திருநாங்கூர் என்னும் ஊரில் மட்டும் ஆறு திவ்யதேசங்கள் உள்ளன.திருநாங்கூரில் நடைபெறும் கருடசேவைக்கு பதினொரு பெருமாள்கள் எழுந்தருள்வார்கள்.
108 வைணவ திவ்யதேசங்களில் சோழநாட்டு திருப்பதிகளுள் திருநாங்கூர் என்னும் ஊரில் மட்டும் ஆறு திவ்யதேசங்கள் உள்ளன. இந்த திருநாங்கூரைச் சுற்றி சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் 5 திவ்யதேசங்கள் உள்ளன. இந்த பதினொன்றையும் சேர்த்து திருநாங்கூர் பதினொரு திவ்யதேசம் என்று வழங்குவர். அவையாவன:-
திருக்காவளம்பாடி
திருஅரிமேயவிண்ணகரம்
திருவண்புருடோத்தமம்
திருச்செம்பொன்செய்கோவில்
திருமணி மாடக்கோவில்
திருவைகுந்த விண்ணகரம்
- இந்த ஆறுதலங்களும் திருநாங்கூருக்குள்ளேயே உள்ளன.
திருத்தேவனார்த் தொகை
திருத்தெற்றியம்பலம்
திருமணிக்கூடம்
திருவெள்ளக்குளம்
திருப்பார்த்தன்பள்ளி
ஒவ்வொரு வருடமும் தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் நடைபெறும் கருடசேவைக்கு இந்தப் பதினொரு பெருமாள்களும் எழுந்தருள்வார்கள். இந்த பதினொரு பெருமாள்களையும் திருமங்கை யாழ்வார் ஒருவருக்கு அடுத்து ஒருவராக மங்களா சாசனம் செய்வார். பிறகு திருமங்கையாழ்வாரை மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்வார். இந்தக் கருட சேவையைக் காண்பதற்கு பல இடங்களிலிருந்தும் பக்தர்கள் திரண்டு வருவார்கள்.
ஒவ்வொரு வருடமும் இந்த பெருமாள்களை மங்களாசாசனம் செய்ய திருமங்கையாழ்வாரே இங்கு வருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். திருநாங்கூரைச் சுற்றியுள்ள வயல்வெளிகளில் கருட சேவைக்கு முதல் நாள் நள்ளிரவில் காற்றினால் நெற்பயிர்கள் சலசல என்று சப்தமிடும். இந்த சப்தத்தை கேட்டவுடன் திருமங்கையாழ்வார் ஊருக்குள் பிரவேசித்து விட்ட தாக பக்தர்கள் கூறுவார்கள். திருமங்கையால் மிதிக்கப்பட்ட வயல்வெளிகளில் அதிக நெல்விளையும் என்பதும் இங்குள்ள விவசாயிகளின் நம்பிக்கையாகும்.
மணிமாடக்கோவில் எனப்படும் நாராயண பெருமாள் சன்னதியில் இந்தக் கருடசேவை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. இந்தப் பதினொரு பெருமாள்களையும் கருடசேவையில் சேவிப்பது பதினொரு திவ்ய தேசங்களுக்கு சென்று வழிபட்டதற்கு நிகராகும்.
பெருமாளை கருட வாகனத்தில் சேவை சாதிக்கக் காண்போருக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதிகம். ஆகவே நாம் அனைவரும் உய்ய பதினோரு திவ்ய பெருமாள்களும் தரும் கருட சேவையை காணவும், ஆழ்வாரை நெல் வயல்களின் நடுவே நெற்கதிர்களை சாய்த்து மிதித்துக் கொண்டு பக்தர்கள் ஏழப்பண்ணி கொண்டு செய்யும் அழகையும் கண்டு களிக்க எத்தனை கோடி தவம் செய்திருக்க வேண்டுமோ, எனவே கிளம்பிவிட்டீர்களா திருநாங்கூருக்கு? சென்று வந்து உலகளந்த ஊழி பிரானாம், உம்பர் தொழும் திருமாலின் அருள் பெற பிரார்த்திக்கின்றேன்.