Adhi Thiruvarangam ரங்கநாத பெருமாள் கோவில்

மூலவர் : ரங்கநாத பெருமாள்.
அம்பாள் : ரங்கவள்ளி தாயார்.
தீர்த்தம் : சந்திரபுஷ்கரணி , தென் பெண்ணைநதி.
தலவிருட்சம் : புன்னாக மரம்.
விமானம் : சந்தோமய விமானம்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தென்பெண்ணையாற்றின் தென்கரையில் ஆதிதிருவரங்கம் என்ற ஊர் உள்ளது. இங்கு ரங்கநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இயற்கை எழில்கொஞ்சும் வகையில் உள்ள இந்த கோவில் பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியது. இது சோழர் காலத்தில் கட்டப்பட்டது.

புராண வரலாறு :
சோமுகன் எனும் அசுரன் யாகத்தின் மூலம் தேவர்களை வெல்ல வேண்டுமென எண்ணினான். அதன்படி யாகத்தின் மூலம் பிரம்மாவிடம் இருந்து ரிக், யஜூர், சாம, அதர்வண ஆகிய 4 வேதங்களையும் கைப்பற்றி, எதிர்மறை செயல்களில் ஈடுபட்டான். இதற்கிடையில் வேதங்களை கைப்பற்றிய சோமுகன் எருமை கிடா உருவத்துக்கு மாறி விட, அவனை அழிப்பதற்காக தேவர்களும், முனிவர்களும் 10 கரங்கள் கொண்ட மகிஷாசுரமர்த்தினி என்னும் தேவதையை உருவாக்கினார்கள். மகிஷாசுரமர்த்தினி சோமுகனிடம் போரிடும் போது, அவன் எருமை உருவத்தில் இருந்து மாறி கடலில் சென்று பதுங்கி விட்டான். வேதங்கள் அவனிடம் இருந்ததால் உலகம் செயல்படாமல் இருளில் மூழ்கியது. இதனால் மிகுந்த கவலை அடைந்த தேவர்களும், முனிவர்களும், பிரம்மாவுடன் திருப்பாற்கடல் சென்று பெருமாளை பிரார்த்தனை செய்து வேதத்தை மீட்டுத் தருமாறு வேண்டினர்.
தேவர்கள், முனிவர்களின் வேண்டுகோளை ஏற்ற பெருமாள் மச்சஅவதாரம் (மீன் அவதாரம்) எடுத்து கடலில் ஒளிந்திருந்த சோமுகன் எனும் அசுரனை போரிட்டு வதம் செய்து, வேதங்களை மீட்டு பூவுலகிற்கு கொண்டு வந்தார்.
அவ்வாறு வேதங்களை பூவுலகிற்கு பெருமாள் கொண்டு வந்த இடம்தான் ஆதிதிருவரங்கம் ஆகும். இங்குதான் பிரம்மாவுக்கு பெருமாள் வேதங்களை உபதேசித்தார் என்று புராண வரலாறும் கூறுகிறது.

இக்கோவிலில் உள்ள மூலவர் கற்சிலைகளால் ஆனதில்லை. சுண்ணாம்பு, மூலிகை உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் (சுதை) வடிவமைக்கப்பட்டுள்ளது. 
ஆதிசேஷன் என்று அழைக்கப்படும் 5 தலைகள் கொண்ட நாகப்பாம்பின் சரீரத்தினால் ஆன படுக்கையின் மீது பெருமாள் பள்ளி கொண்டு இருப்பதுபோல் மூலவர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாகப்பாம்பு படம் எடுத்து குடையாக பிடிக்க அதில் பெருமாள் புன்முறுவலுடன் கிழக்கு திசையை பார்த்தபடி ஸ்ரீதேவியின் மடியின் மீது படுத்துள்ளார். பெருமாளின் இடது கால் பூமாதேவியின் மடி மீதும், வலது கால் பாம்பின் வால் சுழன்று அதன் மீது உள்ளது. வலது கையை சிரசின் பக்கம் வைத்து அபயமுத்திரையுடன் காட்சி அளித்து வருகிறார். வலது கையை கருடாழ்வார் உட்கார்ந்து தாங்கி கொள்கிறார். இடது கையால் பெருமாள் பிரம்ம தேவருக்கு 4 வேதங்களையும் உபதேசம் செய்கிறார். சுதையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதால் அதற்கு அபிஷேகம் செய்வதில்லை. மாறாக உற்சவருக்கு அனைத்து பூஜைகளும் செய்யப்பட்டு வருகிறது.

தல வரலாறு :
கிருதாயுகத்தில் சுரதகீர்த்தி என்ற தொண்டை மன்னன் இருந்தான். அவனுக்கு எல்லா செல்வங்களும் இருந்தும், புத்திர பாக்கியம் இல்லை. மனம் வருந்திய அந்த மன்னன் நாரத முனிவர் அறிவுரைப்படி மனைவியுடன் இக்கோவிலுக்கு வந்து மனம் உருகி வேண்டினான். இவர்களது வேண்டுகோளை ஏற்ற பெருமாள் அவர்களுக்கு ஆசி வழங்கி, புத்திர பாக்கியம் கிடைக்க செய்தார். அதன்படி அவர்களுக்கு 4 மகன்கள் பிறந்ததால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இக்கோவிலை ஆழ்வார்கள் யாரும் மங்களாசாசனம் செய்யவில்லை என்று கருத்து நிலவி வருகிறது. இருப்பினும் பெரியாழ்வார் தன்னுடைய பாசுரத்தில் இக்கோவில் பற்றி பாடியதாக குறிப்பிடுகிறார்கள். 

அதில், பெருமாள் பிரம்மாவுக்கு வேதங்களை கற்றுக்கொடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த கோவிலை பற்றியது தான் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்க பெறவில்லை என்றும் கூறுகிறார்கள். தலங்களை 3 பிரிவாக பிரிக்கிறார்கள். அதன்படி புராண, அபிமானிய, திவ்ய தலங்கள் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவில் புராண காலத்திலேயே உள்ளதால் 108 திவ்ய தலங்களில் இக்கோவில் இடம் பெறவில்லை என்ற தகவலையும் ஆராய்ச் சியாளர்கள் தல வரலாறாக கூறுகின்றனர்.

தீர்த்தம் :
சந்திரன் தனது மனைவிகளின் சாபத்தினால் அழகு குறைந்து ஒளி மங்கி பொலிவு இழந்து வருந்தினான். பின்னர் தேவர்களின் அறிவுரையின் படி இக்கோவிலுக்கு வந்த சந்திரன், பெருமாளை வேண்டி தனது குறைகள் நீங்கப் பெற்றான். சந்திரன் இக்கோவிலுக்கு தென் கிழக்கில் உள்ள கிணற்றில் நீராடி தவம் செய்ததால் இந்த தீர்த்தத்துக்கு சந்திரபுஷ்கரணி என்ற பெயர் உருவானது.

பல்வேறு சிறப்புகளை வாய்ந்த இக்கோவிலில் கிருஷ்ணருக்கு தனி சன்னிதி, பெருமாள், தாயார் சன்னதி, வரதராஜபெருமாள் சன்னதி, நவராத்திரி மண்டபம், விஷ்வக்சேனர் சன்னிதி, ஸ்ரீவேதாந்த தேசிகர் சன்னிதி, ஆண்டாள் சன்னிதி, ஊஞ்சல் மண்டபம், வாகன மண்டபம் அமைந்துள்ளது. கோவிலுக்கு அருகில் சிறிய ஆஞ்சநேயர் சன்னி தியும் உள்ளது. மூலவரின் பாதத்துக்கு நேராக வெளிபுறத்தில் பெருமாள் திருவடி உள்ளது. இந்த திருவடியை தொட்டு வணங்கினால் மூலவர் திருபாதத்தை வணங்கும் பலன் கிட்டும் என்பதால் பக்தர்கள் இந்த திருவடியை வணங்கி செல்கிறார்கள். இக்கோவில் தல விருட்சம் புன்னை மரம்.
பெரிய பெருமாள் :
பெருமாளின் அவதாரங்களில் முதல் அவதாரம் மச்ச அவதாரம், முதல் யுகம் கிருதாயுகம் என்பதால் இவர் ‘பெரிய பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார். ஆதியிலே தோன்றியதால் தமிழ்நாட்டில் உள்ள வைணவ தலங்களில் முதன்மையானது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சப்த ஸ்வரங்கள் :
இக்கோவிலில் ராமருக்கு தனி சன்னிதி உள்ளது. திருவடிக்கு அருகில் உள்ள ராமர் சிலையை தட்டினால் 7 ஸ்வரங்களும் வெளிப்படுகிறது. இதனால் இக்கோவில் சப்த ஸ்வரங் களுக்கு உரிய கோவிலாக கருதப் படுகிறது.

கல்வி தலம் :
ரெங்கநாதர் எனும் பெருமாள் பிரம்மாவுக்கு 4 வேதங்களையும் (ரிக், யஜூர், சாம, அதர்வண) சொல்லி கொடுத்த இடம் ஆதிதிருவரங்கம் என்பதால் இக்கோவில் கல்வி தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு வந்து பெருமாளை தரிசனம் செய்தால் கல்வி செல்வம் கிடைக்கும். குழந்தை பாக்கியம், திருமணம் ஆகாதவர்களும், வேலைவாய்ப்பு கிடைக்காதவர்களும் இங்கு வந்து வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

திருவிழா :
வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ணஜெயந்தி, ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், கார்த்திகை தீபம், நவராத்திரி போன்ற திருவிழாக்கள் இங்கு நடைபெறுகிறது.

பன்னீர்புஷ்ப மரம் :
கோவிலுக்குள் மருத்துவ குணம் கொண்ட பன்னீர்புஷ்ப மரம் உள்ளது. இந்த மரம் பகலில் பூக்காது. மாலை 6 மணிக்கு பிறகு பூக்கும். இந்த பூக்களை பறித்து பெருமாளுக்கு இரவு நேர பூஜைக்கு பயன்படுத்தப்படுகிறது. இது தவிர கோவிலுக்குள் மகிழம் பூ மரமும் உள்ளது.

அமைவிடம் :
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் உள்ளது. மணலூர்பேட்டையில் இருந்து ஆதிதிருவரங்கத்துக்கு அடிக்கடி பஸ் வசதி உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 45 நிமிட பயணத்தில் ஆதிதிருவரங்கம் சென்று, சற்று தொலைவில் நடந்து சென்றால் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள இக்கோவிலை சென்றடையலாம்

திறக்கும் நேரம் :
இக்கோவிலில் பெருமாளை தினந்தோறும் காலை 5 மணியில் இருந்து இரவு 8 மணி வரை தரிசனம் செய்யலாம். 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!