10. பாப புண்ணியங்களை ஆராய்ந்து சொல்லும் பன்னிரு சிரவணர்கள்

சூதமாமுனிவர், சௌகாதி முனிவர்களை நோக்கிக் கூறலானார். வேத வடிவிலான பெரிய திருவடி பரம காருண்யரான திருமாலின் திருவடிகளைத் தொழுது, “பெருமாளே! தேவரீர்! முன்பு கூறியருளிய அச்சிரவணர்கள் பன்னிருவர்களும் யாவர்? அவர்கள் யாருடைய புதல்வர்கள்? வைவஸ் வத நகரத்தில் அவர்கள் இருப்பதற்கு காரணம் என்ன? மனிதர்கள் செய்யும் பாப புண்ணியங்களை அச்சிரவணர்கள் எவ்வாறு அறிவார்கள்? இவற்றையெல்லாம் அடியேனுக்கு நவின்றருள வேண்டுகிறேன்.” என்று வேண்டினான். அதற்கு திருமால் மகிழ்ந்து கூறலானார்.

“புள்ளரசே! கேட்பாயாக! ஊழி காலத்தில் தன்னந் தனியனான ஸ்ரீ மகா விஷ்ணுவானவர் அயனாராதி தேவரோடு யாவரும் யாவும் தன்னுள்ளே ஒடுக்கிக் கொண்டு நெடும்புணலில் பள்ளி கொண்டிருந்தார்.

“அப்போது மகா விஷ்ணுவின் உத்திகமலத்தில் நான்முகனாகிய பிரமன் தோன்றி, ஸ்ரீ ஹரியைக் குறித்து நெடுங்காலம் மாதவம் புரிந்து வேதங்களையும் படைத்தருளினார். அவ்வாறு படித்தவுடனேயே உருத்திரன் முதலிய தேவர்கள் எல்லாரும் அவரவர் தொழில்களைச் செய்யத் துவங்கினார்கள்.

“எல்லோரையும் விட ஆற்றல் மிக்க யமதர்மராஜனும் ஜைமினி என்ற நகரத்தை அடைந்து சிம்மாசனத்தில் வீற்றிருந்து ஜீவர்கள் செய்யும் பாப புண்ணியங்களை அறிய வேண்டும் என்று ஆராய்ந்தார். அறிய தொடங்கிய அவனுக்கு சேதனர்கள் செய்யும் பாப புண்ணியங்களை அறிந்து கொள்ள முடியவில்லை.

“பல காலம் முயன்றும் அவனால் அந்தச் செயலில் வெற்றியடைய முடியவில்லை. எனவே யமதர்மராஜன் மனம் வருந்தி நான்முகனைக் கண்டு வணங்கி, ‘சதுர்முகனே! மஹா தேவனே! அடியேன் ஜீவர்களின் பாவ புண்ணியங்களை நீண்ட நாட்கள் ஆராய்ந்தும் தெளிவாக அறிந்து கொள்ள முடியவில்லை. அறிந்தால் அல்லவோ பாவிகளை தண்டிக்கவும், புண்ணியசாலிகளை இரட்சிக்கவும் முடியும். ஆகையால் அவற்றை உணர்ந்து, அறிந்து தக்கவை செய்யவும் எனக்கு அருள் புரிய வேண்டும்.’ என்று பிரார்த்தித்தார்.
                   
“அதைக் கேட்டதும் நான்முகன், ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்தெறிந்து, நீண்ட கண்களை உடையவர்களும் மிக்க மேனியசகுடயவர்களும் மனக்கண்ணால் யாவற்றையும் அறிந்து கொள்ளக் கூடியவர்களான பன்னிரண்டு புதல்வர்களைப் படைத்து,

“யமதர்மனைப் பார்த்து, ‘தர்மனே! உலகத்தில் பிறந்த ஜீவர்கள் அனைவரும் நினைப்பதையும் பேசுவதையும் செயல்புரிவதையும் உணர்ந்தறிய வல்லவர்கள். இவர்கள் ஜீவர்கள் செய்வதை எல்லாம் அறிந்து உனக்கு அறிவிப்பார்கள். நீ பாப புண்ணியங்களை அறிந்து சிஷையும்  ரகைஷயும்  செய்வாயாக!’ என்று சொல்லி, அப்பன்னிருவரையும் யமதர்மனுடன் செல்லும்படிப் பணிக்க, 

“காலனும் பிரமனை வணங்கி அந்தப் பன்னிரு சிரவணர்களோடு தென்புலத்தை அடைந்து, சேதனர்களுடைய புண்ணியங்களையும், பாவங்களையும் அறிந்து அவற்றுக்குத் தக்கவாறு தண்டித்தும் காத்தும் வருவானாயின்.

“பக்ஷி ராஜனே! பூவுலகில் வாழ்வின் இறுதிக் காலம் முடிந்தவுடனே, வாயு வடிவனான ஜீவனை யம கிங்கர்கள், யமபுரிக்கு இழுத்துச்  செல்வார்கள். அறம்,பொருள்,இன்பம்,வீடு என்ற நான்கு வகை புருஷார்த்தங்களில் தர்மஞ் செய்த உத்தமர்கள் யாவரும் தர்ம மார்க்கமாகவே வைவஸ்வத நகரம் என்னும் யமபுரிக்குச் செல்வார்கள். 

“மோட்சத்தில் இச்சை கொண்டு வேத சாஸ்திர புராணங்களை அறிந்து தெய்வ பக்தி செய்பவர்கள் தேவி விமானம் ஏறி தேவருலகை அடைவார்கள். பாவிகள் கால்களால் நடந்தே செல்வார்கள். கடுமையான, கொடுமையான கரடுமுரடான பாதையை கடந்து செல்ல வேண்டும்.

“வாழுங்காலத்தில் ஜீவன் சிரவணரைப் பூஜித்தவனாகயிருந்தால், ஜீவனின் பாவங்களை மறைத்து புண்ணியங்களை மட்டுமே யமதர்ம தேவனிடம் சொல்வார்கள்.

“பன்னிரண்டு கலசங்களில் தண்ணீர் நிறைந்து அன்னம் பெய்து அக்கலசங்களை அந்தந்தச் சிரவணரைக் குறித்து தானதர்மங்கள் செய்தால் ஜீவனுக்கு யமலோகத்தில் சகலவிதமான நன்மைகளையும் செய்வார்கள்.

“கருடா! பன்னிரண்டு சிரவணர்களின் தோற்றம் முதலியவற்றைச் சொல்லும் இந்த புண்ணிய சரிதத்தை பக்தியோடு கேட்டவர்கள் பாபம் நீங்கிய புனிதராவார்கள் என்று கூறியருளினார்.

நாம் சிரத்தையுடன் செய்ய வேண்டிய காரியம்.

இறந்த நம் முன்னோர்களுக்குச் சிரத்தையுடன் செய்யும் காரியமே சிராத்தம். சாதத்தைப் பிடித்து ஆறு பிண்டங்கள் வைத்து, எள், ஜலம், தர்ப்பை கொண்டு அவர்களை ஆராதிக்க வேண்டும். தந்தை, தாத்தா, முப்பாட்டன்கள், தாய், பாட்டி, கொள்ளுப் பாட்டி ஆகிய கோத்திர தாயாதிகளுக்கு ஒவ்வொருவரும் செய்யவேண்டிய மிக முக்கிய கடமையாகும் இது. இந்த ஆறு பிண்டங்களையும் ஒன்றாக இணைத்து காகத்துக்கு வைக்கும்போது, அது உண்ணுவதன் மூலம் நம் முன்னோர்களுக்கு அந்த ஆகாரம் செல்வதாக ஐதீகம்!

சிராத்தம், தர்ப்பணம் செய்கிற நாட்களில், வீட்டு வாசலில் கோலம் இடக்கூடாது. பூஜையறையில் தீபம் ஏற்றக்கூடாது. அதேபோல், சிராத்தம் அல்லது தர்ப்பணம் செய்யும் முன்பு ஆண்களும் சரி, பெண்களும் சரி, நெற்றிக்கு இட்டுக்கொள்ளக் கூடாது. இவை, இறைவனை வழிபட நாம் செய்யும் காரியங்கள். பித்ருக்கள் வரும் நேரத்தில், இறை தொடர்புடைய இந்தக் காரியங்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். காரணம், தெய்வத்தை வழிபடும் வேளையில், பித்ருக்கள் வரப் பயப்படுவார்கள் என்கிறது சாஸ்திரம்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில்தான் தர்ப்பணம் செய்ய வேண்டும். நம் முன்னோர் எந்தத் திதியில் இறந்தார்களோ, அந்தத் திதி மற்றும் அந்த பட்சம், அந்த மாதம் ஆகியவற்றில் சிராத்தம் செய்ய வேண்டும். இறந்த நாளில் செய்ய வேண்டிய சிராத்தத்தை ஒரு சிலர், இறந்த நட்சத்திரத்தில் செய்கிறார்கள். அதைத் தவிர்ப்பது உத்தமம். ஏனென்றால், அன்றைய தினம் திதி மாறி வர வாய்ப்பு உள்ளது. அதனால், இறந்த திதியில் சிராத்தம் செய்வதே சிறப்பு!

மனிதர்கள் தாம் வாழும் காலத்தில், தான தருமங்கள் செய்து வருதல் வேண்டும். நம்மைப் பெற்ற தாய், தகப்பன் உயிருடன் இருக்கும் காலத்தில், அவர்களின் மனம் நோகாமல் நடந்து கொள்வதே மிகப் பெரிய தர்மம் ஆகும்.

இறந்த பின்பு செய்கின்ற தானத்தைவிட, இருக்கும்போது அவர்களுக்கு மூன்று வேளையும் நல்ல ஆகாரம் கொடுப்பதே மிகப் பெரிய தர்மம் என்கிறது கருடபுராணம்.

பாபம் என்றால் என்ன, அது யாரைச் சேரும் என்பதைப் பற்றி நமது வேதங்களும், உபநிஷத்துகளும் விரிவாகச் சொல்லியிருக்கின்றன. பொய் பேசுதல், பிறர் பொருளை அபகரித்தல், அல்லது அபகரிக்க நினைத்தல் போன்றவை தீய காரியங்களாகும். இவை எல்லாமே பாபம் என்று கருடபுராணம் சொல்கிறது.
சிராத்தம், தர்ப்பணம், பித்ரு காரியம், படையல் என்றெல்லாம் பல்வேறு வார்த்தைகள் புழக்கத்தில் இருந்தாலும், அவை அனைத்தும் ஒன்றையே குறிப்பன ஆகும். நதிகள் பல இடங்களில் உற்பத்தியாகி, பல ஊர்களின் வழியாக வரும்போது, அவை ஆறு என்று பெயர் பெற்று சமுத்திரத்தில் கலக்கின்றன.

அதுபோல், நாம் செய்கிற சிராத்தம், ஒவ்வொரு வருடமும் நம் முன்னோர் இறந்த திதியில் செய்யப்படுவது. தர்ப்பணம் என்பது ஒவ்வொரு அமாவாசை அன்றும் செய்யப்படுகிறது. படையல் என்பது வருடத்துக்கு ஒருமுறை செய்யப்படுவது.

ஆனால் இவை அனைத்துமே இறந்த முன்னோர்களுக்காகச் செய்யப்படுகிற சடங்குகள். இவை நம் முன்னோர்களைச் சென்றடைந்து, அவர்களின் ஆத்மாக்களைக் குளிர்வித்து, நமக்கு அவர்களின் ஆசிகளைப் பெற்றுத் தரும் என்பது சத்திய வாக்கு.

நவீன உலகம், விஞ்ஞான யுகம், கணினி யுகம் என்று காலம் வேகமாக மாறிவிட்டது. 'என் வாழ்க்கையே இயந்திரமயமாகிவிட்டது. தர்ப்பணம் செய்யவே நேரம் இல்லை’ என்று அங்கலாய்க்கிறார்கள் பலர். மாதத்தில் ஒரே ஒருமுறை வருகிற அமாவாசைக்கே இப்படிச் சொல்கிறார்கள். ஆனால், வருடத்துக்கு 96 முறை தர்ப்பணம் செய்ய வேண்டும் என்கிறது வேதம். ஆகவே, எந்தச் சாக்குப் போக்கும் சொல்லாமல், தட்டிக் கழிக்காமல் முன்னோரை உரிய காலத்தில் வழிபடுவது நமக்கு நன்மை பயக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

இவை அனைத்தையும் செய்ய முடியவில்லை என்றாலும், ஆடி மாத அமாவாசை தர்ப்பணமும், தை மாத அமாவாசை தர்ப்பணமும் அவசியம் செய்ய வேண்டும். ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டிய சிராத்தம் விட்டுப்போனால் (தீட்டு ஏற்படுவதால்) மஹாளயபட்சம் அன்று தர்ப்பணம் செய்ய வேண்டும்.

இந்தப் புனிதமான தர்ப்பணங்களை உத்தராயன, தட்சிணாயன காலங்களில் செய்யாமல் இருந்தால், குழந்தையின்மை, கருக்கலைவு, குடும்பத் தகராறு, ஆரோக்கியக் குறைபாடு, அகால மரணம், திருமணத் தடை, தீய பழக்கங்கள், ஊனமுற்ற குழந்தைப் பிறப்பு, மூளை வளர்ச்சிக் குறைவுள்ள குழந்தைப் பிறப்பு போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குடும்பத்தில் நடைபெற்று, நம் நிம்மதியைக் குலைத்துவிடும் என்கிறது சாஸ்திரம். இவை பித்ரு தோஷம், மாத்ரு தோஷம், நாதி தோஷம், பந்து தோஷம், புத்ர தோஷங்களாகத் திகழ்கின்றன. இவை முறையற்ற வாழ்க்கை, தேவையற்ற கோபம், மன உளைச்சல், மன அழுத்தம், தற்கொலைச் சிந்தனை, உடல்வலி போன்றவற்றை உருவாக்கி, நிம்மதியற்ற வாழ்க்கையைத் தந்துவிடும்.

ஆத்மகாரகனாகிய சூரியனும், மனோகார கனாகிய சந்திரனும் ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் இணைவார்கள். இதையே அமாவாசை என்கிறோம். சூரியன் என்பதை பித்ருகாரகன் என்றும், சந்திரன் என்பதை மாத்ருகாரகன் என்றும் சொல்கிறது ஜோதிடம். ஆகவே சூரியன், சந்திரன் இணைகிற அமாவாசையில், இறந்த தாய், தந்தை மற்றும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஆராதிப்பது சிறப்பு என்கிறது சாஸ்திரம். 

கிட்டத்தட்ட, நம் மூன்று தலைமுறையில் உள்ள முன்னோருக்குச் செய்கிற ஆராதனை, நம்மையும் நம் சந்ததியையும் இனிதே வாழ வைக்கும் என்கிறது கருடபுராணம்.