Jaya Ekadasi - ஜெய ஏகாதசி

இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் ஒருவரின் அனைத்து பாவ விளைவுகளும் அழிக்கப்படும். இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பவர், முக்தி அளிப்பதலும், ஒருவரின் பாவ விளைவுகளை அழிப்பதிலும் இந்த ஏகாதசிக்கு நிகர் வேறு ஏதும் இல்லை. 

தேவர்கள் சுவர்க்க லோகத்தில் இந்திரனின் ஆட்சியின் கீழ் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். பாரிஜாத மலர்களின் நறுமணம் நிறைந்த நந்தன் கனனா என்ற காட்டில் இந்திரன், அப்சரஸ்களுடன் பலவிதமான பரிமாற்றங்களை அனுபவித்து வந்தார். ஒரு முறை இந்திரன், ஐந்து கோடி அப்சரஸ்கள் கொண்ட ஒரு நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். அந்த சபையில் புஷ்பதந்தா என்ற ஒரு கந்தர்வ பாடகர் இருந்தார். சித்ரசேனா என்ற மற்றொரு கந்தர்வர், தன் மனைவி மாலினி மற்றும் தன் மகளுடன் அங்கு வந்தார். சித்ரசேனாவிற்கு புஷ்பவனா என்ற ஒரு மகன் இருந்தான். புஷ்பவனாவின் மகன் பெயர் மல்யவன். புஷ்பவதி என்ற ஒரு கந்தவர்ப்பெண் மல்யவனின் அழகால் கவரப்பட்டாள். புஷ்பவதி மிக அழகானவள். இந்த அழகான புஷ்பவதியை கண்டவுடன் மல்யவன் முழுமையாக வசீகரிக்கப்பட்டான்.

இந்திரனை திருப்திப்படுத்தும் நோக்கத்தில் மல்யவன் மற்றும் புஷ்பவதி ஆகிய இருவரும் மற்ற அப்சரஸ்களுடன் சேர்ந்து ஆடுவதிலும் பாடுவதிலும் ஈடுபட்டனர். ஒருவரை ஒருவர் கவர்ந்ததால் அவர்களால் நடன நிகழ்ச்சியால் சரிவர செயல்பட இயலவில்லை. அதன் பலனாக நடன சபையில் சில தடுமாற்றங்கள் ஏற்பட்டன. இருவரும் ஒருவரை ஒருவர் ஓரக் கண்ணால் இடைவிடாமல் பார்த்துக்கொண்டு, ஆடலிலும் பாடலிலும், ஏற்பட்ட ஓயாது இடையூறுகளை கவனித்த இந்திரன், அவ்விருவரின் மன நிலையை புரிந்து கொண்டார். நடன நிகழ்ச்சியில் ஏற்பட்ட தொடர்ந்து இடையூறுகளால் இந்திரன் அவமதிப்பை உணர்ந்தார். பிறகு அவர்களை சபித்தார். நீங்கள் இருவரும் மூடர்கள் மற்றும் பாவமிக்கவர்கள். என்னுடைய ஆணையை மீறியதால் நான் உங்களைப் சபிக்கிறேன். நீங்கள் இருவரும் ஆண் மற்றும் பெண் பிசாசு உடலைப் பெற்று பூலோகத்தில் உங்களுடைய கர்ம வினைகளை அனுபவியுங்கள்.

இவ்வாறு இந்திரனால் சபிக்கப்பட்ட மல்யவன் மற்றும் புஷ்பவதி பிசாசு உடல்களைப் பெற்று, இமயமலையின் ஒரு குகையில் தங்கள் துன்பமயமான வாழ்க்கையை துவங்கினர். பிசாசு உடலைப் பெற்றதால், இருவரும் மிகுந்த துயரத்திற்கும் புலம்பலுக்கும் ஆளானார்கள். சாபம் பெற்றதன் விளைவால், அவர்களால் இன்புற இயலவில்லை. அடர்ந்த காடுகளிலும் குளிர்ந்த இமயலைத் தொடரிலும் திரிந்து வந்த அவர்கள் ஓரிடத்தில் அமர்ந்து தங்களைப் பற்றி யோசிக்கத் துவங்கினர். ஆண் பிசாசு, பெண் பிசாசிடம் கூறியது, நாம் எப்படிப்பட்ட பாவச்செயலை செய்து விட்டோம். அதனால் இந்த துயரம் மிகுந்த பிசாசு உடலை பெற்றோம்! இவ்வாறு மிகுந்த கவலையுடன் தங்கள் செயல்களை எண்ணி மிகவும் வருந்தினர். தங்களுடைய தவறான நடத்தையை எண்ணி மிக துயருற்று அன்று முழுவதும் எந்த ஒரு உணவையும் ஏற்கவில்லை. தற்செயலாக அந்த நாள் மங்களகரமான ஜெயா ஏகாதசி நாளாயிற்று. பசி மற்றும் தாகத்தால் பீடிக்கப்பட்டிருப்பினும் அன்று அவர்கள் எந்த ஒரு ஜீவனையும் கொல்ல வில்லை. அவர்கள் கிழங்குகளையோ, பழங்களையோ (அ) நீரையோ கூட ஏற்க வில்லை.

இவ்வாறு துயரத்தில் ஆழ்ந்து அவர்கள் ஒரு அரசமரத்தடியில் அமர்ந்திருக்கையில் சூரியனும் மறைந்தது. குளிராலும், கவலையில் ஆழ்ந்திருந்ததாலும் அன்று இரவு முழுவதும் அவர்கள் தூங்க வில்லை. இவ்வாறு அவர்கள் தன்னையறியாமலே ஜெயா ஏகாதசியை அனுஷ்டித்தனர். இந்த விரதத்தை அனுஷ்டித்ததன் பலனாக அடுத்த நாளே, அவர்கள் பிசாசு உடலில் இருந்து விடுபட்டு, தங்களுடைய முந்தைய நிலையை அடைந்து விமானம் மூலம் சுவர்க்க லோகத்திற்குச் சென்றனர். சுவர்க்க லோகத்தை அடைந்தவுடன் மகிழ்ச்சியுடன், தேவர்களின் மன்னனான இந்திரனை அணுகி தங்கள் வணக்கங்களை சமர்ப்பித்தனர். அவர்களைக் கண்டவுடன் இந்திரன் ஆச்சர்யத்துடன் கேட்டார். என்ன அதிசயம்? எந்த புண்ணிய பலனால் உங்களுடைய பிசாசு நிலை அழிக்கப்பட்டது. எந்த தேவதை உங்களை என்னுடைய சாபத்திலிருந்து விடுவித்தார்? இதற்கு மல்யவன் பதிலளித்தார். முழு முதற் கடவுளின் காரணமற்ற கருணையாலும் ஜெயா ஏகாதசியை அனுஷ்டித்ததன் பலனாலும், நாங்கள் உம்முடைய சாபத்தில் இருந்து விடுபட்டோம். 

இதைக் கேட்ட இந்திரன் மல்யவனிடம் கூறினார். பகவான் விஷ்ணுவின் பக்தித்தொண்டாலும், ஏகாதசி விரதத்தாலும் நீங்கள் புனித மடைந்து உள்ளீர்கள். ஆகையால் நீங்கள் என்னாலும் வணங்கத் தக்கவர்கள். பகவான் விஷ்ணுவின் பக்தித் தொண்டில் ஈடுபட்டிருப்பவர் யாராயினும் என்னால் வணங்கப்படுகிறார். மற்றும் மதிக்கப்படுகிறார். அதன் பிறகு புஷ்பவதியும் மல்யவனும் சுவர்க்க லோகத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். ஜெயா ஏகாதசியின் அனுஷ்டானம், அந்தணரை கொல்லும் பாவத்தையும் நீக்கிவிடும். தானமளிப்பது, யாகம் செய்வது மற்றும் புனித ஸ்தலங்களுக்கு செல்வது போன்றவற்றால் அடையும் புண்ணிய பலனை இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதன் மூலம் கூடுதல் பலனாக ஒருவர் அடைவார். இந்த ஏகாதசியை நம்பிக்கையுடனும் பக்தியுடனும் அனுஷ்டிப்பவர் என்றென்றும் வைகுண்டத்தில் வாழ்வார். இந்த ஏகாதசியின் பெருமைகளைப் படிப்பதாலும், கேட்பதாலும் ஒருவர் அக்னிஸ்தோம யாகத்தின் பலனை அடைவார்.

இந்து புராணங்களின்படி, ஜெய ஏகாதசி நாளில், ஒருவர் தனது இதயத்தில் பகைமையைக் கடைப்பிடிப்பதைத் தவிர்த்து, முழு மனதுடன் விஷ்ணுவை வணங்க வேண்டும். விரோதம், ஏமாற்றுதல், காமம் போன்ற உணர்ச்சிகளை எந்த நேரத்திலும் மனதில் கொண்டு வரக்கூடாது. இந்த காலகட்டத்தில் நாராயண ஸ்தோத்திரம் மற்றும் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். லட்சுமி மற்றும் ஸ்ரீ ஹரி விஷ்ணுவின் ஆசீர்வாதம் அதன் விரதத்தை அனுசரிப்பவர்களுக்கு கொட்டுகிறது.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!