Thiruvanpurushothamam Perumal temple | திருவண்புருசோத்தமம் புருஷோத்தமர் ஆலயம் | திவ்ய தேசம் - 30

மூலவர் : புருஷோத்தமர்
அம்மன்/தாயார் : புருஷோத்தம நாயகி
தல விருட்சம் : பலா, வாழை மரம்.
தீர்த்தம் : திருப்பாற்கடல் தீர்த்தம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருவன் புருஷோத்தமம்
ஊர் : திருவண்புருசோத்தமம்
மாவட்டம் : நாகப்பட்டினம்
மாநிலம் : தமிழ்நாடு
மங்களாசாசனம் :  திருமங்கையாழ்வார்

பல்லவம் திகழ்பூங்கடம்பேறி அக்காளியன் பணவரங்கில் ஒல்லை வந்திறப்பாய்ந்து அருநடஞ்செய்த உம்பர்கோனுறை கோவில் நல்லவெந்தழல் மூன்று நால்வேதம் ஐவேள்வியோடு ஆறங்கம் வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர் வண்புருடோத்தமமே.
- திருமங்கையாழ்வார் 

திருவிழா
பங்குனி மாதம் 10 நாள் பிரம்மோற்சவம் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் பவுர்ணமியில் பவித்ர உற்சவம் நடக்கிறது. தை அமாவாசைக்கு மறுநாள் கருட சேவை. 

தல சிறப்பு
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 30 வது திவ்ய தேசம். 

பொது தகவல்
மூலவர் புருஷோத்தமன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அருள்பாலிக்கிறார். தாயார் புருஷோத்தம நாயகி தென்மேற்கு மூலையில் தனி சன்னதியில் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். உள்பிரகாரத்தில் ஆண்டாள், ராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர், நம்மாழ்வார், உடையவர், சேனை முதலியார் சன்னதிகள் உள்ளன. இத்தல மூலவர் கிழக்கு பார்த்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் சஞ்சீவி விக்ரக விமானம் எனப்படுகிறது. இத்தல இறைவனை காட்சி கண்டவர்கள் உபமன்பு, வியாக்ரபாத முனிவர்.

பிரார்த்தனை
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியறிவிற்காக பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்
பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். 

தலபெருமை
108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று. இத்தல பெருமாளை திருமங்கையாழ்வார் அயோத்தி ராமராக மங்களாசாசனம் செய்துள்ளார். இத்தல பெருமாளைப் பற்றி பாடுபவர் மட்டுமல்லாது, கேட்பவருக்கும் எல்லா நலனும் கிடைக்கும் என கூறியுள்ளார். 48 நாட்கள் தொடர்ந்து விஷ்ணு சகஸ்ர நாம அர்ச்சனை செய்து, கடைசி நாளன்று விசேஷ அர்ச்சனை செய்து வழிபட்டால் எப்படிப்பட்ட பிரச்னை இருந்தாலும் பெருமாள் தீர்த்து விடுவார் என்பது ஐதீகம். திருச்சி அருகே திருக்கரமனூர். அதேபோல் இந்த திருநாங்கூர் வன் புருஷோத்தமன். வேறு எங்கும் புருஷோத்தமனுக்கு தனி சன்னதி இல்லை. மணவாள மாமுனிகள் இங்கு தங்கி வன்புருஷோத்தம பெருமாளுக்கு இரண்டு வருடம் சேவை புரிந்துள்ளார். இங்கு மூன்று ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன. அதில் ராமர் சன்னதியில் உள்ள ஆஞ்சநேயர் கைகட்டி வாய்பொத்திய நிலையில் உள்ளார். பாசிபடியாத திருப்பாற்கடல் இத்தலத்திலிருந்து வடக்கே அமைந்துள்ளது. செண்பகப்பூ என்றால் இந்த பெருமாளுக்கு மிகவும் விருப்பம். 

தல வரலாறு
சைவ சமயத்தில் ஞான சம்பந்தருக்கு பார்வதி ஞானப்பாலை ஒரு கிண்ணத்தில் வைத்து ஊட்டி விட்டாள். அதே போல வைணவத்தில், மகாவிஷ்ணு பசியால் அழும் குழந்தைக்கு ஒரு பாற்கடலையே உருவாக்கி பால் அமுது தந்திருக்கிறார். அவர் தான் சீர்காழி வன் புருஷோத்தமர். இங்கு பெருமாளை ராமனாகக் கருதி வழிபடுகின்றனர். வியாக்ரபாதர் என்ற மகரிஷி, தன் குழந்தை உபமன்யுவை அழைத்துக்கொண்டு இந்த பெருமாள் கோயிலில் உள்ள நந்தவனத்தில் பூப்பறித்து இறைவனுக்கு சார்த்த வந்தார். குழந்தையை நந்தவனத்தின் வாசலில் அமர செய்து விட்டு பூப்பறிக்க செல்கிறார். குழந்தை தந்தையை காணாததாலும், பசியாலும் அழுதது. குழந்தையின் அழுகுரல் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பரந்தாமனுக்கு கேட்டது. உடனே இத்தலத்தில் ஒரு பாற்கடலையே உண்டு பண்ணி குழந்தைக்கு ஊட்டினார். அழும் குழந்தைக்கு தாயார் புருஷோத்தம நாயகி பால் அமுது படைத்தாள். 
அமைவிடம்
சீர்காழி- நாகப்பட்டினம் ரோட்டில் அண்ணன் பெருமாள் கோவில் ஸ்டாப்பில் இறங்கி கிழக்கே 2 கி.மீ. செல்ல வேண்டும். சீர்காழியிலிருந்து 9 கி.மீ., தூரத்திலுள்ள இக்கோயிலுக்கு அடிக்கடி பஸ் வசதி உள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம்
சீர்காழி

அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை, திருச்சி

தங்கும் வசதி : சீர்காழி

திறக்கும் நேரம்
காலை 9 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 

முகவரி
அருள்மிகு திருவண்புருசோத்தமம் திருக்கோயில், திருநாங்கூர்- 609 106 (சீர்காழி-திருநாங்கூர்)நாகப்பட்டினம் மாவட்டம். 

போன் : +91- 4364-256221 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!