பசிப்பிணி நீக்கும் ஷட்திலா ஏகாதசி

மக' மாதம், (மகர / மக மாதம்- Makara  - January  / February) தேய் பிறையில் (கிருஷ்ண பட்சம்) வரக்கூடிய ஏகாதசியே "ஷட்-திலா  ஏகாதசி" என்று   அழைக்கப் படுகின்றது.  ('திலா' என்றால் 'எள்' என்று அர்த்தம்)

ஷட்திலா ஏகாதசி ...

எள் சேர்த்து அன்னதானம் செய்தால் அனைத்து வளங்களும் பெருகும்!

ஆன்மிகக் கதை

பெண் ஒருத்தி மோட்ச லோகம் செல்லும் வரம் பெற்றாள். அதுவும் அவளின் உடலோடு. ஐம்பூதங்களாலான இந்த மனித உடலோடு மோட்ச லோகத்துக்குச் செல்ல எவ்வளவு பாக்கியம் செய்திருக்க வேண்டும். அங்கு அத்தனை வசதிகளும் இருந்தன. தங்குவதற்குப் பெரிய அரண்மனை, பணி செய்ய சேவகர்கள். தங்கமும் வைரமும் அங்கே கொட்டிக் கிடந்தன. ஆனாலும் அவளுக்கு ஒரு பெரும் குறை, அவள் பசியார உணவு ஏதும் அங்கில்லை. பசியால் வாட ஆரம்பித்தாள். 

பூலோகத்தில் வாழ்ந்தபோது, தான் செய்த அத்தனை தான தருமங்களை நினைத்துப் பார்த்தாள். மேற்கொண்ட விரதங்களை நினைத்துக்கொண்டாள். அத்தனை நியமங்களைக் கடைப்பிடித்தும்தான் இன்று இப்படி சொர்க்கத்தில் அல்லல்படுவது ஏன் என்று திகைத்தாள். அப்போது ஶ்ரீமன் நாராயணன் ஒரு துறவியின் வேடம் கொண்டு அங்கே வந்தார். 

உடனே அந்தப் பெண் அந்தத் துறவியின் பாதங்களில் விழுந்து வணங்கினாள். அவரும் அவளுக்கு ஆசீர்வாதம் செய்தார். துறவியிடம் தனது துயரத்தைத் தெரிவித்தாள்.

``ஐயா, மண்ணுலகில் நான் வாழ்ந்த நாள்களில் அனைத்து விரதத்தையும் கடைப்பிடித்தேன். பொன்னையும் மணியையும் தானமென எல்லோருக்கும் வழங்கினேன். அந்தப் புண்ணிய பலனாலேயே இந்தச் சொர்க்க வாழ்வில் புகுந்தேன் என்று இறுமாந்திருந்தேன். ஆனால் இது பெருமை அல்ல... சாபம் என்று அறியாமல் இருந்துவிட்டேன். இங்கு எனக்கு எல்லா வசதிகளும் இருந்தும் உண்ண உணவென்பது இல்லை. நான் இந்த உடலோடு இங்கு வரப் பெற்றிருக்கும் வாழ்வென்பது சாபம்தானா... எனக்கு ஏன் இந்தக் கீழ்நிலை..? தாங்கள்தான் எனக்கு வழிகாட்ட வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள்"

மாய வேடதாரியான நாராயணனோ புன்னகையோடு அவளைப் பார்த்தார்.

``பெண்ணே, உன் தர்மத்தின் பலனாகவும் விரத மகிமையினாலுமே மனித வாழ்வில் பெறற்கரிய பெரும்பேறு பெற்றாய். எனவே, இதைச் சாபம் எனக் கொள்ளலாகாது. ஆனால், நீ செய்ய மறந்த ஒரு தானமே உன்னை இந்நிலைக்கு ஆளாக்கியிருக்கிறது. 

மண்ணுலகில் மிகப் பெரிய பிணி, பசிப்பிணி. பிறந்த கணத்திலிருந்து இறக்கும் கணம் வரைக்கும் பசிப்பிணி பீடித்தேயிருக்கும். எந்த வசதியும் ஆடம்பரமும் இல்லாமல்கூட வாழ்ந்துவிடலாம். ஆனால், பசிக்கு உணவில்லாமல் வாழ இயலாது. எனவேதான் பிறவிகளில் உயர் பிறப்பான மானுடப் பிறப்பில் பசிப்பிணி நீக்குதலையே தலையாய தர்மமாக வேதங்கள் வகுத்துள்ளன. 

அன்னதாதா சுகிபவா' என்னும் பெரும்பொருளை நீ அறியவில்லை. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே... நீ எத்தனை தானம் செய்த போதும், போதும்' என்று சொல்லாது மனித மனம். அதுவே, அன்னதானம் என்றால் ஓர் அளவுக்கு மேல் கொள்ளவும் முடியாது. எனவே எல்லோராலும் எல்லோருக்கும் நிறைவாக தானம் செய்யமுடியும் என்றால் அது அன்னதானமே. நீ அத்தகைய அன்னதானத்தைச் செய்யாது விட்டாய். இத்தனைக்கும் உனக்கு அதன் மகிமையை உணர்த்த ஒரு துறவி உன் இல்லம் தேடிவந்தார். நினைவிருக்கிறதா?" என்று கேட்டார்.

துறவியின் பேச்சைக் கேட்டு வருத்தமுற்றவளாகிய அந்தப் பெண்

``ஆம். அன்றைய நாளில் என் இல்லம் தேடி அந்தத் துறவி வந்தார். தானம் கேட்டு வந்தவருக்கு நான் பிறபொருள்களை தானம் தர முன்வந்தும் வேண்டாம் என்று சொல்லி அன்னம் வேண்டி நின்றார். அன்று அதுவரை நான் சமையல் ஏதும் செய்திருக்கவில்லை. அதனால் உண்டான ஆத்திரத்தில் மண்ணைத் திரட்டி அவரின் பிச்சைப் பாத்திரத்தில் இட்டேன்" என்றாள்.

துறவியோ, ``சரியாகச் சொன்னாய். நீ இட்ட மண்தான் இந்த மாளிகையாக மாறியிருக்கிறது. ஆனால், அவர் கேட்ட பசி தீர்க்கும் உணவு இங்கு இல்லை."

அந்தப் பெண் தன் தவற்றை உணர்ந்து வருந்தினாள். இந்தப் பாவத்திலிருந்து தப்பிக்க வழி உண்டா என்று கேட்டாள்.

நல்லவளும் உத்தமியுமான அந்தப் பெண்ணின் பாவத்தைப் பொறுத்தருளிய பெருமாள், அவளுக்கு அருள் செய்ய தீர்மானித்தார்

``பெண்ணே, மண்ணுலகில் பாவம் தீர்க்கும் விரதம், ஏகாதசி விரதம். அதில் ஒவ்வொரு விரதமும் ஒவ்வொரு பலன் தரும். குறிப்பாக மாசிமாதம் தேய்பிறையில் வரும் ஷட்திலா ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிக்க சகல பாவங்களும் நீங்கும். அன்றைய திதியில் விரதமிருந்து அன்னதானம் செய்ய அன்னத்துக்குக் குறைவே வராது. பசிப்பிணி போக்கும் அருமருந்து ஷட்திலா ஏகாதசி. 

உன்னைப் பற்றித் தகவல்கள் கேட்டு உன்னை தரிசிக்க தேவலோகத்திலிருந்து பெண்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். நீ அவர்களிடம் எப்படியாவது அவர்கள் மேற்கொண்ட ஷட்திலா ஏகாதசி விரத பலன்களைக் கேட்டுப் பெற்றால் இந்தப் பிணி நீங்கப் பெறுவாய்" என்று சொல்லி மறைந்தார். 

வந்து வழிகாட்டியவர் அந்த நாரணனே என்பதை அறிந்த அந்தப் பெண், தேவலோகப் பெண்கள் வருமுன் சென்று அறைக்குள் புகுந்து தாழிட்டுக் கொண்டாள்.

அவர்கள் வந்து இவள் தரிசனம் வேண்டினர். `தனக்கு ஒருநாள் ஷட்திலா ஏகாதசி விரதபலனைத் தந்தால்  நான் தரிசனம் தருகிறேன்' என்று சொன்னாள். வேறு வழியின்றி அவர்களும் ஒத்துக்கொள்ள அவள் அந்தப் புண்ணிய பலனைப் பெற்றுத் தன் பசிப்பிணி போக்கிக்கொண்டாள்

ஷட் என்றால் ஆறு, திலா என்றால் எள். ஆறுவகையான எள் தானத்தை முன்னிலைப் படுத்துவது ஷட்திலா ஏகாதசி. அதில் முக்கியமானது எள் சேர்த்து செய்யப்பட்ட அன்னத்தை தானம் செய்வது. வறியவர்களுக்கு எள்சாதம் தானம் செய்வதன் மூலம் பெரும்பலனை அடையமுடியும்.

ஷட்திலா ஏகாதசி திதி விரதமிருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவது, விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது ஆகிய நற்காரியங்களில் ஈடுபடவேண்டும். மேலும் இந்த நாளில் எளியவர்களுக்கு அன்னதானம் செய்தால், முன் செய்த பாவங்கள் நீங்கி காலமெல்லாம் பசிப்பிணி இல்லாத வாழ்வைப் பெறலாம் என்கின்றன சாஸ்திரங்கள்..!

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!