பக்த கானோபா

சியாமளாதேவி கண்ணனின் மேல் பக்தி கொண்டவளாக இருந்தாள்.

அவளின் மகள் கானோபா தனது தாயை விட அதீத பக்தி கண்ணனின் மேல் கொண்டவளாக இருந்தாள்.

நாட்டியத்திலும், பாடல்கள் பாடுவதிலும் அதீத ஆர்வமுடையவளாக இருந்தாள்.

அவளின் அழகும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே சென்றது.

சியாமளாதேவி தனது மகளிடம் “நீ போய் அரசவையில் ஆடி பாடினால்
அரசன் தரும் பொன் பொருள் கொண்டு நமது வறுமையும் ஒழியுமே” என்றாள்.

‘அம்மா… என் ஆடலும், பாடலும் ஆண்டவனுக்கு மட்டுமே அர்ப்பணம், மாறாக, வேறு எந்த ஆடவனுக்காகவும் அல்ல, பொருள் மற்றும் புகழ் மீது எனக்கு ஆர்வமில்லை , கண்ணனின் அருளைத் தவிர, வேறு எந்த மானிடனையும் மனதாலும் தீண்ட மாட்டேன்…’ என்றாள்.

ஒருநாள்,

பண்டரிபுரம் செல்லும் பக்தர்கள், கானோபா வசிக்கும் ஊருக்கு வந்தனர்.

அவர்களிடம் பாண்டுரங்கனின் மகிமையை தெரிந்து கொண்ட கானோபா, பாண்டுரங்கனையே தன் பதியாக அடைய முடிவு செய்தாள்.

தாயின் அனுமதியுடன், பக்தர்களுடன் சேர்ந்து பண்டரிபுரம் சென்ற கானோபா, பாண்டுரங்கனை தரிசனம் செய்து, பாடியும், ஆடியும் அனைவரையும் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தினாள்.

இந்நிலையில், பண்டரிபுரத்திற்கு, பாண்டுரங்க தரிசனம் செய்ய வந்த அரசன், கானோபாவை பார்த்தான். பாடலையும் ஆடலையும் ரசித்தவன் அவள் அழகில் மயங்கினான்,

தன் வீரர்களை அழைத்து, ‘அவளை அந்தப்புரத்திற்கு அழைத்து வாருங்கள்…’ என்று கட்டளை இட்டான்.

கானோபாவிடம் தகவலை வீரர்கள் கூற கானோபா அரசனை சந்திக்க மறுத்தாள் வீரர்கள் “நீ வர மறுத்தால் உன்னை பலாத்காரமாக தூக்கி சென்று விடுவோம்…’ என்று மிரட்டினர் வீரர்கள்.

‘சற்றுப் பொறுங்கள்; இறுதியாக இறைவனை தரிசித்து வருகிறேன்” என்று கூறி, கோவிலுக்குச் சென்றாள்.,

‘பாண்டுரங்கா… உன் உடமையான என்னை வேறு ஒருவன் தீண்டலாமா… என்னை ஏற்றுக் கொள்…’ என்று கூறி, கண்ணீர் விட்டாள்.

உடனே,

அவள் உடலில் இருந்து மின்னலைப் போல ஒரு ஒளி வெளிப்பட, அப்படியே தரையில் சாய்ந்தாள் கானோபா.

அவளிடம் வெளிப்பட்ட ஒளி, பாண்டுரங்கனின் விக்கிரகத்திற்குள் புகுந்து மறைந்தது.

தான் விரும்பியபடியே, இறைவனுடன் கலந்து விட்டாள் கானோபா.

அவள் உடலை, பிரகாரத்தின் தெற்கு பகுதியில், சகல மரியாதைகளுடன் அடக்கம் செய்தனர்.

சிறிது நேரத்திலேயே அதிலிருந்து ஒரு மரம் முளைத்தது. இன்றும், பண்டரிபுரத்தில் பாண்டுரங்கன் கோவிலில் இருக்கும் அந்த மரத்தை, பக்தர்கள் வணங்கி, வழிபட்டு வருகின்றனர்.

அதை, ‘தாட்டி மரம்’ என அழைக்கின்றனர்.

ஆண்டவனிடம், பொன், பொருள் மற்றும் புகழை கேட்போர் மத்தியில், ஆண்டவனையே கேட்டு, அவரையே அடைந்த ஒரு சிலரில், கானோபா முக்கியமானவள்.

பண்டரிநாத் மகாராஜ் கீ ஜெய் …!
விட்டல விட்டல ஜெய் ஹரி விட்டல
விட்டல விட்டல பாண்டுரங்க விட்டல
பண்டரிநாத விட்டல

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!