ஸ்ரீமத் பாகவதத்தின் எளிய வடிவமென பாகவதோத்தமர்களால் கொண்டாடப்படும் ஸ்ரீமந்நாராயணீயம், 1036 வடமொழி ஸ்லோகங்களை உள்ளடக்கியது!..குறைந்தது பத்து ஸ்லோகங்களை உள்ளடக்கிய பகுப்பு, 'தசகம்' எனப்படும். இம்மாதிரி, மொத்தம் நூறு தசகங்கள்.
இதை இயற்றியவர், மேல்புத்தூர், ஸ்ரீநாராயண பட்டத்திரி. வாதநோயால் பீடிக்கப்பட்ட அவர், குருவாயூரில், ஸ்ரீகிருஷ்ணன் திருமுன் பாடியருளியதே ஸ்ரீமந்நாராயணீயம். இதை அவர் நூறு நாட்களில் பாடினார். பாடி முடிக்கும் போது குருவாயூரப்பன் கருணையினால் நோயிலிருந்து விடுபட்டார்.
இந்நூலின் பெயர்க்காரணத்தை, ஸ்ரீநாராயண பட்டத்திரியின் திருவாக்கினாலேயே கேட்கலாம். 'வேதங்களில் பிறந்து, இதிஹாஸ புராணங்களில் உரைக்கப்பட்டிருக்கும் (உமது) லீலாவதாரங்களின் துதிகளால் நன்கு வளர்ந்த இந்த ஸ்தோத்திரம், நாராயணனைப் பற்றியதாகையாலும், நாராயணன்(பட்டத்திரி) எழுதியதாலும், நாராயணீயம் என்னும் பெயருடையதாகி, இவ்வ்வுலகத்திலுள்ள பக்தர்களுக்கு ஆயுளையும் ஆரோக்கியத்தையும் சௌக்கியத்தையும் அருளட்டும்!!!" (நூறாவது தசகம்..கேசாதிபாதாந்த வர்ணனை)!.
இந்நூலின் முதல் தசகமே 'பகவத் மகிமை' எனத் துவங்குகிறது.. பகவத் ரூப வர்ணனை, பக்தன் எப்படி இருக்கவேண்டும் என்று தொடர்ந்து, சிருஷ்டி குறித்த விவரணைகள், பரமாத்மாவின் வெவ்வேறு அவதார வைபவங்கள் என விரிகிறது நூல்..பெரும்பாலும், . நாம் அனைவரும் அறிந்த தசாவதாரங்களோடு, அதிகம் அறிந்தறியாத அவதாரங்களின் மகிமைகளையும் பரக்கப் பேசுகிறது இந்நூல்..
பூர்ணாவதாரமான 'ஸ்ரீக்ருஷ்ணாவதார வைபவ'மே இந்நூலின் மணிமகுடம் எனலாம்.. பக்தியின் ஆழத்தில் மூழ்கித் திளைத்த பட்டத்திரி, நாமும் உய்ய அளித்த நல்முத்துக்கள் அவை!.. எண்பத்து எட்டாவது தசகத்தில், பரமாத்மாவின் லீலைகள் சிலவற்றை மட்டும் உரைத்து ஸ்ரீக்ருஷ்ண கதாம்ருதத்தை நிறைவித்து விட்டு, பரமாத்மாவின் பரத்வத்தை நிலைநாட்டும் ஸ்லோகங்களை அருளுகிறார் நாராயண பட்டத்திரி. குருவின் மகிமை, தியான யோகம், பரப்பிரம்ம தத்வம் என்று தொடர்ந்து, கேசாதிபாதாந்த வர்ணனையில் நூலை நிறைவு செய்கிறார்.
ஸ்ரீ குருவாயூரப்பனின் மகிமைகளை எடுத்துரைக்கும் ‘ஸ்ரீமத் நாராயணீயம்’ பாடிய நாராயண பட்டதிரியை நாம் அறிவோம். நாராயண பட்டதிரியுடன் ஸ்ரீ குருவாயூரப்பன் நிகழ்த்திய உரையாடல் மிகவும் சுவையானது, ரசிக்கத்தக்கது.
தம் முன் தோன்றிய ஸ்ரீகுருவாயூரப்பனிடம், பகவானே… நீங்கள் மிகவும் விரும்பும் நிவேதனம் என்ன?” என்று பட்டதிரி கேட்கிறார்.
நெய்ப் பாயசம்” – இது குருவாயூரப்பன்.
ஒருவேளை நெய்ப் பாயசம் செய்ய எனக்கு வசதி இல்லை என்றால், நான் என்ன செய்வது?”
‘‘அவலும் வெல்லமும் போதுமே!”
‘‘சரி பகவானே… அவலும் வெல்லமும் நைவேத்தியம் செய்து வைக்க எனக்கு வசதி இல்லை என்றால்?”
‘‘வெண்ணெய், வாழைப்பழம், பால், தயிர் – இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து வழிபடு. ஏற்றுக் கொள்கிறேன்.”
‘‘மன்னிக்க வேண்டும் பகவானே… தற்போது தாங்கள் சொன்ன நான்கும் என்னிடம் இல்லை என்றால்?”
‘‘துளசி இலைகள் அல்லது ஒரு உத்தரணி தீர்த்தமே எமக்குத் திருப்தி தரும்!”
‘‘அதுவும் என்னிடம் இல்லை என்றால்?” – பட்டதிரியின் குரல் தழைந்து போகிறது.
‘‘எனக்கு நைவேத்தியம் செய்து வைக்க ஒன்றும் இல்லையே என்று வருத்தப்பட்டு கவலையுடன் நீ அழுவாய் அல்லவா… அப்போது உன் கண்களில் இருந்து கசியும் இரண்டு சொட்டுக் கண்ணீரே எனக்குப் போதும்” என்று பகவான் சொன்னதும், ‘ஓ’வென்று கதறி அழுதே விட்டார் பட்டதிரி.
தெய்வங்கள், தன் பக்தர்களிடம் எதையும் எதிர் பார்ப்பதில்லை. எதிர்பார்ப்பது எல்லாம் – உண்மையான பக்தி ஒன்றைத்தான்!
"ஸ்ரீ குருவாயூரப்பன் திருவடிகளே சரணம் "