹயக்ரீவர்.

28. பிரம்மனை படைத்து அவருக்கு வேதங்களை உபதேசித்தவரே ஹயக்ரீவர்தான் என்று வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

29. உபநிஷத்தில் ஹயக்ரீவர் பற்றியே அதிகம் சொல்லப்பட்டுள்ளது.

30. சரஸ்வதிக்கே குரு என்ற சிறப்பு ஹயக்ரீவருக்கு உண்டு

31 வைணவ ஆச்சார்யார்களில் ஒருவரும், சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவருமான வேதாந்த தேசிகர், ஹயக்ரீவர் அருளால் சகல கலைகளிலும் சிறந்து விளங்கினார்.

32. ஹயக்ரீவர், எப்போதும் பளீர் வெள்ளை நிறத்தில் இருப்பார்.

33. மகாபாரதம், தேவிபாகவதம், ஹயக்ரீவ கல்பம் போன்ற இதிகாச புராண நூல்கள் ஹயக்ரீவரின் பெருமைகளை பேசுகின்றன.

34. ஹனுமன் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு வந்தபோது ஹயக்ரீவரை வணங்கினார் என்று வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.

35. காஞ்சீபுரத்தில் தவம் இருந்த அகத்தியரை பாராட்ட அவர் முன் ஹயக்ரீவர் தோன்றினார் என்று பிரம்மாண்ட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

36. ஸ்வாமி தேசிகருக்கு, ஹயக்ரீவர் எந்த கோலத்தில் காட்சி கொடுத்தாரோ, அதே கோலத்தில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவஹீந்திரபுரத்தில் காட்சி அளிக்கிறார்.

37. புத்த மதத்தில் 108 வகையான ஹயக்ரீவர்கள் இருப்பதாகவும் அவர்கள் தோல் நோய்களை தீர்ப்பவராகவும் நம்புகிறார்கள்.

இவருடைய முதல் சீடரான அகத்தியர் வெகுநாள்களாகத் தனக்கு ஏன் லலிதா சகஸ்ர நாமத்தை ஹயக்ரீவர் உபதேசிக்கவில்லை என்பதை உணர்ந்து ஒருநாள் கண்களில் கண்ணீர் வழிந்தோடக் கைகட்டி வாய்பொத்தி பவ்யத்துடன், " எனக்கு தாங்கள் இதுவரை லலிதா சகஸ்ர நாமத்தை உபதேசம் செய்யவில்லையோ'' என்று கேட்கிறார். ஸ்வாமி புன்னகையுடன், " இதை நீ கேட்க வேண்டும் என்பதே உன் மனைவி லோபாமுத்திரையின் விருப்பம். அவளது பக்தியினால்தான் இந்த எண்ணமே உனக்குத் தோன்றியுள்ளது. லலிதா சகஸ்ர நாமத்தை யாரும் கேட்டால் மட்டும்தான் சொல்ல வேண்டுமே தவிர, கேட்காதவர்கள், உதாசீனப் படுத்துபவர்கள் காதில் கூட இந்த நாமா விழக்கூடாது!'' என்று உபதேசம் செய்கிறார் ஹயக்ரீவர்.

ஓம் தம் வாகீஸ்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ஸ ப்ரசோதயாத்

- என்பது அவரது காயத்ரி மந்திரமாகும்.

 ஹயக்ரீவருக்கு கோவில்கள்  

நாடெங்கும் ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமாளுக்கு சொற்ப இடங்களில் மட்டுமே கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றில் சில: ஸ்ரீரங்கம் ஆலயத்தில் பெரிய பிராட்டியின் சந்நிதிக்கு எதிரே தேசிகர் சந்நிதியிலும் உத்தர வீதியில் உள்ள தேசிகர் சந்நிதியிலும் ஹயக்ரீவர் மூர்த்தி உள்ளது.

திண்டுக்கல்லில் உள்ள தாடிக்கொம்பு சௌந்திரராஜப் பெருமாள் கோயிலில் ஹயக்ரீவரும் சரஸ்வதியும் அடுத்தடுத்து அமைந்து அருள்பாலிக்கின்றனர்.

சென்னை காட்டாங்கொளத்தூரை அடுத்துள்ள செட்டிபுண்ணியம் என்ற கிராமத்தில் இருக்கும் தேவநாத சுவாமி கோயிலில் ஹயக்ரீவர் அமைந்துள்ளார். 

கடலூருக்குப் பக்கத்தில் உள்ள திருவஹீந்திரபுரத்தில் ஹயக்ரீவர் எழுந்தருளியுள்ளார். 

சென்னை நங்கநல்லூரில் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோயில் கொண்டுள்ளார்.

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் புகழ் பெற்ற லட்சுமி ஹயக்ரீவர் ஆலயம் உள்ளது

திருநெல்வேலி திருவேங்கடநாதபுரம் வரதராஜா பெருமாள் கோவிலில் ஸ்ரீலெக்ஷ்மி ஹயக்ரீவர் என்று தனி சன்னிதி அமைந்துள்ளது

தேர்வு காலங்களில் திருநெல்வேலி திருவேங்கடநாதபுரம் வரதராஜா பெருமாள் கோவிலில் ஸ்ரீலெக்ஷ்மி ஹயக்ரீவர் ஆலத்தில் தேர்வுக்கு பயன்படுத்து எழுதுபொருள், ஏலக்காய், கற்கண்டு, துளசி இலை ஆகியவற்றை வைத்து ஆழ்மனதுடன் வணங்கி எடுத்து சென்று தேர்வு எழுதினால் எதிர்பாத்த வெற்றி  நிச்சயம் கிட்டும் என்பது அனுபவபூர்வமான உண்மை

இங்கு வர இயலாதவர்கள் தங்கள் குழந்தைகளின் ஜாதகத்தை அனுப்பி வைத்து அர்ச்சனை செய்து ஸ்ரீலஷ்மி ஹயக்கிரீவர் முன் வைத்து பூஜை செய்த தேர்வுக்கு பயன்படுத்து எழுதுபொருள், ஏலக்காய், கற்கண்டு, துளசி இலை ஆகியவற்றை பிரசாதமாக பெற்றுக் கொள்ளலாம்.

தேர்வு காலங்கள் மற்றும் ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தன்று ஹயக்ரீவர் ஜெயந்தி கொண்டாடப்படும் நாளில் இவற்றை செல்வது மிகச் சிறந்த பலனை தரும்.