அனுப்பியவர் : தங்கச் செல்வி
கணவர் பெயர் சங்கிலிநாதன்.
ஊர் திருத்தங்கல்.விருதுநகர் மாவட்டம்.
பெருமாள் விஷ்ணு நாராயணன் எனது நாவில் அதிகமாக உச்சரிக்கும் வார்த்தைகள். அவரே எனது உயிர் மூச்சு. அவரே எனது நாடித்துடிப்பு. அவரே எனக்கு குழந்தையாக வேண்டும் என்று நான் எண்ணாத நாட்களே இல்லை.
இவ்வாறான என் மன எண்ணங்களுக்கு காரணம் எனது ஊர். 45 வது திவ்யதேசத்திற்கு சொந்தமாக விளங்கும் திருத்தங்கல் ஸ்ரீமன் நின்ற நாராயணப் பெருமாள் தெய்வீக வாசுதேவன் அவனே..
அப்போது நான் 15 வயதைக் கடந்திருந்தேன். 10ம் வகுப்பு படித்து முடித்ததும் வறுமை காரணமாக ஒரு தொழிலகத்தில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து கொண்டிருந்தேன்.
எங்க ஊரில் நடக்கும் தேரோட்டம் விசேஷமானது. அதுவரை நான் அவ்வளவாக பெருமாள் கோவிலுக்கு சென்றதில்லை.தேரோட்டம் சமயத்தில் மட்டும் தவறாமல் செல்வோம்.ஒரு நாள் இடையில் பெருமாள் கோவிலுக்குச் சென்றேன். அப்போது ஆயிரம் கதிரவனின் பிரகாசத்தை தன்னிடத்தே கொண்ட எம்பெருமானின் முகத்தைக் கண்டதும் என் மனதில் ஒரு இனம்புரியாத ஒரு பரவசம். அவரது அழகில் மெய் மறந்து நின்றேன்.சிறிது நாட்கள் கடந்தது. சனிக்கிழமை அதிகாலை மூன்று மணி எனக்கு ஒரு கனவு வந்தது. கனவிலே ஒரு உருவம். இன்று சனிக்கிழமை நெற்றியிலே நாமமிட்டு என் ஆலயத்திற்கு வா என்றது. சிறிது நேரம் கழித்து தான் எனக்குத் தெரிந்தது கனவிலே எம்பெருமானே என்னை அழைத்தார்.என் மனதில் இனம் புரியாத ஒரு ஆனந்தம் அன்று முதல் நான் அவனை நாடிச் சென்றேன்.எனக்குத் துன்பம் வரும்போதெல்லாம் நான் ஆலயத்திற்கு செல்வேன். எனக்கான மனதைரியம் அவரால் பிறந்தது. பல்வேறு இன்னல்களில் இருந்து என்னை காத்தருளினார்.எனக்கு விருப்பமான வாழ்வை அமைத்து தந்தார்.அவரைக் கண்டால் என் கண்களில் முதலில் கண்ணீரே வரும்.அவரிடம் எனக்கு எதையும் கேட்கத் தோன்றாது.சிறிதுநேரம் அவரை பார்த்துக் கொண்டே நிற்பேன்.
ஆலயத்தில் நிறைய பக்த சபைகள் உள்ளன. அவற்றில் ஒன்றான ஸ்ரீ ஆஞ்சநேய பக்த சபாவில் இணைந்தேன். அவர்களுடைய தொடர்ந்து பஜனைப் பாடல்களில் கலந்துகொண்டேன்.சனிக்கிழமைகளில் அசைவம் சாப்பிடுவதை கைவிட்டேன். அவரையே என்றும் மனதார பூஜிக்கிறேன்.என் குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலும் ஆலயம் செல்வது இல்லை அவர்களுக்கு நேரம் இருக்காது. நான் ஒவ்வொரு சனிக்கிழமையும் விடாது ஆலயம் செல்வேன். சனிக்கிழமை என்றால் என்னால் அவரை பார்க்காமல் இருக்க முடியாது. அவரே பரம்பொருள் என்பதை உணர்ந்தேன். அவனன்றி அகிலத்தில் அணுவும் அசையாது. எனது தாயும் தந்தையும் ஆனவன் அவனே.நாராயணா என்ற நாமமே எனக்கு நாவில் நொடிப்பொழுதும் வரும்.
எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் எனது முகத்தில் ஒரு சிறு புன்னகை இருக்கும். இவை அனைத்திற்கும் காரணம் நாராயணனே. நொடிப்பொழுதும் நீங்காது என்னைக் காத்துக் கொண்டிருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன்பு அடிக்கடி நான் ஆலயம் செல்வதால் எனக்கும் என் கணவருக்கும் இடையே தகராறு. நான் அவரிடத்தில் முறையிட்டு கண்ணீர் வடித்தேன். ஒரு நாள் என் கணவரது கனவில் பசு மாடு ஒன்று துரத்திக் கொண்டே இருந்ததாம்.அவ்வாறு துரத்திக்கொண்டு பெருமாள் ஆலயத்திற்குள் அனுப்பிவிட்டது. மூலஸ்தானத்திற்கு எதிரே உள்ள ஒரு சிறு அறையில் சென்று கதவை பூட்டிக் கொண்டார். அந்தப் பசுவானது கதவை முட்டித் தள்ளி கொண்டே இருந்தது.அவருக்கு துணைக்கு யாருமே வரவில்லை.எவ்வளவோ போராடியும் பசுமாடு சொல்லவே இல்லை.கம்பியால் செய்யப்பட்ட கதவே அது. அதனுள் நின்று பார்த்தால் மூலஸ்தானம் தெளிவாக தெரியும். அவர் அந்தக் கணத்தில் எம்பெருமானை நோக்கி கைகூப்பி நான் தவறிழைத்து விட்டேன் என்னை மன்னித்து விடு இனிமேல் என் மனைவி திட்ட மாட்டேன் என்று அழுது வேண்டினார். உடனே அந்த பசுவானது அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டது.சிறிது தூரம் சென்று திரும்பி ஒருமுறை பார்த்ததாம்.அவர் மீண்டும் பெருமாளை நோக்கி மனமுருகி வேண்டினார். பெருமாள் அவருக்கு பசுவின் முன்நின்ற கண்ணணாக புல்லாங்குழல் இசைத்தவாறு காட்சியளித்தார். அன்றுமுதல் இன்றுவரை என்னை ஆலயம் செல்வதற்கு எந்தத் தடையும் விதிக்க மாட்டார். எங்கள் தொழில் சரிவர நடக்கவில்லை என்றால் அவர் உடனே ஆலயம் சென்று நாராயணா உடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.ஆலயம் விட்டு வெளிவரும் முன்பு வேலைக்கான அழைப்பு வந்து விடும். அவர் ஆற்றிய பெருமைகளைக் கூறிக் கொண்டே போகலாம். இன்னும் எவ்வளவோ அற்புதங்கள் என் வாழ்வில் நடந்துள்ளது.
சென்ற வருடம் கோகுலாஷ்டமி அன்று ஒரு கண்ணனது உருவச்சிலை வாங்கினேன்.சிறிது காலத்தில் சொந்தமாக வீடு அமைந்தது .இந்த வருட கோகுலாஷ்டமி அன்று முதன்முதலாக கண்ணனின் திருப்பாதத்தை எனது இல்லத்தில் பதித்தேன்.எனக்கு 10 வயது மதிப்புள்ள பெண் குழந்தை உள்ளது. எனது வம்சத்திற்கு ஆன ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்று விரதம் மேற்கொண்டு காத்திருக்கிறேன்.அது நாராயணன் ஆகவே சின்ன கண்ணணாகவே கொஞ்ச எண்ணுகிறேன். எனது நம்பிக்கை முழுவதும் அவனிடத்திலே உள்ளது. எனது தோழிகள் என்னை பெருமாள் பைத்தியம் என்றே அழைப்பார்கள்.
சென்ற வருடம் எனது மகளுக்கு மலேசியாவில் சிலம்பாட்ட போட்டி நடந்தது.அதில் கலந்து கொள்ள 80000 ரூபாய் பணம் தேவைப்பட்டது. முதல் தொகையாக 20,000 ரூபாய் கட்ட வேண்டும்.என்னிடம் சிறிதும் பணம் இல்லை. ஸ்பான்சர்ஷிப் கேட்ட இடத்தில் பதில் இல்லை. இரண்டு நாட்களுக்குள் பணம் கட்ட வேண்டும். அன்று கோகுலஷ்டமி ஆலயத்திற்கு சென்று அவனிடத்தில் முறையிட்டு அழுதேன்.மனமுருகி வேண்டிக் கொண்டிருக்கும் பொழுதே எனக்கு அழைப்பு வந்தது. முதல் தொகைக்கான 20 ஆயிரம் ரூபாயை நாங்கள் ஸ்பான்சர் செய்கிறோம் என்று எனது மகள் மலேசிய செல்வதற்கான அனைத்து செலவுகளுக்கும் பணம் கிடைத்துவிட்டது உடன் இருந்த நண்பர்கள் ஐநூறு ஆயிரம் என்று கொடுத்து உதவினர்.மகளின் பள்ளி ஆசிரியர்களும் உதவினர். எனக்கு பெரிதாக ஒன்றும் செலவு இல்லை. அனைத்தும் எனது மகள் மலேசியா சென்றால் போட்டியில் தங்கப் பதக்கமும் வென்றாள். அவனது அருளாலே நடந்தது. இன்று வரை நான் அவனிடத்திலே சென்று கண்ணீர் விட்டு மண்டியிட்டாள் எனது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். நான் கூறிய அனைத்தும் என் வாழ்வில் ஒரு பாதி தான். எனது வாழ்வின் தாரக மந்திரம்
ஓம் நமோ நாரயணாய
நீங்களும் உங்கள் வாழ்வில் பெருமாளின் அற்புதங்களை எங்களுக்கு அனுப்பலாம் உங்கள் பெயருடன் அதை பதிவு செய்வோம்
அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண்
9500074173