மார்கழி 27-வது நாள் கூடாரவல்லி என்று சிறப்பித்துக் கூறப்படும் நாள். இந்த நாளில் குறிப்பாக வைஷ்ணவர்கள், சிறப்பாக நெய் வடிய பாலில் செய்த 'சர்க்கரைப் பொங்கல்' எனும் அக்காரவடிசல் செய்து வழிபடுவர். ஆண்டாள் பிறந்த ஸ்ரீ வில்லிபுத்தூர், ரங்கமன்னார் எனும் அரங்கனின் ஸ்ரீரங்கம், ஸ்ரீ பெரும்புதூர் போன்ற ஊரில் பிறந்தவர்கள் வைணவர்கள் அல்லாத சிலரும் கூட இதை மரபு வழியாக பின்பற்றி வருகிறார்கள் காரணம், கோதைநாச்சியார் பாடிய இந்த 27-வது திருப்பாவைப் பாசுரம்தான்.
"மார்கழி மாதத்தின் 27வது நாள் கூடாரவல்லி வைபவம் நடைபெறும். பாவை நோன்பு இருந்த ஆண்டாள், தனக்கும் ரங்கநாதருக்கும் திருமணம் செய்துவைத்தால், அக்காரவடிசலும் வெண்ணெயும் சமர்ப்பிப்பதாக கள்ளழகர் பெருமாளிடம் வேண்டிக் கொள்கிறாள்.
திருவரங்கத்தில் ஆண்டாள் அரங்கனுடன் ஐக்கியமான பிறகு, கள்ளழகருக்கு அக்காரவடிசலும் வெண்ணெயும் சமர்ப்பிக்கமுடியாமல் போனது. பின்னாளில் வந்த எம்பெருமானாராகிய ராமாநுஜர் இதுபற்றிக் கேள்விப்பட்டு, ஆண்டாள் வேண்டிக்கொண்டபடியே அக்காரவடிசலும் வெண்ணெயும் கள்ளழகருக்குச் சமர்ப்பித்தார். அதை நினைவுகூரும் வகையில் கூடாரவல்லி வைபவத்தின்போது, 120 லிட்டர் பால், 250 கி.கிராம் அரிசி, 15 கிலோ கல்கண்டு, கிலோ கணக்கில் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை என எல்லாம் சேர்த்துப் பல மணி நேரம் சுண்டக் காய்ச்சித் தயாரிக்கும் அக்காரவடிசலும் வெண்ணெயும் நைவேத்தியம் செய்யப்படுகிறது.
ஆண்டாள் அருளிச் செய்த முப்பது பாடல்கள் கொண்ட திருப்பாவையை ஸ்ரீ கிருஷ்ணருக்கு உகந்த மார்கழி மாதம் அதிகாலைப் பொழுதில் பாடி, 27ம் நாள் "கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா" எனும் கீழ்கண்ட பாடலை பாடி, "மூடநெய் பெய்து முழங்கை வழி வார" என்றபடி, பெருமாளுக்கு நெய் நிறைந்த அக்காரவடிசல் நிவேதனம் செய்து அன்னதானம் செய்வது நலமளிக்கும்.
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன் தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
முத்தான முப்பது:
திருப்பாவையின் முதல் பத்து பாடல்களில் தன் தோழியரை எழுப்பிய ஆண்டாள், பதினோராவது பாடல் முதல் வாயில் காப்போன், நந்தகோபன், யசோதை, பலராமன் என்று அனைவரையும் எழுப்பி 18-ஆவது பாடலில் கண்ணனுடன் துயிலிருக்கும் நப்பின்னைப் பிராட்டியையும் எழுப்பி 19 -22 பாடல்களில் கண்ணனைத் துயில் எழுப்புகிறாள். முதல் பாட்டு (பாவை) நோன்பு ஆரம்பிக்கும் முன் அதன் பலனை எடுத்துக் கூறுவது இரண்டாம் பாட்டு, நோன்பு விதிகளைக் கூறுவது அடுத்த எட்டு பாடல்கள் அஷ்டமஹா சித்திகளை எழுப்புவதுதான்.
23-ம் பாடல், கண்ணன் சிங்கம் போல எழுந்து வந்து சிங்காசனத்தில் அமர்ந்ததைக் கூறுகிறது. அப்படியானால் இனிமேல் கண்ணனைத் துயில் எழுப்பத் தேவையில்லை. சுப்ரபாதம் முடிந்துவிட்டது. கண்ணன் அலங்கரித்து வந்துவிட்டான். அவனை, நாம் வந்த நோக்கத்தை அவனே அறிந்து அருளும்படிப் பணிக்கிறாள், ஆண்டாள். 24-ம் பாடல், அர்ச்சனை (போற்றிகள்).
25-ம் பாடல், தூப-தீபம். நெருப்பை ஒளித்து வைத்தால் புகையும்; இந்த பாட்டில், கண்ணனை ஆயர் பாடியில் ஒளித்து வளர்த்தால் அவன், அங்கே ஒளிந்து கொள்ளாமல், கம்சன் வயிற்றில் நெருப்பாக மாறி ஒளிந்து கொண்டு விடுகிறான். அதுதான் தூப-தீபம். 26-ம் பாடல் வாத்திய முழக்கம். தூப-தீபம் முடிந்து நைவேத்யம் படைப்பதை அனைவருக்கும் அறிவிக்க மணி முதலிய வாத்தியங்கள் முழங்க வேண்டும்.
27-ம் பாடல் தான் நைவேதயம்; என்ன படைக்கிறார்கள் - பால்சோறு மூட நெய் பெய்து. அதை கண்ணன் முழங்கை வழிவாரக் கூடியிருந்து (வயிறு) குளிர உண்ண வேண்டுகிறாள்.
28-ம் பாடல் பிழைப் பொருத்தருள வேண்டுதல். சாதாணமாக பூஜைகளில் "யதக்ஷர பதப்ரஷ்டம்" "மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் ஸுரேஸ்வர: யத் பூஜிதம் மயா தேவ பரிபூர்ணம் ததஸ்துதே" என்ற ஸ்லோகத்தைக் கூறுவர். அதாவது மந்திரங்கள் சொல்வதில் ஏற்பட்ட குறைகளும் கிரியைகள் செய்வதில் ஏற்பட்ட குறைகளும், பக்தி ஈடுபாட்டில் ஏற்பட்ட குறைகளும் கடவுளை பூஜிப்பதால் பரிபூர்ணமாகட்டும் என்பதே அதன் பொருளாகும்.
அதே போல் 'சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே' - கண்ணன் சீறுவது கூட ஆண்டாளுக்கு அருள்தான் - என்று பொறுத்தருள வேண்டுகிறாள்.
29-ம் பாடல் திரும்பவும் வணங்குதல் (புனர் பூஜை என்று வடமொழியில் கூறுவார்கள். பூஜையை ஒரே நாளில் முடித்துவிடாமல் தினமும் தொடர வேண்டும் என்பதற்காக அடுத்த நாள் காலையில் செய்வார்கள்). ஆண்டாள் 'எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றமேயாவோம் உமக்கே யாம் ஆட்செய்வோம்' என்று அடுத்த தினம் மட்டுமல்லாமல் அடுத்தடுத்தப் பிறவிகளிலும் தொடர்ந்து வணங்குவதை உறுதிச் செய்கிறாள்.
30-வது பாடல் பலச்ருதி - அதாவது பூஜையினால் அடைந்த/அடையும் பலன்களைக் கூறுவது. என்ன பரிசு - ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் - என்று அவன் அருளைத் தவிர பெரிய பரிசு தனக்கு எதுவுமில்லை என்று மீண்டும் உறுதி செய்கிறாள் ஆண்டாள்.
27-வது நாள் இவ்வாறு நைவேத்யம் படைப்பதால் "கூடாரை வெல்லும்" என்ற அந்த பாசுரத்தின் பெயராலேயே, இந்த நாள் கூடாரை வெல்லும் கோவிந்தனின் மனதுக்கு உகந்தவளான "கூடார வல்லி" கோதை நாச்சியார் பெயரால் வழங்கப் படுகிறது. இந்த நோன்பு நிறைவைக் கொண்டாடும் விதமாக இந்நாளில், பாலில் செய்த சர்க்கரைப் பொங்கலை நெய் விட்டுப் படைப்பர்.