சீர்காழிக்கு அருகிலுள்ள மங்கை நாடு எனப்படும் பகுதியை நீலன் என்ற குறுநில மன்னர் ஆண்டு வந்தார்.

மங்கை நாட்டை ஆண்டு வந்த படியால், மங்கை மன்னன் என்று அவர் அழைக்கப்பட்டார்.

அண்ணன் கோவிலிலுள்ள வெள்ளக்குளம் என்னும் பொய்கைக் கரையில் குமுதவல்லி என்னும் பெண்ணைக் கண்டார் மங்கை மன்னன்.

அவளது அழகில் மயங்கிய அவர் தமது காதலை அப்பெண்ணிடம் தெரிவித்தார்.

குமுதவல்லியோ, “நீங்கள் உங்கள் தோள்களில் திருமாலின் அடையாளங்களாகிய சங்கு சக்கரப் பொறிகளைப் பெற்று வர வேண்டும்.
மேலும், தினமும் ஆயிரம் திருமால் அடியார்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.
இவ்விரண்டு நிபந்தனைகளையும் நீங்கள் ஏற்றால் உங்களை மணப்பேன்!” என்றாள்.

குமுதவல்லியின் மேல் இருந்த மையலினால் உடனே இரு நிபந்தனைகளையும் ஏற்ற மங்கை மன்னனுக்கு, கும்பகோணத்துக்கு
அருகிலுள்ள ஸ்ரீ நாச்சியார் கோவிலில் ஸ்ரீ நிவாசப் பெருமாளே குருவாக இருந்து அவரது தோள்களில் சங்கு சக்கர முத்திரைகளைப் பொறித்தார்.
மேலும் குமுதவல்லியின் மற்றொரு நிபந்தனையாகிய அன்னதானக் கைங்கரியத்தை நிறைவேற்றத் தமது செல்வங்கள் அனைத்தையும் செலவழித்தார் மங்கை மன்னன். 

தனது செல்வங்கள் அனைத்தையும் இழந்த நிலையில்
வழிப்பறிக் கொள்ளையராக மாறி, கொள்ளையடித்த செல்வத்தைக் கொண்டு திருமால் அடியார்களுக்கு அன்னதானம் செய்தார்.
இந்நிலையில் மங்கை மன்னனின் பணியாட்களாகிய நீர் மேல் நடப்பான், நிழலில் ஒதுங்குவான், தாள் ஊதுவான், தோளா வழக்கன்
ஆகிய நால்வரும் அவரிடம் ஒருநாள் வந்து, “மங்கை வேந்தரே! ஒரு பெரிய கல்யாண கோஷ்டி நம் ஊரை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
அவர்களிடம் கொள்ளை அடித்தால், இன்னும் ஒரு வருட காலத்துக்கு அன்னதானம் செய்யலாம்!” என்றார்கள்.
‘ஆடல் மா’ என்று பெயருடைய தமது குதிரையில் ஏறி அமர்ந்த மங்கை மன்னன், விரைந்து சென்று
அந்தத் திருமண கோஷ்டியை வழிமறித்தார். 
தமது வாளைக் காட்டி மிரட்டி அந்தக் கோஷ்டியிலுள்ள அனைவரின் ஆபரணங்களையும்
ஒரு சாக்குப் பையில் போடச் சொன்னார். 
அந்த மணமகனின் காலில் ஒரு சிலம்பு அணிந்திருந்தான்.
அதை அவனால் கழற்ற முடியாத நிலையில், மங்கை மன்னனே தம் பல்லால் கடித்து அதைக் கழற்றினார்.
அவர் சிலம்பைக் கழற்றும் மிடுக்கைப் பார்த்த அந்த மணமகன், “நீர் கலியனோ?” என்று கேட்டான்.
கலியன் என்றால் மிடுக்கோடு கூடியவர் என்று பொருள்.
அனைத்து நகைகளையும் மூட்டை கட்டி விட்டு
அந்த மூட்டையைத் தூக்க முற்பட்டார் மங்கை மன்னன். 
ஆனால் அவரால் தூக்க முடியவில்லை.
மணமகனைப் பார்த்து, “ஏய் மாப்பிள்ளையே! ஏதாவது மந்திரம் போட்டு வைத்திருக்கிறாயோ?” 
என்று கேட்டார்.
“ஆம்!” என்று சொன்ன மணமகன், மங்கை மன்னனை ஒரு மரத்தின் அடிவாரத்துக்கு அழைத்துச் சென்றான்.

எட்டெழுத்துக்களைக் கொண்ட நாராயண மந்திரத்தை அவர் காதில் சொன்னான்.

அடுத்த நொடியே மணமகன் வடிவில் வந்தவர் திருமால் என்றும், மணமகளாக வந்தவள் மகாலட்சுமி என்றும் உணர்ந்தார் மங்கை மன்னன்.

மேலும் தாம் நாராயணனுக்கே தொண்டன் என்பதையும், அந்த நாராயணனுக்குத் தொண்டு செய்வதே வாழ்வின் பயன்
என்பதையும் உணர்ந்து திருமங்கை ஆழ்வார் என்னும் ஞானியாக மாறினார்.

திருமங்கை ஆழ்வாருக்கு ஒரே நொடியில் எப்படி இத்தகைய ஞானம் வந்தது?

திருமால் அவரது காதில் நாராயண மந்திரத்தைச் சொன்னாரல்லவா? 
அந்த மந்திரத்திலுள்ள நாராயண நாமம்
ஒரு நொடியில் ஞானத்தைத் 
தர வல்லது. 
‘நாரம்’ என்பது உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் குறிக்கிறது.
‘அயனம்’ என்றால் ஆதாரம் என்று பொருள். 
அனைத்துயிர்களுக்கும் ஆதாரமாக இருப்பவன் நாராயணன் (நாரம்+அயனம்).
இத்தகைய பொருளுடைய நாராயண நாமத்தை மங்கை மன்னனின் காதில் திருமால் கூறிய மாத்திரத்தில்,
நாராயண நாமத்தின் பொருளையும் அவர் உணர்ந்து கொண்டார். 
அதாவது, திருமாலே நமக்கு ஆதாரம்,
நாம் அவனுக்குத் தொண்டன் என்ற அறிவு அவருக்கு உண்டானது.
அதனால் அவர் திருமங்கை ஆழ்வார் என்னும் ஞானியாக மாறினார்.
நாரங்களுக்கெல்லாம் அயனமாக இருப்பதால் (உயிர்களுக்கெல்லாம் ஆதாரமாக இருப்பதால்) ‘நாராயண:’ என்று திருமால் அழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 246-வது திருநாமம். 
இதற்கான விளக்கவுரையில் பராசர பட்டர்,
“இது வரை 245 திருநாமங்களால் போற்றப்பட்ட இறைவனுக்கென்று பிரத்தியேகமாக உள்ள
பெயர் தான் 246-வது திருநாமமாகிய ‘நாராயண:’ ” என்று கூறுகிறார்.
“நாராயணாய நமஹ:” 
என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை
அடியேன் சொல்லத் தேவையில்லை, திருமங்கை ஆழ்வாரே கூறிவிட்டார்:

“குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள்விசும்பு அருளும் அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணாஎன்னும் நாமம்!”

1. நல்ல அடியார்களின் குலத்தில் பிறக்கும் பேறு
2. இறைவனுக்குத் தொண்டு செய்வதற்கேற்ற செல்வம்
3. அனைத்துத் துன்பங்களில் இருந்தும் விடுதலை
4. ஸ்ரீ வைகுண்டப் பதவி
5. திருமாலின் திருவருள்
6. இறைவனுக்குத் தொண்டு செய்தலாகிய பெரும் பேறு
7. இறைவனுக்கு அனுபவிப்பதற்கேற்ற உடல்வலிமை
8. ஈன்ற தாயை விடவும் அதிக நன்மைகள்–ஆகிய எட்டு நலன்களையும் எட்டெழுத்து