(பக்தர்களின் வாழ்வில் பெருமாள் நடத்திய நெகிழ்ச்சியான சம்பவங்கள்)
அனுப்பியவர் மலர்விழி குமார்.
நொளம்பூர் - சென்னை.95.
" ஓம் நமோ நாராயணாய "
எனக்கு எல்லாமே பெருமாள் தான். திவ்யதேசங்களை தரிசிக்க வேண்டும் என்று ஒரு முறை சோளிங்கருக்கு நானும் என் கணவரும் சென்னையிலிருந்து கிளம்பி அரகோணம் வந்து அங்கிருந்து வேறொரு பஸ் மூலமாக
சோளிங்கர் மலை அடிவாரத்தை அடைய மாலை 5.30 மணி ஆயிற்று. படி ஏறி கோயிலுக்கு செல்ல ஆரம்பித்தோம். அப்போது கோயிலிந்து கீழே இறங்கியவர்கள்
இப்ப போனால் சாமியை பார்க்க முடியாது. போவதற்குள் கோயிலை மூடி விடுவாங்க என்றனர். இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு் வந்தும் பெருமாளை பார்க்க முடியவில்லையே என்று மிகவும் வேதனையாகவும் , துக்கமாகவும் இருந்தது.
மீண்டும் அதே போன்று கிளம்பி வீடு வந்து சேர்ந்தோம். அடுத்த வாரம் இன்னும் சற்று முன்பாகவே கிளம்பியும் பஸ் கிளம்ப தாமதமானதால் இந்த முறை போய் சேரும் போது மாலை 5.20மணி. பத்து படி ஏறியிருப்போம். மீண்டும் அதே போல் நீங்கள் போய் சேருவதற்குள் கோயிலை மூடி விடுவார்கள் என்றனர்.என் கணவரிடம் இன்று பெருமாளை தரிசிக்காமல் வீடு திரும்ப மாட்டேன். பூட்டிய கதவையாவது பார்த்து விட்டு தான் வருவேன் என்று கூறிவிட்டு சற்று விரைவாக ஏற ஆரம்பித்தேன். அப்போது எதிரில் ஒரு 25 வயது இளைஞன் மற்றவர்கள் சொன்னதையே சொன்னான்.
எனக்கு அப்போது வயது 53. உனக்கு சென்று சேர எவ்வளவு நேரம் ஆகியது? என்று கேட்டேன்.அவன் சுமார் அரைமணி நேரம் என்றான்.நாங்கள் வேகமாக ஏற ஆரம்பித்தோம். முக்கால் மலை ஏறி விட்டோம்.எனக்கு இதயம் பட பட என அடித்துக் கொள்வது உண்மையிலேயே எனது காதுக்கே கேட்டது. அடுத்து ஹார்ட் அட்டாக்கா? என்று என்னையே கேட்டுக் கொண்டு ஓரிடத்தில் உட்கார்ந்து வாய் வழியாகவும் வேக வேகமாக மூச்சு விட்டு கொண்டிருந்தேன். சமாளிக்க முடியாமல் என் கணவரிடம் ஏங்க நாம வீட்டுக்கு போய்விடலாம் என்றேன். ஒரு பத்து படி கீழே இறங்கி கொண்டிருந்த ஒரு மாமி ஏம்மா , இவ்வளவு தூரம் வந்துட்ட. இன்னும் கொஞ்ச படி தான் போய் சுவாமி தரிசனம் பண்ணிடு என்றார். அந்த உற்சாக வார்த்தையை கேட்டு மீண்டும் மேலே ஏறினேன். என் கணவர் ஒரு பத்து படி முன்னே ஏறி கொண்டிருந்தார்.
அப்போது 2 ,3 ஐயர்களில் ஒருவர் ,மற்றவர்கள் வெளியே இருக்க கையில் பூட்டுடன் பாதி கதவை மூடிக் கொண்டிருந்தார். வெளியே நின்று கொண்டிருந்தவர்கள் என் கணவரை பார்த்து விட்டு கதவை மூடியவரிடம் சற்று காத்திருக்க சொல்ல நாங்கள் உள்ளே சென்று நரசிம்மரை தரிசித்த தருணத்தை என்ன வென்று சொல்ல?நன்றி சொல்ல உனக்கு , வார்த்தைகள் இல்லை எனக்கு நரசிம்மா!!. ஐயர் எனது முகத்தில் தீர்த்ததை வாரி அடித்த போது அந்த தீர்த்ததுடன் எனது கண்களிலிருந்து ஆனந்த கண்ணீரும் கலந்தது. ஒரு ஐந்து நிமிடம் தாமதித்து இருந்தாலும் தரிசித்திருக்க முடிந்திருக்காது. இவ்வளவு கஷ்டப்பட்டு , பார்க்காமல் போக மாட்டேன் என்ற என் பக்திக்கு , எங்களுக்கு மட்டும் திவ்யமாக , ஏகாந்தமாக காட்சி தந்தான் அந்த பேரருளாளன்.
திருமாலின் திருவடிகளே சரணம்.
"ஓம் நமோ நாராயணாய"
நீங்களும் உங்கள் வாழ்வில் பெருமாளின் அற்புதங்களை எங்களுக்கு அனுப்பலாம் உங்கள் பெயருடன் அதை பதிவு செய்வோம்
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகித் திரும்பவும் உங்களை வந்து சேரும்.
அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண்
9500074173