மூலவர் : குடமாடு கூத்தன்
உற்சவர் : சதுர்புஜ கோபாலர்
அம்மன்/தாயார் : அமிர்தவல்லி
தல விருட்சம் : பலாச மரம்
தீர்த்தம் : அமிர்த தீர்த்தம்
ஆகமம்/பூஜை : பாஞ்சராத்ரம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : அரியமேய விண்ணகரம்
ஊர் : திருநாங்கூர்
மாவட்டம் : நாகப்பட்டினம்
மாநிலம் : தமிழ்நாடு

மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்

வஞ்சனையால் வந்தவதனுயிருண்டு வாய்த்த தயிருண்டு வெண்ணெயமுதுண்டு வலிமிக்க கஞ்சனுயிரது வுண்டிவ் வுலகுண்ட காளை கருதுமிடம் காவிரி சந்தகில் கனக முந்தி மஞ்சுலவும் பொழிலாடும் வயலாடும் வந்து வளங்கொடுப்ப மாமறையோர் மாமலர்கள் தூவி அஞ்சலித்தங் கரிசரனென்று இரைஞ்சு நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே.
- திருமங்கையாழ்வார்

திருவிழா:
வைகாசி விசாகம், தை மாதத்தில் கருட சேவை.

தல சிறப்பு:
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 29 வது திவ்ய தேசம்.

பொது தகவல்:
இங்கு மூலவர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.

விமானம்:
உச்சரூருங்க விமானம் பிரகாரத்தில் ஆழ்வார்கள், ராமர் சீதை ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் இருக்கின்றனர்.
பிரார்த்தனை :
குறைவில்லாத வாழ்க்கை பெற, எதிரிகள் தொல்லை குறைய கடன் தொல்லைகள் தீர இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமிக்கு தைலக்காப்பு செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

தலபெருமை:
சுவாமி கருவறையில் அமர்ந்த கோலத்தில் தரையில் வெண்ணெய் பானையை வைத்து அதன் மீது ஒரு காலை வைத்துக் கொண்டு காட்சி தருகிறார். இவரை பானையுடன் தரிசனம் செய்தால் குடும்பம் வெண்ணெய் போல மகிழ்ச்சி பொங்கும்படியாக சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. குடத்துடன் ஆடிக்கொண்டு வந்தவர் என்பதால் இவரை "குடமாடு கூத்தன்' என்கின்றனர். கோவர்த்தன மலையை குடையாக பிடித்துக் கொண்டு மக்களைக் காப்பாற்றிய கண்ணன் என்பதாலும் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டதாக கருதலாம். உற்சவர் சதுர்புஜ கோபாலன் என்ற பெயரில் அருளுகிறார்.திருமங்கையாழ்வார் இவரை அசுரர்களை அழித்து அமுதம் எடுத்தது, மகாபலியை அடக்கியது, ராவணனை சம்ஹாரம் செய்தது என அவரது புகழ் பாடி பகைவர்களை அழித்து நல்வழி காட்டுபவர் என்று சொல்லி மங்களாசாசனம் செய்துள்ளார்.

திருநாங்கூரில் உள்ள 11 திவ்யதேசங்களில் இத்தலமும் ஒன்று. தை மாதத்தில் நடக்கும் கருடசேவை பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். அரி (விஷ்ணு) மேவியிருக்கும் (தங்கி) இடம் என்பதால் இவ்வூருக்கு "அரியமேய விண்ணகரம்' என்றொரு பெயரும் உள்ளது. இங்கு கொடிமரம் கிடையாது. பீடம் படி மீது ஏறிச்சென்று வணங்கும்படி பெரியதாக இருக்கிறது. பக்தி எனும் படிகளை ஏறிச்சென்றால் இறைவனை அடையலாம் எனும் உட்பொருளை இந்த பீடம் குறிக்கிறதாம்.

தல வரலாறு:
உதங்கர் எனும் முனிவர் ஒருவர் தன் இளவயதில் வைதர் என்பவரை குருவாக ஏற்றுக்கொண்டு அவரிடம் வேதம் பயின்றார். அவர் வேதங்களை நன்கு கற்று தேர்ந்ததும், குருவிற்கு தட்சணை செலுத்த விரும்பினார். குருபத்தினி உதங்கரிடம், அந்நாட்டை ஆளும் மகாராஜாவின் மனைவி அணிந்திருக்கும் குண்டலம் வேண்டும் என்றாள். உதங்கரும் அரண்மனைக்குச் சென்று மகாராணியிடம் அவளது குண்டலங்களைக் கேட்டார். அவரைப் பற்றி அறிந்திருந்த மகாராணியாரும் குண்டலங்களைக் கொடுத்து விட்டார். அதனை எடுத்துக்கொண்டு குருகுலம் திரும்பினார் உதங்கர். வழியில் பசியும், தாகமும் அவரை வாட்டியது. அப்போது அங்கு இடையன் ஒருவன் தலையில் பானை ஒன்றை சுமந்தபடி ஆடிக்கொண்டே பசுக்களை ஓட்டிக்கொண்டு வந்தான். அவனருகே சென்ற உதங்கர் தன் தாகம் நீங்க பானையில் இருப்பதை தரும்படி கேட்டார். இடையன் பானையில் பசுவின் சாணமும், கோமியமும் இருப்பதாக சொன்னான். மேலும், இதைத்தான் அவனது குரு வைதரும் உண்டதாக கூறினான். குரு உண்ட பொருள் என்று சொன்ன உடனே உதங்கர் அதை வாங்கிக்கொண்டார். கமண்டலத்தை ஒரு மரத்தின் அடியில் வைத்துவிட்டு, அவர் அதனை பருகினார். அப்போது அவ்வழியே வந்த தட்சன் என்பவன் கமண்டலங்களை எடுத்துக்கொண்டு ஓடினான். உதங்கரும் அவனைத் துரத்திச்செல்ல அவன் ஒரு பொந்திற்குள் ஒளிந்து கொண்டான். கவலை கொண்ட உதங்கர் இடையனிடம், அவனிடம் இருந்து தன் கமண்டலங்களை மீட்க ஆலோனை கேட்டார். அப்போது அவ்வழியே மற்றொருவர் குதிரையில் வந்தார். குதிரைக்காரரைக் காட்டிய இடையன், அவருடன் சென்றால் கமண்டலங்களை மீட்க உதவி செய்வார் என்றார். இடையன் அவருடன் சென்றார்.

கமண்டலத்தை எடுத்தவன் மறைந்திருந்த பொந்திற்கு முன் சென்ற குதிரைக்காரர், தன் குதிரையின் வாயில் இருந்து நெருப்பைக் கக்கச்செய்தார். நெருப்பின் உஷ்ணம் தாங்காத தட்சன் வெளியில் வந்து கமண்டலத்தை திருப்பி கொடுத்தான். இடையனுக்கும், குதிரை மீது வந்தவருக்கும் நன்றி சொல்லிவிட்டு குருகுலம் திரும்பினார் உதங்கர். வைதரிடம் நடந்த விஷயங்களை சொன்னார். நடந்ததை தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்த வைதர், "உனது குரு பக்தியை சோதிக்கவே இடையனாக மகாவிஷ்ணுவும், குதிரை வடிவில் இருந்த அக்னியின் மேல் இந்திரனும் வந்ததாக' சொன்னார். மேலும் இடையன் குடத்தில் வைத்திருந்தது அமுதம் என்றும், அதனைப் பருகியாதாலே அக்னியின் உஷ்ணத்தை அவனால் தாங்க முடிந்ததென்றும் விளக்கம் தந்தார். தனக்காக இடையனாக வந்த மகாவிஷ்ணுவின் சுயரூபத்தை காண விரும்பி சுவாமியை வேண்டினார் உதங்கர். அவருக்கு மகாவிஷ்ணு இத்தலத்தில் வெண்ணெய் நிரம்பிய குடத்துடனே காட்சி தந்தார்.
அமைவிடம் :
சீர்காழியில் இருந்து 8 கி.மீ., தூரத்தில் இவ்வூர் இருக்கிறது. இங்கிருந்து குறித்த நேரத்தில் மட்டும் பஸ்கள் செல்கிறது. சீர்காழி - அண்ணன்கோயில் சென்று அங்கிருந்து சுமார் 2 கி.மீ., தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.

அருகிலுள்ள ரயில் நிலையம் :
சீர்காழி

அருகிலுள்ள விமான நிலையம் :
திருச்சி

தங்கும் வசதி :
மயிலாடுதுறை

திறக்கும் நேரம்:
காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:
அருள்மிகு குடமாடு கூத்தன் திருக்கோயில், அரியமேய விண்ணகரம், திருநாங்கூர் - 609 106.நாகப்பட்டினம் மாவட்டம்

போன்:
+91- 4364 - 275 689, 94439 - 85843.