எனது வாழ்வில் பெருமாள் - பகுதி 6

(பக்தர்களின் வாழ்வில் பெருமாள் நடத்திய நெகிழ்ச்சியான சம்பவங்கள்)

அனுப்பியவர்
சீதாலட்சுமி டாக்டர். நாகராஜன்
நன்மங்கலம் - சென்னை
கோவிந்தனின் அருள் லீலை எனக்கு ஏற்பட்டதை தெரிவிக்கும் ஒரு பக்தை. அடியேன் சர்க்கரை வியாதி உள்ளவள். எனவே என் கணவரே டாக்டராகவும் இருப்பதால் மருந்துகள் கொடுத்து நன்கு கவனித்து வந்தார். இது நடந்து ஓரு இருபத்தி ஐந்து வருடம் முன்பு. என் பெண், மற்றும் மகன் இருவரும் ஓன்பது பத்து வகுப்பு படித்து வந்தனர். பிராமண குலம் என்பதால் மிக சிறப்பாக மதிப்பெண் வாங்கினால்தான் நல்ல படிப்பு சேர முடியும். இறையருளினால் மட்டுமே இன்று வரை பிராமண வகுப்பு மாணவ மாணவியர் உயர் படிப்பு படித்து நல்ல வேலை செய்கிறார்கள்.

எனக்கும் அந்த கவலை உண்டாகி எம்பெருமான் வேங்கடவனை மனமார பிரார்த்திக்கொண்டேன். என்ன பிரார்த்தனை எனில் வேங்கடவண் திருமலை நடந்து வந்து சேவித்து மன விண்ணப்பத்தை சமரப்பிப்பது என்பதாகும். ஆனால் என் கணவர் அதற்கு ஒப்புதல் தர மாட்டார். ஏன் எனில் என் உடல்நிலை அப்படி. ஆனால் மனநிலை மிகுந்த நம்பிக்கை இறையிடம் கொண்டது. எனவே எப்படியும் நடந்து செல்வேன் எனும் உறுதி மிகுந்து இருந்தது.

அதே சமயம் என் மச்சினர் இருவரும் திருப்பதிக்கு ரயிலில் செல்ல திட்டமிட்டனர். என்னையும் கூட அழைத்து சென்றனர். போகும் வழியில் நடந்து மலை ஏறுவது பற்றி பேசினர். எனக்கு என் காதுகளை நம்ப முடியவில்லை. அட என் வேண்டுதலை ஏழுமலையப்பன் இவ்வளவு சீக்கிறம் செலுத்த சந்தர்ப்பம் அளிக்கிறாரே என பலவாறு உள்ள உவகையுடன் அவர்களுடன் நடந்தே மலை ஏற தயாரானேன். மனமோ பெருமாளை பலவாறு புகழ் பாடிக் கொண்டிருந்தது.

ஆச்சு மெள்ள திருமலை மேலே நடக்க ஆரம்பித்தோம். சர்க்கரை அளவு குறையாது இருக்க வாயில் மிட்டாய் சப்பிக்கொண்டே ஏறினோம். என்னதான் மெல்ல ஏறினாலும் மூச்சு பயங்கறமா வாங்கி தடுமாறி தடுமாறி உட்கார்ந்து உட்கார்ந்து ஏறினேன். இனி அடுத்த அடி எடுக்க முடியுமோ என ஐயுறும் வண்ணம் உடல் தடுமாறிற்று. என் கூட வந்த இருவர் தம்பிகளும் தவிக்கின்றனர் சர்க்கரை வியாதி அண்ணியை இப்படி நடந்து வர சம்மதித்தோமே என்று. ஆனால் என் மனது பயங்கற நம்பிக்கையுடன் ம்ம் நட நட என்று சொல்கிறது. அந்த நாளில் இப்போது போல் அவ்வளவு வசதிகள் இல்லை.அது சமயம் மலை மேலிருந்து இரு டாக்டர்கள் வெள்ளை பேண்ட் ஷர்ட் ,கழுத்தில் ஸ்டெதஸ்கோப் சகிதம் ஜிகு ஜிகு என துள்ளல் நடையுடன் வந்தனர். என் நிலை கண்டு போற போக்கில் என்னம்மா டயாபடீஸூ அக்கட ஆம்புலன்ஸ் உந்தி ஒஸ்தாவா? ன்னு சிரிச்சுண்டே கேட்டனர் . நான் அதெல்லாம் வேண்டாம் இது பிரார்த்தனை நடந்தே போவேன் நீங்கள் போகலாம் னு சொன்னேன். அவர்கள் ராமர், லஷ்மணர் என்றே நினைக்கிறேன் அவர்கள் முகம் அவ்வளவு தேஜஸ். அவர்கள் காட்டிய இடத்தில் புத்தம் புதிய ஆம்புலன்ஸ் நின்று கொண்டிருந்தது. அந்த அடர்ந்த காட்டில் எப்படி இரு மருத்துவர் வந்தனர்? அந்த இடத்திற்கு அருகே எப்படி ஆம்புலன்ஸ் வந்தது? அப்போ ஒன்றும் தோணலை. ஆனால் இன்றளவும் அது பெருமாளின் பேரன்பு என்பதும் என் மனதிடத்தை அவர் சோதித்ததும் புரிந்தது. ஆம் இவள் நடந்து ஏறுகிறாளா அல்லது இடையில் வந்த வண்டியில் வருகிறாளா என சோதித்திருப்பார் போலும். நம் வேண்டுதல் பெரிதான ஒன்று அதை அடைய சில பல சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். எனவே மன உறுதியுடனும் பெருமாளை மனம் முழுவதும் நிறைத்து மீண்டும் நடந்து ஏற லானேன். அட என்ன ஆச்சர்யம் காலில் ஏதோ சக்கரம் ஒட்டிக்கொண்டது போல கட கட கடன்னு ஏறிட்டேன். என்னால் என் வேகத்தை கட்டு படுத்த முடியல அதே சமயம் மேல மூச்சு வாங்கிய சுவடே என்னிடம் இல்லை. தெய்வமே டாக்டர்ஸ் போல தரிசனம் கொடுத்து எனக்கு மன திடம் மற்றும் மலை ஏறும் ஆற்றல் எல்லாம் அளித்து நடந்து மலை ஏற வைத்துவிட்டார்.

ஆனால் அத்துடன் முடியவில்லை எம்பெருமான் விளையாட்டு. மாலை நான்கு மணிக்கு ஏற ஆரம்பித்தவர்கள் இரவு ஒன்பதுக்கு மேலே இருந்தோம். அதற்குள் எங்கள் உடன் வந்த சிலர் நடக்காது வண்டியில் எங்களுக்கு முன்பே மலை மேல் ஏறி ரூம் போட்டு சாப்பிட வுட்லேண்ட்ஸ் ஹோட்டலில் காத்திருந்தனர். நாங்களும் நடந்தே ஹோட்டல் போய் சாப்பிட்டோம். உடல் சோர்வுற்று சற்று இளைப்பாறினால் நன்றாக இருக்கும் போல இருந்து. சரி ரூம் போக முற்பட்ட போது எங்களுக்கு முன்பே ரூம் போட்டு வந்தவர்கள் ரூம் நம்பர் மறந்து விட்டனர். என்ன சோதனை. இப்போ மாதிரி மொபைல் இல்லாத நாட்கள் திரும்ப திரும்ப நடந்தும் எல்லாம் ஒரே மாதிரி இருக்கே ஒழிய நம் ரூம் தெரியலை. இப்போதான் கால் விண் விண் என வலிக்க தொடங்கியது. அழுகயா வருது. என்ன செய்ய? இரவு 12 ஆகிவிட்டது. அடுத்த நாள் விடியலில் 4 மணிக்கு தரிசன ஜெனரல் வரிசையில் போய் நிற்கணும். எனில் மூன்று மணிக்கு எழுந்து குளித்து கிளம்பணும். இரண்டு மணி நேரம் தான் இருக்கு. 6மணிக்குள் தரிசனம் முடிந்து பஸ் பிடித்து கீழ் திருப்பதி வந்து ரயில் ஏறணும். கோவிந்தா என்னப்பா இது நடந்ததே சாதனை என நினைத்தால் தரிசனம் கிட்டுமா தெரியலையே ன்னு கலங்கின போது நாங்கள் நின்ற இடத்திற்கு அருகே இருந்த ரூம்மில் இருந்து குழந்தையுடன் உள்ளே இருந்த என் ஓர்படி வெளி வந்தாள். அப்பாடான்னு ரூம்க்கு போய் தூங்கி விடிகாலையில் எழுந்து கிளம்பினேன். ஆஹா இதென்ன உடம்பு இந்த கணம் கணக்கிறதே. மோஷன் போவது போல வயிறு கலக்கறது. கூட வந்தவர்கள் கிடு கிடுன்னு நடக்கிறார்கள். அய்யோ என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. இவர்களோ வரிசைக்கு விரைவதில் வேகமாய் நடக்கிறார்கள்...ஆனால்...நான்....கண் இருண்டு அப்படியே தரையில் சாய்கிறேன். இவர்கள் என்னை கன்னத்தில் தட்டுவதும், சில்லிட்டுவிட்ட என் கால் கைகளை தேய்ப்பதுமாய் ஏதோ பேசுவது லேசாய் என் காதில் தேய்ந்து கொண்டே கேட்கிறது. மனம் அவ்வளவுதான் நம் கதை முடிந்தது. பாவம் இவர்கள் எப்படி என் உடலை எடுத்து செல்வார்கள். கணவரை விட்டு வந்ததே தப்பு இதில் நடந்து ஏறி எல்லோருக்கும் கஷ்டம் கொடுக்கிறோமே.....என எண்ணத்தின் ஊடே உள் மனது, என் வைராக்கிய மனது கூறுகிறது.......

எங்க வந்து என்ன இப்படி ஒரு நினைவு? என் கோவிந்தனுடைய பூலோக ஸ்வர்க்கம் திருப்பதி வந்து எனக்கு எதுவும் ஆகாது எனை காக்கும் தெய்வம் இருக்கும் மலையில் எப்படி எனக்கு ஏதும் கெடுதல் நடக்கும்? நிச்சயம் என் ஏழுமலையப்பன் இருக்க ஏன் நான் கவலையுற வேண்டும் என நினைத்து மனம் உரக்க கோவிந்தா! கோவிந்தா..கோவிந்தா என கதறுகிறது. அதே சமயம் அருகில் இருந்த டீ கடையில் இருந்து சர்க்கரை எடுத்து ஓடி வந்து என் வாயில் போட்டு தண்ணீர் விட்டிருக்கிறார்கள். அது துளி உள்ளே போனதும் விழிப்பு நிலை வந்து மீண்டும் நடந்து வரிசைக்கு சென்று நின்றோம். ஆனால் என் உடம்பு தள்ளறது. நிற்கவே முடியலை. பரபரப்பா இருக்கும் உறவினரிடம் என்ன சொல்ல? என்னை ஏண்டாப்பா கூட்டி வந்தோம்னு கடுப்பாய் இருக்கிறார்கள். ஆனால் என்நிலை கோவிந்தருக்கு மட்டுமே தெரிந்து இருந்து போலும். சட்டேன்று 6 மணிக்குதான் தரிசனம் என சொல்லி வரிசையை நிறுத்தி விட்டனர். இப்போ மணி 4 1/2. அப்பாடா ன்னு உட்கார்ந்து அப்படியே கண்ணை மூடி விட்டேன். திடீர் என ஆறு மணியாச்சு சீக்கிறம் எழுந்து தரிசனத்திற்கு கிளம்புங்கள் என குரல் கேட்டு வழித்து எழுந்து ஓடினேன். ஆஹா என்னே என் தெய்வத்தின் அன்பு அரைமணியில் தரிசனம் தந்து பஸ் ஏறி கீழ் திருப்பதி வந்து ரயிலிலும் கரெக்டா ஏறிட்டோம்.

அதே போல் என் பெண்ணும், மகனும் நன்கு படித்து மெரிட்டில் டாக்டர் படித்து இன்று என் பெண் கண் டாக்டராகவும், என் மகன் ஆர்த்தோ டாக்டராகவும் பணி புரிகின்றனர். இருவரும் நல்ல மணம் புரிந்து குழந்தைகள் பெற்று தொண்டு செய்கின்றனர் என்றால் அது என் பெருமாள் என்னை வேண்டிக்க வைத்து, பின் வேண்டுதலை நடத்தி கொடுத்து என்றும் எங்களோடே துணையாக இன்றளவும் இருக்கிறார். எல்லாம் அவர் செயல். திருமார்பில் திருமகளோடு என் மனக்கோவிலில் இன்றும் காப்பவர் என் கோவிந்தரே.
கோவிந்தா... கோவிந்தா... கோவிந்தா...
நீங்களும் உங்கள் வாழ்வில் பெருமாளின் அற்புதங்களை எங்களுக்கு அனுப்பலாம் உங்கள் பெயருடன் அதை பதிவு செய்வோம்
அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண்
9500074173

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!