பூரியில் கருமாபாய் என்ற பக்தை வசித்தாள். தினமும் அதிகாலையில் கோயிலுக்குச் சென்று ஜெகந்நாதப்பெருமாளை தரிசனம் செய்த பின்னே, வேலைகளைத் தொடங்குவாள். அன்னதானமும் செய்வாள்.

பக்தி இருந்தாலும், நீறுபூத்த நெருப்பாக விரக்தியும் அவளிடம் குடி கொண்டிருந்தது.
தன் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களை எண்ணி உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தாள். வெளிப்படையாக யாரிடமும் காட்டிக் கொண்டதில்லை.

ஒருமுறை சனிக்கிழமை காலை வேளை. பாண்டுரங்க பக்தர் ஒருவர் கருமாபாயின் வீட்டிற்கு வந்தார். அவருக்கு அன்னமிடும் பாக்கியம் தனக்குக் கிடைத்ததை எண்ணி அவள் மகிழ்ந்தாள்.

அவருக்கு பாதபூஜை செய்தாள். மனையில் அமரச் செய்து சாதமிட்டாள். கருமாபாயின் வரவேற்பைக் கண்ட அவர் மகிழ்ந்து, தாயே! உன் தயாள சிந்தனையை கண்டு மகிழ்ந்தேன். உன் மனதில் மகிழ்ச்சி நிலைத்திருக்கட்டும், என்று வாழ்த்தினார். அதைக்கேட்ட கருமாபாய் கண் கலங்கினாள்.

அம்மா! எதற்காக கலங்குகிறீர்கள்? உங்களுக்கு நேர்ந்த துன்பம் என்ன என்பதைக் கூறுங்கள், என்றார் வந்தவர். கருமாபாய், சுவாமி! இன்பம் என்பதே அறியாத பாவி நான். என் வேதனைக்கு அளவில்லை. எனக்கு திருமணமாகி குழந்தை பிறந்தது. ஆனால், தாய்மை அடைந்த சில மாதங்களிலேயே என் கணவர் இறந்து விட்டார். இருந்தாலும், வைராக்கியத்துடன் அவனை வளர்த்து ஆளாக்கினேன்.

அவனுக்கு திருமணம் செய்து வைத்தேன். என் மகனும் ஒரு குழந்தைக்கு தந்தையானான். ஆனால், அப்போதும் என் வாழ்வில் விதி விளையாடியது. பேரன் பிறந்த சில மாதங்களிலேயே என் மகனும், மருமகளும் விபத்தில் சிக்கி இறந்து விட்டனர்.

தலையில் இடி விழுந்தது போல அதிர்ந்து போனேன். மிகுந்த சிரமத்திற் கிடையே என் பேரனை வளர்த்து வந்தேன். அப்போது பாழாய்ப் போன விதி என்னை விடுவதாக இல்லை. அவனும் நோய் வாய்ப்பட்டு இறைவனிடமே சென்று விட்டான். செய்வதறியாமல் நடை பிணமாகி விட்டேன்.

இதுவே, என் மன வேதனைக்கு காரணம், என்று அழுதாள். இந்த துக்க சம்பவங்களைக் கேட்ட பாண்டுரங்க பக்தர் மவுனமானார்.

அம்மா! அழாதீர்கள். இம்மண்ணில் பிறந்த உயிர் ஒருநாள் இறந்து தான் ஆகவேண்டும் என்பது விதி. இதிலிருந்து ஒருவரும் தப்பிக்க முடியாது. இருந்தாலும் இன்பத்தைக் கண்டு மகிழ்வதும், துன்பத்தைக் கண்டு துவள்வதும் நம் இயல்பாக இருக்கிறது.
பூர்வ ஜென்ம விதிப்படி தான், அவரவர் ஆயுள் இருக்கும் என்ற உண்மை நீங்கள் அறியாதது அல்ல. என்றாவது ஒருநாள் நாமும் இறந்தாகவேண்டும் என்பதையும் அறிவீர்கள்.

கடவுள் கொடுத்த இப்பிறவியைப் பயனுள்ளதாக்க வேண்டியது நம் கடமை. அதனால், பாண்டுரங்கனைத்தவிர வேறெந்த சிந்தனைக்கும் இடம் தராதீர்கள். உங்கள் கைகள் இரண்டும் அவனுக்கே பணி செய்யட்டும். கால்கள் அவன் திருக்கோயிலையே நாடட்டும். மனம் அந்த ரங்கனின் திருவடித் தாமரைகளையே சிந்தித்திருக்கட்டும், என்று ஆறுதல் வார்த்தை கூறினார்.
அவரின் ஞான போதனை கேட்ட கருமாபாய் மனச்சுமையை இறக்கி வைத்தது போல உணர்ந்து ஆறுதல் அடைந்தாள். தான் கொண்டு வந்திருந்த பாலகிருஷ்ணன் விக்ரஹத்தை அவளிடம் கொடுத்த பக்தர், அம்மா! இந்த உலகில் நம்மோடு வரும் உறவுகளெல்லாம் தற்காலிகமானவையே.

இந்த நீலமேக சியாமள வண்ணனே நமது நிரந்தர உறவினன். அவனே தாயாக, தந்தையாக, பிள்ளையாக, நண்பனாக இருந்து எப்போதும் காத்து நம்மைக் கரைசேர்ப்பவன், என்றவர், ஒரு மந்திரத்தையும் உபதேசம் செய்து, அதை தினமும் ஓதி மனச்சாந்தி பெறும்படி கூறி புறப்பட்டார்.

அன்றுமுதல் கருமாபாயும் அந்த விக்ரகத்தின் முன் அமர்ந்து, கண்ணா! என் கலி தீர்க்க வந்தவனே! இன்று முதல் என் துன்பம் உன்னால் தீர்ந்தது, என்று சொல்லி வணங்கி வந்தாள். அதுவரை காணாத புது வித சந்தோஷம், அவளது உள்ளத்தில் கரைபுரண்டது. எப்போதும் சின்னக் கண்ணனின் நினைப்பிலேயே மூழ்கினாள்.

பாசம் மிக்க தாயாக, அந்தக் கண்ணன் சிலையை மடியில் வைத்துக் கொள்வாள். காலையில் துயில் எழுந்ததும் கண்ணனை நீராட்டுவாள். பட்டுச் சட்டை அணிந்து அலங்காரம் செய்வாள். கன்னத்தில் அன்போடு முத்தமிடுவாள். பால், அன்னம் வைத்து பாட்டுப் பாடி ஆராதனை செய்வாள்.
இதுவே அவளின் அன்றாடப் பணியாக மாறியது. ஒருநாள், அவள் பொழுது புலர்ந்தது தெரியாமல் ஏதோ அசதியில் அயர்ந்து தூங்கிவிட்டாள். கண் விழித்ததும் கண்ணன் ஞாபகம் வந்துவிட்டது. குளிக்காமலேயே அடுப்படிக்கு சென்று, பால் காய்ச்ச ஆயத்தமானாள்.

அப்போது, கருமாபாய்க்குத் தெரிந்த பெரியவர் ஒருவர் தற்செயலாக வந்தார். அவள் குளிக்காமல் அடுப்படியில் பால் காய்ச்சுவதைப் பார்த்து, பக்திக்கு ஆச்சாரம் மிக முக்கியம் என்பது தெரியாதா?

காலையில் குளித்த பின் தான் பகவானுக்குப் பிரசாதம் செய்ய வேண்டும் என்பது கூட தெரியாமல் பாவம் செய்கிறாயே! என்றாள்.

ஐயா! எங்கள் வீட்டுக் குட்டிக்கண்ணன் எழும் நேரமாகி விட்டது. பாவம்! குழந்தைக்குப்பசிக்குமே என்று குளிக்காமலேயே அடுப்படிக்கு வந்து விட்டேன், என்றாள். அன்றுமுதல் குளிக்காமல் அடுப்படிக்குள் நுழைவதில்லை என்று உறுதியெடுத்தாள்.

கருமாபாயின் பக்தியை உலகுக்கு உணர்த்த ஜெகந்நாதர் திருவுள்ளம் கொண்டார். அன்றிரவு கோயில் அர்ச்சகர் கனவில் தோன்றிய அவர், இவ்வூரில் கருமாபாய் என்னும் பரம பக்தை ஒருத்தி இருக்கிறாள். அவளிடம்சென்று, ஆச்சாரத்தை விட பக்தி தான் முக்கியம்.

குளிக்காமல் செய்தாலும், அவள் படைக்கும் பால் பிரசாதத்தை விருப்பத்தோடு நான் ஏற்று மகிழ்கிறேன், என்று தெரிவிக்கும்படி ஆணையிட்டார். பொழுது புலர்ந்ததும் கருமாபாயின் வீட்டுக்கு அர்ச்சகர் புறப் பட்டார்.

தான் கனவில் கண்ட காட்சியை அவளிடம் தெரிவித்தார். இவ்விஷயத்தைக் கேட்டதும் அவள் கண்கள் குளமானது. பூஜை அறைக்குச் சென்று, கண்ணனின் விக்ரஹத்தை மார்போடு அணைத்துக் கொண்டாள்.

அப்போது, ஜெகந்நாதப் பெருமான் சங்கு, சக்கரத்தோடு காட்சியளித்தார். கருமாபாயைத் தன் திருவடித் தாமரைகளில் சேர்த்துக் கொண்டு அருள்புரிந்தார்.

ஜகந்நாத: ஸ்வாமீ நயநபதகாமீ பவது மே ॥
ஜகந்நாத: ஸ்வாமீ நயநபதகாமீ பவது மே ॥
ஜகந்நாத: ஸ்வாமீ நயநபதகாமீ பவது மே ॥
ஜகந்நாத: ஸ்வாமீ நயநபதகாமீ பவது மே ॥