மஹா பாரதத்தில் அரிய பல விஷயங்கள் அடங்கியுள்ளன. அதில் நம்மால் பின்பற்ற முடியாது என்று எதுவும் கிடையாது. அவ்வாறு இருந்திருந்தால் மகா பாரதம் எப்போதோ காணாமல் போய் இருக்கும். எனவே முயற்சித்தால் நம்மால் கண்டிப்பாக பின்பற்ற முடியும். மகான்கள் பலர் அவதரித்து நமக்காக அவ்வாறு நடந்து காண்பித்து இருக்கிறார்கள். நாம் நம்மால் முடிந்தவரை அவர்கள் சொன்ன வழியில் நடக்க முயற்சிப்போம்.
விதுரர் எம தர்மரின் அம்சமாவர். அவர் தருமத்தைத் தவிர எதையும் சொன்னதில்லை. திருதராஷ்டிரன் பாண்டவர்களுக்கு கொடுக்க வேண்டிய ராஜ்யத்தை பிரித்து கொடுக்கவில்லை. அதில் திருதராஷ்டிரனுக்கு இஷ்டமும் இல்லை. அவருக்கு உபதேசிப்பதே விதுர நீதி ஆகும். அடுத்து விதுர நீதியில் என்ன தெரிவித்தார் என்று காண்போம்.
நம்மை யாரும் வசவு பாடினாலோ நம்மை யாரும் நிந்தித்தாலோ நாம் பதிலுக்கு எதுவும் கூறாமல் இருக்க வேண்டும். நாம் தர்ம வழியில் இருக்கும்போது நம்மை யாரும் வசவு பாடினால் நாம் அதற்காக துன்பமோ மன வேதனையோ பட வேண்டியதில்லை. அவ்வாறு நம்மை ஒருவர் திட்டினால் நாம் செய்த பாவங்கள் அவருக்கு சென்று விடும். மேலும் அவர் செய்த புண்ணியங்கள் நம்மை வந்து சேர்ந்து விடும் என்று கூறியுள்ளார். நம்மை ஒருவர் திட்டினால் அவர் நம் மீது அம்பு விடுவதாக நினைத்து நாம் ஒதுங்கி விட வேண்டும். நாம் அதை தடுத்தால் நாமும் போருக்கு தயார் என்று அர்த்தம். அவ்வாறு சண்டை ஏற்பட்டால் நாமும் சண்டை போடுவதற்கு தயார் ஆகி விட்டோம் என்று அர்த்தம் ஆகி விடும். எனவே நாம் புத்திசாலியாக இருந்து நம்மை யாரும் திட்டினாலோ வசவு பாடினாலோ பேசாமல் இருந்து புண்ணியத்தை தேடிக் கொள்ள வேண்டும்.
அடுத்து எது உத்தமம் என்று கூறுகிறார். பேசக் கூடாத இடத்தில் பேசாமல் இருந்தால் நல்லது. அவ்வாறு பேச வேண்டிய கட்டாயம் ஆகி விட்டால் உண்மை பேசுவது சிறந்தது. உண்மை பேச வேண்டிய கட்டாயம் ஆகி விட்டால் பிறருக்கு பிரியம் ஏற்படுமாறு பேசுவது சிறந்தது. அதுவும் கட்டாயம் ஆகி விட்டால் தர்மம் பேசுவதே சிறந்தது என்று என்று பேசுவதில் எது சிறந்தது மிக அருமையாக கூறியுள்ளார்.
மேற்கொண்டு விதுரர் சொன்னதை அடுத்த அத்தியாத்தில் காண்போம்.