தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை அளிக்கும் தை மாத‌ சிறப்புகள் பற்றிப் பார்ப்போம்.

நம் நாட்டில் பொதுவாக எந்த ஒரு நல்ல செயலையும் தை மாதத்தில் ஆரம்பிப்பது என்பது பழங்காலத்தில் இருந்து வரும் பழக்கம் ஆகும். இம்மாதத்தில் தான் சூரியன் வடஅரைக் கோளப் பகுதியில் பயணத்தை ஆரம்பிக்கும் உத்திராண்ய காலம் ஆரம்பமாகிறது. 

ஆடி மாதத்தில் விதைத்த நெல்லானது தை மாதத்தில் தான் அறுவடை செய்யப்படுகிறது. எனவே இது அறுவடை மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

அறுவடையால் மகிழ்ச்சி மிகுந்த மக்கள் தங்கள் கடவுள்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இம்மாதத்தில் பல்வேறு விழாக்களைக் கொண்டாடுகின்றனர். பல்வேறு வழிபாட்டு முறைகளும் இம்மாதத்தில் பின்பற்றப்படுகின்றன.

மக்கள் தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், தை அமாவாசை, ரத சப்தமி போன்ற விழாக்களையும், சபலா ஏகாதசி, புத்ரதா ஏகாதசி, போன்ற வழிபாட்டு முறைகளையும் இம்மாதத்தில் பின்பற்றுகின்றனர். அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

தைப்பொங்கல்

மக்கள் நல்ல விளைச்சலுக்கு உதவிய சூரிய கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை மாதத்தின் முதல் நாளை தைப்பொங்கலாகக் கொண்டாடுகின்றனர்.

இந்நாளன்று அதிகாலையில் எழுந்து புதிய நெல்லில் இருந்து தயார் செய்யப்பட்ட அரிசியில் சர்க்கரை மற்றும் வெண் பொங்கல் ஆகியவற்றை தயார் செய்து பொங்கல், செங்கரும்பு, புதுமஞ்சள், பனங்கிழங்கு, காய்கறிகள், பருப்பு வகைகள், பழவகைகள் ஆகியவற்றை சூரிய தேவனுக்கு படையலிட்டு பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ச்சியுடன் ஆராவாரம் செய்து வழிபாடு மேற்கொள்கின்றனர்.

மாட்டுப் பொங்கல்

உழவுத் தொழிலுக்கு உதவிய மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இந்நாளன்று மாடுகள் குளிப்பாட்டப்பட்டு சந்தனம், குங்குமம் இட்டு மாலைகள் மற்றும் சலங்கைகள் கொண்டு அலங்கரிக்கப்படுகின்றன. சர்க்கரை மற்றும் வெண் பொங்கல் செய்யப்பட்டு அவற்றுடன் செங்கரும்பு, பழவகைகள் ஆகியவை மாடுகளுக்கு படையலிடப்பட்டு வழிபாடு நடத்தி பின் வழிபாட்டுப் பொருட்கள் மாடுகளுக்கு உணவாக வழங்கப்படுகின்றன.

அன்றைய தினம் ஜல்லிக்கட்டு, உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

காணும் பொங்கல்

தை மூன்றாம் நாள் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இன்றை தினத்தில் மக்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களைக் கண்டு உறவாடி மகிழ்கின்றனர்.

ஒற்றுமை மற்றும் பகிர்ந்துண்ணல் போன்றவற்றை வலியுறுத்தும் விழாவாக‌ இவ்விழா அமைகிறது

தை அமாவாசை

தை அமாவாசை அன்று மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் எனப்படும் நீத்தார் கடன் வழிபாட்டினை மேற்கொள்கின்றனர். ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் இவ்வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

உத்திராண்ய காலத்தின் முதல் மாதமான தை மாத அமாவாசையும், தட்சியாண காலத்தின் முதல் மாதமான ஆடி மாத அமாவாசையும், புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையும் முன்னோர்களுக்கான வழிபாட்டிற்கு உகந்தவை எனக் கருதப்படுகின்றன.

இவ்வழிபாட்டின் மூலம் தாங்கள் செய்த பாவங்கள் நீங்குவதாகவும், குழந்தைப்பேறு, குடும்பத்தில் ஒற்றுமை, சுபிட்சம், மகிழ்ச்சி ஆகியவை கிடைப்பதாகவும் கருதப்படுகிறது.

ரத சப்தமி

ரத சப்தமி என்பது தை மாதத்தின் வளர் பிறையில் வரும் சப்தமி திதி அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில்தான் சூரியன் தனது வடஅரைக்கோளப் பயணத்தைத் தொடங்குகிறார்.

இந்நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி தீபம் ஏற்றி சூரிய வழிபாடு செய்ய வேண்டும். அன்றை தினத்தில் தங்களால் இயன்ற தானங்களைச் செய்யலாம்.

பீஷ்மர் உரைக்கக் கண்ணன் உடனிருந்து கேட்டது விஷ்ணு சகஸ்ரநாமம். விஷ்ணு சகஸ்ரநாமத்தைச் சொல்லிய காரணத்தினால் தன் பாவங்கள் நீங்கப் பெற்ற பீஷ்மரின் மேனியை, வியாச மகரிஷி சூரிய தேவனுக்குரிய எருக்கம் இலைகளால் அலங்கரித்தார். அந்த நிலையிலேயே சூரிய தேவனை வணங்கி பீஷ்மர் தியானத்தில் ஆழ்ந்து முக்தியும் பெற்றார். பீஷ்மரை வியாசர் எருக்கம் இலை கொண்டு அலங்கரித்த தினம் ரதசப்தமி.

சபலா ஏகாதசி

தை மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசி சபலா ஏகாதசி என்றழைக்கப்படுகிறது. இந்நாளில் உணவின்றி விரத முறை மேற்கொண்டு வழிபாடு செய்ய நாம் செய்யும் பாவங்கள் எல்லாம் நீங்கும்.

அன்றைய தினம் பழங்களை தானம் செய்வதால் ஒளி மயமான வாழ்க்கை அமையும். இல்லறம் இனிக்கும். லும்பகன் என்னும் இளவரசன் இவ்விரதத்தைக் கடைப்பிடித்து பாவங்கள் நீங்கி அரச பதவியைப் பெற்று பின் வைகுந்த பதவியையும் பெற்றான்.

புத்ரதா ஏகாதசி

தை மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி புத்ரதா ஏகாதசி என்றழைக்கப்படுகிறது. இந்நாளில் ஏகாதசி விரத முறை மேற்கொண்டு வழிபாடு செய்ய புத்திர‌ பாக்கியம் கிடைக்கும்.

சுகேது மான் என்ற அரசன் பிள்ளை இல்லாக் குறையை இவ் ஏகாதசி விரத முறையைப் பின்பற்றி நல்ல மகனைப் பெற்றான். தன் நாட்டில் உள்ளோரும் இவ்விரத முறையைப் பின்பற்றச் செய்தான். இவ் ஏகாதசி வம்சாவளியைப் பெருகச் செய்யும் சந்தான ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

வைணவ ஆலய முக்கிய விழாக்கள்

 108 வைணவ திவ்யதேசங்களில் 59-வது திவ்யதேசமாக திருவள்ளூர் ஸ்ரீவைத்திய வீரராகவ பெருமாள் கோயில் விளங்குகிறது. பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் தை மாத பிரம்மோற்சவ விழா

தை மாத ஆழ்வார்கள் மற்றும் ஆச்சரியர்களின் திருநட்சத்திரம்

திருமழிசை ஆழ்வார்

எம்பெருமானைத் தம் நண்பனாகப் பாவித்துப் பல பாசுரங்கள் பாடியுள்ளார். இவர் அவதரித்தது திருமழிசை என்ற ஊரில். தை மாதம் மக நட்சத்திரத்தில் தோன்றினார். திருமழிசைப் பிரான் என்றழைக்கப்பட்ட இவர் எம்பெருமானின் சுதர்சன சக்கரத்தின் அம்சமாகக் கருதப்படுகிறார்.

இவர் தன் வளர்ப்புப் பெற்றோருக்குப் பிறந்த கணிக் கண்ணனைத் தன் சீடனாக ஏற்று பொய்கையாழ்வார் வாழ்ந்த திருவெஃகா சென்று யதோத்தகாரிப் பெருமானை ஸேவித்து தியானம் செய்தார். பின்னர் கணிக்கண்ணனுடன் திருக்குடந்தை சென்று ஆராவமுதப் பெருமான் மீது பல பாசுரங்கள் இயற்றினார்.

திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி என்று பரமனின் மீது பல பாசுரங்கள் இயற்றினார்.

எம்பார்

ஜகத்குருவான இராமானுசரின் சிஷ்யராகவும், அவரது நிழலாகவும் இருந்தவர் ‘எம்பார்’ என்னும் ஸ்ரீவைணவர். இவருக்கு அவரது தாய் பெரிய பிராட்டியார், தந்தை கமல நயன பட்டர் இட்ட பெயர் கோவிந்த பெருமாள் என்பதாகும்.
இவர் மதுரமங்கலம் என்னும் ஊரில் அவதரித்தார். இது ஸ்ரீபெரும்பூதூருக்கு 16 கி.மீ. தூரத்தில் மிகவும் பசுமையும், எழிலும், தோட்டம் துறவுகள் உள்ள இடமாகும்.

எம்பார் தை மாதம் புனர் பூச நட்சத்திரத்தில் அவதரித்தவர். அவரது அவதார ஸ்தலமான மதுரமங்கலத்தில் தை மாதம் 10 நாட்கள்  புனர்பூசம் வரை திருவிழா நடக்கிறது.

கூரத்தாழ்வான்

தை மாதம், ஹஸ்த நட்சத்திரம். காஞ்சிபுரத்திற்கு அருகில் இருக்கும் கூரம் என்ற ஊரில் வைணவத் தத்துவங்களை நிலை நாட்ட இவ்வுலகில் அவதரிக்கப் போகும் இராமானுசருக்கு அருந்துணையாக விளங்கப் போகும் ஒரு குழந்தை பிறந்தது. குழந்தைக்குத் திருமறுமார்பன் என்று பெயர் வைத்தார்கள். அத்திருப்பெயரை வடமொழியில் ஸ்ரீவத்ஸாங்க மிஸ்ரர் என்றும் சொல்வார்கள். பிற்காலத்தில் கூரத்தைச் சேர்ந்த ஆழ்வான் என்ற பொருளில் கூரத்தாழ்வான்

ஈச்சம்பாடி ஆச்சான், தை மாதம், ஹஸ்தம் நக்ஷத்திரம்

 நாலூரான் தை மாதம்  பூரட்டாதி நக்ஷத்திரம்

 சொட்டை நம்பி தை மாதம்  பூரட்டாதி நக்ஷத்திரம்