ஒரு துறவியின் போதனை

ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒரே ஒரு மகன் இருந்தான்.

அவன் ஊதாரித்தனமாக தனது தந்தை இதுவரை சேர்த்து வைத்த செல்வத்தை எல்லாம் வீணாக செலவழித்து வந்தான். அவரின் அறிவுரைகளையும் விளையாட்டாகவே தட்டிக்கழித்தான்.

அதனால் மிகவும் கவலையில் இருந்த செல்வந்தர், அந்த ஊருக்கு வந்த ஒரு துறவியிடம் தமது கவலையை கூறினார்.

அதற்கு அந்த துறவி “உங்கள் மகனை இங்கு அனுப்பி வையுங்கள்” என்று கூறினார்.

செல்வந்தர் தன் மகனிடம் சென்று, “நமது ஊருக்கு வந்திருக்கும் துறவி மிகவும் சக்தி வாய்ந்தவர். அவரை பார்த்து ஆசி வாங்கி வா” என்று அனுப்பி வைத்தார்.

அவனும் வேண்டா வெறுப்பாக சரி என்று ஒப்புக் கொண்டு துறவியை பார்க்க சென்றான்.

துறவியை சந்தித்து ‘என் தந்தை உங்களைக் காண அனுப்பினார்’ என்று கூறினான்.

துறவியும் “நல்லது என் பின்னால் அந்த மலைக்கு வா, உனக்கு ஒரு உபதேசம் செய்ய சொல்லி இருக்கிறார் உன் தந்தை” என்று அழைத்தார்.

அவனும் துறவியை பின் தொடர்ந்து மலை மீது ஏறத் தயாரானான். அப்போது துறவி ஒரு சிறிய பாறாங்கல்லை சுமந்து வருமாறு கூறினார்.

அவனும் சரி என்று அந்த கல்லை தூக்கிக் கொண்டு கஷ்டப் பட்டு மலை மீது ஏறினான். மேலே வந்தவுடன் அந்த கல்லை உருட்டிவிடும் படி துறவி கூறினார்.

அவனுக்குக் கடுமையான கோபம் வந்தது. “என்ன விளையாடுகிறீர்களா.?” என்று கேட்டான்.

அதற்கு துறவி, “இல்லை மகனே.. எதனால் உனக்கு இந்த கோபம் வந்தது” என்று கேட்டார்.

அவன், “எவ்வளவோ கஷ்டப்பட்டு கொண்டு வந்த என் உழைப்பை ஒரு நொடியில் வீணடிக்க சொல்கிறீர்கள். பிறகு கோபம் வராதா” என்று கேட்டான்,

அதற்கு துறவி, “உன் தந்தை சேர்த்த செல்வமும், அவருக்கு இருக்கும் நன்மதிப்பும் இப்படித்தான் அவர் கஷ்டப்பட்டு சேர்த்தது. ஆனால் நீ அதையெல்லாம் பாழ் செய்வது எந்த விதத்தில் நியாயம்” என்று கேட்டார்.

அவன் வெட்கித் தலைகுனிந்தவனாய் துறவியிடம் நன்றி சொல்லி விட்டு, தனது தந்தையிடம் சென்று மன்னிப்பு கேட்டான்.

இந்தக் கதை போலத்தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முன்னோர்கள், சித்தர்கள் வகுத்த நெறி முறைகளை பின்பற்றாமல் ஏனோ தானோ என்று வாழ்கிறோம். அவர்கள் நமக்கு விட்டுச் சென்ற விலையில்லாத தத்துவங்களையும், அற நெறிகளையும், போதனைகளையும் மறந்து, கடவுளை போற்றாது முடிவில் இறந்தும் போகிறோம்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!