மகா பாரத்தில் அரிய பல விஷயங்கள் அடங்கியுள்ளன. நாம் நல்ல கதிக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் மகான்கள் நமக்கு பல நல்ல விஷயங்களை அருளி உள்ளனர். நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் நமக்காக அருளிச் சென்றதை கேட்டு தர்ம வழியில் நடப்போம்.
விதுர நீதி திருதராஷ்டிரனுக்கு உபதேசிக்கப் பட்டுள்ளது. திருதராஷ்டிரன் பாண்டவர்களுக்கு கொடுக்க வேண்டிய சொத்தை கொடுக்க மனம் இல்லை. அவர்களுக்கு பிரித்து கொடுத்து விடு என்று தனது உபதேசத்தை மேலும் தொடர்கிறார்.
எது வந்தால் எது பறி போகும் என்றும் அஹங்காரம் வந்தால் அத்தனையும் போய் விடும் என்றும் அழகாக கீழ் வருமாறு விவரிக்கிறார். .
முதுமை உருவத்தின் அழகைப் பறித்து விடும். - இளமையில் இருக்கும் அழகு முதுமை வந்து விட்டால் போய் விடும்.
ஆசை தைரியத்தை பறித்து விடும். - ஆசை நமக்கு வந்து விட்டால் நம்மிடம் உள்ள தைரியம் போய் விடும். உதராணத்திற்கு நாம் தனியாக செல்வதாக நினைத்துக் கொள்வோம். நம்மிடம் பொருளோ அல்லது நகையோ இருந்து அதன் மீது ஆசையும் இருந்தால் அதை நம்மிடம் இருந்து யாரும் அபகரித்து விடுவார்களோ என்ற எண்ணம் நமது தைரியத்தை பறித்து விடும்.
ம்ருத்யு (மரணம்) வந்தால் பிராணன் போய் விடும்.
பொறாமை வந்தால் அது நம்மை தர்ம மார்க்கத்தில் இருந்து விலக்கி விடும்.
நமக்கு பொறாமை இல்லாமல் இருந்தால் நாம் தர்ம மார்க்கத்திலேயே இருப்போம். எப்போது மற்றவரைப் பார்த்து நமக்கு பொறாமை வருகிறதோ உடனேயே நாமும் அவர் போல இருக்க வேண்டும் என்று ஆசைப் படுவோம். அவ்வாறு நாமும் இருக்க குறுக்கு வழிகளை உபயோகிப்போம். எனவே பொறாமை தர்ம மார்க்கத்தை பறித்து விடும்.
கோபம் வந்தால் செல்வம் போய் விடும். - விசுவாமித்திரருக்கு தவ வலிமையே செல்வமாகும். அவருக்கு கோபம் வந்தவுடன் எவ்வாறு அவரது தவ வலிமை குறைந்து விட்டதோ அது போல நமக்கு கோபம் வந்தால் நம்மிடம் உள்ள செல்வம் சென்று விடும்.
ஒழுக்கம் கெட்டவனுக்கு தொண்டு புரிந்தால் நமது ஒழுக்கமும் பறி போகும். நாம் நல்லவர்களுக்கு தொண்டு புரியலாம். ஆனால் சுய லாபத்திற்காக ஒழுக்கம் கெட்டவர்களுக்கு தொண்டு புரிந்தால் நமது ஒழுக்கமும் போய் விடும் என்பது உறுதி.
காமம் வந்தால் வெட்கம் போய் விடும்.
மேல் சொன்னவைகள் எதாவது ஒன்று வந்தால் ஒன்று போய் விடும். ஆனால் அஹங்காரம் வந்து விட்டால் அத்தனையும் தொலைந்து போகும் என்று அழகாக விதுரர் எடுத்துரைக்கிறார்.