(பக்தர்களின் வாழ்வில் பெருமாள் நடத்திய நெகிழ்ச்சியான சம்பவங்கள்)

அனுப்பியவர்:வனிதாசக்திவேல், புதுக்கோட்டை மாவட்டம்.

எத்தனயோ பக்தர்களுக்கு அருள் வழங்கும் பெருமாள் என் வாழ்க்கையில் இப்போது வரை துணை வந்து கொண்டிருக்கிறார். அதில் ஒரு நிகழ்ச்சியை பதிவு செய்கிறேன்.

அத்தி வரதர் தரிசனம். என் கணவரிடம் அத்தி வரதரை குடும்ப சகிதமாக தரிசித்து வர வினவினேன். அவரோ வயதான என் தாய், தந்தை, பிள்ளைகளை விட்டு விட்டு நாம் மட்டும் செல்லலாம் என்றார். நானோ நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை தரிசனம் தரும் அவரை கண்டிப்பாக தரிசனம் செய்ய அனைவரும் செல்லத் தான் வேண்டும் என்று பெருமாள் மீது பாரத்தை போட்டு கிளம்ப தயாராகினோம். கிளம்புவதற்கு இரண்டு நாள் முன்னதாக கூட்ட நெரிசலில் சிக்கி தவித்த பக்தர்கள் என செய்திகள் வரவே என் கணவர் மிகவும் பயந்தார். அவரிடம் நம்பியவர்களை ஒரு பொழுதும் நாராயணன் கைவிட மாட்டார் என்று கூறி பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் கிளம்பினோம். என் கணவரோ கூட்டம் அதிகமாக இருந்தால் வாசலை தொட்டு வணங்கி வந்துவிட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் வந்தார். என் பெருமாள் நிச்சயம் தரிசனம் தந்து அனுப்புவார் என்ற நம்பிக்கையில் சென்றேன். கோவிலை நெருங்கும் வரை மனமெங்கும் நாராயணன் நாமம் தான். என்ன அதிசயம் கோவில் வாசலில் கூட்டம் குறைவு. என் கணவர் வயதான தாய், தந்தையுடன் ஒரு வரிசையிலும், நானும் குழந்தைகளும் என் தோழியுடன் ஒரு வரிசையில் சென்றோம்.கூட்ட வரிசையில் இடையில் பிரிந்தாலும் பெருமாளை காணும் முன் வரிசைகளை ஒன்றாக்கி என் பெருமாள் எங்களை குடும்பத்துடன் தரிசனம் செய்ய வைத்தார் ‌. வெறும் இரண்டு மணிநேர வரிசையில் கிடைத்த தரிசனத்தை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. அதோடு அவரை வணங்கிய பிறகு தங்க இடம் இல்லாமல் இருந்த எங்களுக்கு (அனைத்து ஹோட்டல்களும் HOUSE FULL) ஒரு பெருமாள் பக்தரது வீட்டில் தங்கும் பாக்கியமும் கிட்டியது. அவரை நம்பி வந்த எங்களுக்கு நல்ல தரிசனம் தந்து ,உண்ண உணவு ,தங்க இடம் தந்து பயணத்தை சிறப்பித்த என் பெருமாளின் கருணையை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.

என் பெருமாளை நம்பினோர் கெடுவதில்லை. 

நம்பியவரை ஒருபொழுதும் அவர் கைவிடுவதுமில்லை.

நீங்களும் உங்கள் வாழ்வில் பெருமாளின் அற்புதங்களை எங்களுக்கு அனுப்பலாம் உங்கள் பெயருடன் அதை பதிவு செய்வோம்

அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண்
9500074173