திருவரங்கத்தில் ராமாநுஜர் வாழ்ந்து வந்த காலத்தில் ஒருநாள் அவரிடம் வந்த ஒரு நாத்திகர், “சுவாமி! நீங்கள் எதற்காக இறைவனை வணங்கும்படி எல்லோருக்கும் அறிவுறுத்துகிறீர்கள்? நான் தினமும் உழைக்கிறேன், அதற்கேற்ற ஊதியத்தைப் பெறுகிறேன். என் குடும்பத்தை என் உழைப்பால் நன்றாகப் பார்த்துக் கொள்கிறேன். இதற்குமேல் இறைவனின் அருள் எனக்குத் தேவையில்லையே! நான் ஏன் இறைவனை வழிபட வேண்டும்?” என்று கேட்டார்.

அதற்கு ராமாநுஜர், “இனிமேல் நீங்கள் பெறப்போகின்ற செல்வத்துக்காகவோ, மகிழ்ச்சிக்காகவோ இறைவனை வழிபட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் இதுவரை நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்றால் அதற்கு இறைவனின் அருள் தான் காரணம்!” என்றார்.

“எப்படி?” என்று கேட்டார் நாத்திகர்.

“நீங்கள் தினமும் உழைக்கிறீர்கள் என்றால் உங்களது கை கால்கள் வலிமையாக இருப்பதால் தானே அது சாத்தியமாகிறது? உலகில் எத்தனையோ பேர் கை கால் ஊனமுற்றவர்களாக உள்ளார்களே! அப்படி இல்லாமல், உங்களுக்கு நல்ல உடல் உறுப்புகளையும், ஆரோக்கியத்தையும் இறைவன் தானே அருளியுள்ளார்? நீங்கள் வயலில் விதை விதைத்தாலும், சரியான நேரத்தில் மழை பொழிந்தால் தானே பயிர் விளையும்? அந்த மழையைச் சரியான நேரத்தில் தருபவர் இறைவன் தானே..."

"உங்களுக்கு நிறைய வருமானம் கிடைத்தாலும், குடும்ப உறுப்பினர்களுக்குள்ளே மனஸ்தாபங்கள் ஏற்பட்டால், நிம்மதி இல்லாத நிலை ஏற்படுமே! எவ்வளவு செல்வம் இருந்தாலும், நிம்மதி இல்லாவிட்டால் பயனில்லை. அந்த நிம்மதியை உங்கள் குடும்பத்துக்குத் தந்தவன் இறைவன் தானே? இப்படி ஏற்கனவே இறைவன் நமக்குச் செய்த எத்தனையோ உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத்தான் அவரை நாம் வணங்க வேண்டும் என்றே னே ஒழிய, இனி அவரிடம் ஒன்றைப் பெறுவதற்காக அல்ல!” என்றார் ராமாநுஜர்.

“அருமையான விளக்கம்! ஆனால் ஒருவர் நமக்கு சிறிய உதவி செய்தால் கூட, அதை தான் செய்ததற்கு நிறைய விளம்பரங்கள் செய்வதைப் பார்க்கிறோம். இத்தனை உதவிகள் செய்த இறைவன் ஏன் அதை வெளிக்காட்டிக் கொள்வதில்லை? நாம் இறைவனைக் கண்ணால் காண இயலாதா?” என்று கேட்டார் நாத்திகர்.

“சத்துவ குணம் நிறைந்த மனம் படைத்த ஞானியர்க்கு இறைவன் தன்னைக் காட்டியருளுவார். மற்றவர்களுக்கு இறைவன் மறைந்திருந்தபடியே அருள் புரிவார்!” என்று அதற்கு விடையளித்த ராமாநுஜர்,
அதை விளக்க ஒரு கதையும் சொன்னார். 

ஒரு மகன் தன் தாய் தந்தையரிடம் சண்டையிட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று, அவ்வூரிலுள்ள ஒரு சத்திரத்தில் தங்கினான். அன்றிரவு சத்திரத்தில் மோர் சாதம் அனைவருக்கும் பரிமாறப்பட்டது. ஆனால் இந்த பையனோ இரவில் இட்லி சாப்பிட்டு பழக்கப்பட்டவன்.

சத்திரத்தில் வழங்கப்பட்ட மோர் சாதத்தை அவன் உண்ண மறுத்து விட்டான். தன் மகனின் குணத்தை அறிந்த அவனது தாய்,
ரகசியமாக இட்டிலியைத் தயார் செய்து அந்தச் சத்திரத்துக்கு எடுத்துச் சென்றாள். 

சத்திரத்திலுள்ள சமையல்காரரிடம், “என் மகனுக்கு இதைக் கொடுத்து விடுங்கள்! நான் நேரடியாகத் தந்தால், என் மீது உள்ள கோபத்தால் அவன் சாப்பிட மாட்டான்.
எனவே நீங்கள் தருவது போல் அவனிடம் தந்து விடுங்கள்!” என்று சொன்னாள் அந்தத் தாய்.

“அதுபோலத் தான் இறைவனும். இறைவன் நமக்கெல்லாம் சுவாமி. நாம் அனைவரும் அவருக்குத் தொண்டர்கள். இந்த உறவு என்பது என்றும் மாறவே மாறாது. அவரது தொண்டர்களாகிய நாம் அவரை மறந்தாலும், நமது தலைவனாகிய இறைவன் இந்த உறவை மறப்பதில்லை. தன் மகன் தன்னை வெறுத்தாலும், தாய் அவனது இருப்பிடம் தேடிச் சென்று அவனுக்குப் பிடித்த உணவை அளிப்பது போல், இறைவனை நாம் வெறுத்தாலும் நமக்குரிய அனைத்து நன்மைகளையும் அவர் செய்கிறார்.

அந்தத் தாய் தன் அடையாளத்தை வெளிக்காட்டிக் கொள்ளாததைப் போலவே இறைவனும் தான் செய்த உதவியைப் பிரகடனப்படுத்திக் கொள்வதில்லை!” என்று விளக்கினார்.

 மனம் மாறிய நாத்திகர் "அப்படியானால், நான் என்ன செய்ய வேண்டும்?” என்று ராமாநுஜரிடம் கேட்டார்.

“அரங்கனே நம் அனைவருக்கும் தலைவன். நாம் அவனது தொண்டர்கள். நமக்கும் அவனுக்கும் இருக்கும் உறவை உணர்ந்து அவனது திருவடிகளில் சரணடையுங்கள்!” என்றார் ராமாநுஜர்.

நமக்கு எத்தனைப் பேருதவிகள் செய்தாலும், தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பதால், திருமால் ‘ஸம்வ்ருத:’ என்றழைக்கப்படுகிறார். ‘ஸம்வ்ருத:’ என்றால் மறைந்திருப்பவர் என்று பொருள்.