தாயார் தன்னுடைய நீண்ட, அழகிய இரு திருவிழிகளால் பெருமாளைப் பார்க்கும்போது அவளுடைய கண்களில் காணப்படும் கருமை நிறமானது, பகவானின் திருமேனியைக் கருமை நிறம் உடையதாகச் செய்துவிடுகிறது. அதேபோல், பெருமாள் தன்னுடைய செவ்வரி ஓடிய திருக்கண்களால் தாயாரைப் பார்க்கும்போது, தாயாரின் திருமேனி செம்மை நிறம் கொண்டதாக மாறிவிடுகிறது. தாயாரின் கண்கள் ஏன் கறுப்பாகவும், பெருமாளின் கண்கள் ஏன் சிவந்தும் இருக்க வேண்டும் என்று நமக்குக் கேட்கத் தோன்றினால், அதற்கும் ஓர் அழகிய விளக்கத்தைச் சொல்லலாம்.

அதாவது, பெருமாளின் கரிய திருமேனியைத் தாயார் பார்த்துக் கொண்டே இருந்தபடியால், அந்தக் கரிய நிறம் தாயாரின் கண்களில் படிந்துவிட்டது; பெருமாள் தன் செவ்வரியோடிய கண்களால் தாயாரின் அழகிய திருமேனியைப் பார்த்துக் கொண்டே இருந்தபடியால், அவருடைய கண்களின் செம்மை நிறம் தாயாரின் திருமேனியில் செந்நிறமாகப் படிந்துவிட்டது. அப்படி கேட்டால் அப்படி சொல்லுவது, இப்படி கேட்டால் இப்படி சொல்லுவது. ஆக, இருவருமே ஒருவரை ஒருவர் அந்த அளவுக்கு அந்நியோன்னியமாகப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

அவர்கள் இருவரும் அப்படி ஏன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள வேண்டும்? இருவரும் சேர்ந்து நம்மைப் பார்க்கக்கூடாதா என்று நமக்குக் கேட்கத் தோன்றும்.

தாயார் பெருமாளைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், அவ்வப்போது கடைக்கண் பார்வையால் நம்மையும் பார்த்து கடாக்ஷிப்பாள். ஆனால், பெருமாள் தாயாரை மட்டுமே, அவளுடைய அழகிய பார்வை தன்னை விட்டு அகலாமல் இருக்கிறதா என்று மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பாராம். அதுவும் ஒருவகையில் நமக்கு நல்லதுதான். மஹாலக்ஷ்மியைப் பார்ப்பதை விட்டு, அவர் நம்மைப் பார்த்தால், நாம் செய்கின்ற தவறுகள் எல்லாம்தான் அவருடைய கண்களுக்குத் தெரியும். அப்படி அவர் நம்மைப் பார்த்து நம்முடைய குற்றங்களைக் கருத்தில் கொண்டுவிடக் கூடாது என்பதற்காகவே மஹாலக்ஷ்மி தாயார், அவருடைய பார்வை தன்னிடம் இருந்து விலகிவிடாமல்
பார்த்துக்கொள்கிறாளாம்!

பெருமாளின் கடாக்ஷம் நமக்குத் தேவை இல்லையா என்று கேட்டால், அவசியம் தேவைதான். ஆனால், எப்போது தெரியுமோ? பிராட்டியாரின் கடாக்ஷமானது நமக்கு ஏற்பட்டு, அதன் பயனாக நம்முடைய குற்றங்கள் எல்லாம் நீங்கிய நிலையில் அவளே பெருமாளின் கடாக்ஷத்தைப் பெற்றுத் தந்து, நம்மை மேன்மையடையச் செய்வாள். மஹாலக்ஷ்மி பிராட்டியாரால் மட்டுமே நம்முடைய பாவங்களை எல்லாம் இல்லாமல் தீர்க்கமுடியும்.

ஓம் நமோ வேங்கடேசாய !

கோவிந்தா ஹரி கோவிந்தா