மூலவர் : பேரருளாளன்
உற்சவர் : செம்பொன்னரங்கன், ஹேரம்பர்
அம்மன்/தாயார் : அல்லிமாமலர் நாச்சியார்
தீர்த்தம் : நித்ய புஷ்கரணி, கனகதீர்த்தம்
ஆகமம்/பூஜை : பாஞ்சராத்ர ஆகமம்
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : செம்பொன்செய் கோயில்
ஊர் : செம்பொன்செய்கோயில்
மாவட்டம் : நாகப்பட்டினம்
மாநிலம் : தமிழ்நாடு
மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார்

பிறப்பொடு மூப்பொன்றில்லவன் தன்னைப் பேதியா இன்ப வெள்ளத்தை இறப்பெதிர் காலக்கழிவுமானானை ஏழிசையின் சுவை தன்னை சிறப்புடைமறையோர் நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் கோவிலினுள்ளே மறைப்பெரும் பொருளை வானவர் கோனைக் கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே.
 - திருமங்கையாழ்வார்.

திருவிழா
பெருமாளின் நட்சத்திரமான ஐப்பசி சுவாதியில் பிரமோற்ஸவம் நடக்கிறது. தை அமாவாசைக்கு மறுதினம் திருநாங்கூரில் நடைபெறும் 11 கருட சேவைக்கு இந்த பெருமாளும் எழுந்தருளுகிறார்.
தல சிறப்பு
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 31 வது திவ்ய தேசம்.

பொது தகவல்
தரிசனம் கண்டவர்கள்
ருத்ரன், த்ருடநேத்ர முனி

பிரார்த்தனை
வறுமையில் உழல்வோர் இவரை பக்தியுடன் வழிபட்டு, நல்ல தொழில் கிடைத்து, செல்வம் பெறலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நேர்த்திக்கடன்
பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாற்றுகின்றனர்.

தலபெருமை
108 திருப்பதிகளில், பெருமாள் தன் கோயிலை தானே கட்ட உதவியது இத்தலத்தில் மட்டும் தான். கிழக்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில் உள்ள இப்பெருமாளுக்கு செம்பொன்னரங்கர், ஹேரம்பர், பேரருளாளன் என்று பல திருநாமங்கள். இவருக்கு மேல் உள்ள விமானம் கனக விமானம். பெருமாள் பரமபதத்தில் இருப்பதால் அருளாளன் என வணங்கப்படுகிறார். அவரே நம்முடன் இருப்பதால் "பேரருளாளன்' ஆனார். அல்லிமாமலர் நாச்சியார், பூமாதேவியுடன் அருள்பாலிக்கிறார்.
இழந்த செல்வத்தை மீட்டுத்தரும் தலம்
காஞ்சிபுரத்தில் வாழ்ந்த காசியபன் என்ற அந்தணர் செல்வமிழந்து வறுமையில் வாடிக்கொண்டிருந்தார். கடைசியாக அவர் இத்தலத்திற்கு வந்து 3 நாட்களில் 32 ஆயிரம் தடவை "ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திரத்தை உச்சரித்து பெருமாளை மனம் உருகி வழிபட்டார். இவரது வழிபாட்டால் மகிழ்ந்த பெருமாள் இவனுக்கு செல்வங்களை வாரி வழங்கினார்.

தல வரலாறு :
ராவணனுடன் யுத்தம் முடித்த பின் ராமபிரான் அயோத்தி திரும்பும் வழியில் இங்குள்ள த்ருடநேத்ர முனிவரின் ஆசிரமத்தில் தங்கினார். ராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க, முனிவரின் ஆலோசனைப்படி தங்கத்தினால் மிகப்பிரம்மாண்டமான பசுவின் சிலை செய்தார். அந்த பசுவின் உள்ளே அமர்ந்து நான்கு நாள் தவம் செய்தார். ஐந்தாவது நாள் அந்த சிலையை ஒரு அந்தணருக்கு தானமாகக் கொடுத்தார். இப்படி செய்ததால் ராமரின் தோஷம் விலகியது. அந்த அந்தணர் பசுவின் சிலையை விற்று இக்கோயிலை கட்டியதால் இத்தலம் "செம்பொன்செய் கோயில்' என வழங்கப்படுகிறது.

அமைவிடம்
சீர்காழியிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் உள்ள அண்ணன்கோவில் ஸ்டாப்பில் இறங்கி தெற்கே 3 கி.மீ. தூரம் ஆட்டோவில் சென்றால் கோயிலை அடையலாம்.

அருகிலுள்ள ரயில் நிலையம்
சீர்காழி

அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி, சென்னை

தங்கும் வசதி
மயிலாடுதுறை

திறக்கும் நேரம் :
காலை 7 மணி முதல் 10மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி :
அருள்மிகு பேரருளாளன் (செம்பொன்னரங்கர்) திருக்கோயில், செம்பொன்செய் கோயில், திருநாங்கூர்- 609 106 . நாகப்பட்டினம் மாவட்டம்

போன் : +91- 4364-236 172