மூலவர் : தாமரையாள் கேள்வன், பார்த்தசாரதி
உற்சவர் : பார்த்தசாரதி
அம்மன்/தாயார் : தாமரை நாயகி
தீர்த்தம் : கட்க புஷ்கரிணி
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் : பார்த்தன் பள்ளி
மாவட்டம் : நாகப்பட்டினம் 
மாநிலம் : தமிழ்நாடு
மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார்

கவள யானைக் கொம்பொசித்த கண்ணனென்றும் காமருசீர்க் குவளை மேக மன்ன மேனி கொண்ட கோனென் னானையென்றும் தவள மாட நீடு நாங்கைத் தாமரையாள் கேள்வன் என்றும் பவள வாயா ளென் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே.
- திருமங்கையாழ்வார் 

திருவிழா
வைகுண்ட ஏகாதசி, ராமநவமி, தைப்பூசத்தன்று தீர்த்தவாரி விசேஷம். 

தல சிறப்பு
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 38 வது திவ்ய தேசம். பார்த்தன் பள்ளி. ராமர் யாககுண்டத்திலிருந்து காலைத்தூக்கி எழுந்து வருவது போல இரு தேவியருடன் காட்சிதருவது அதிசயத்திலும் அதிசயம். 

பொது தகவல்
இங்கு பெருமாள் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள விமானம் நாராயண விமானம் எனப்படுகிறது. அர்ஜுனனர், இந்திரன், பதினோரு ருத்திரர்கள் ஆகியோர் பெருமாளின் தரிசனம் கண்டுள்ளனர். மூன்றுநிலை ராஜகோபுரம் 75 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக உள்ளது. 

பிரார்த்தனை
குழந்தைபாக்கியம் வேண்டி இத்தல இறைவனிடம் பிரார்த்திக்கிறார்கள். 

நேர்த்திக்கடன்
பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, துளசிமாலை சாற்றி வழிபடுகின்றனர். 
தலபெருமை: 
உற்சவர் பார்த்தசாரதி பெருமாளின் கையில் கத்தி இருக்கும். அருகே கோலவல்லி ராமர் கையில் வில்லுடன் அருள்பாலிக்கிறார். இரண்டு தேவியருடன் ராமன்:தசரதர் குழந்தை பாக்கியம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். அப்போது நாராயணன் ராமனாக தனக்கு குழந்தையாக அவதரிக்க போகிறார் என்பது இவருக்கு தெரிந்தது. தன் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள நாராயணனை அவர் வேண்டினார். அப்போது யாக குண்டத்திலிருந்து நாராயணன் தன் இரு தேவியருடன் தோன்றி, தான் எப்படி இருப்பேன் என்பதை தசரதருக்கு காட்டினார். இருதேவியரும் ராமாவதார காலத்தில் அவருடன் வாழ முடியாது என்பதால், தங்கள் கண்குளிர ராமனை தரிசித்தனர். இந்தக் காட்சி சிலையாக வடிக்கப்பட்டு இத்தலத்தில் வைக்கப்பட்டுள்ளது. ராமர் யாககுண்டத்திலிருந்து காலைத்தூக்கி எழுந்து வருவது போல இரு தேவியருடன் காட்சிதருவது அதிசயத்திலும் அதிசயம். அர்ஜுனனுக்கு இங்கு தனி சன்னதி உள்ளது.

தல வரலாறு
கவுரவர்களிடம் நாடிழந்து, வனவாசம் சென்ற போது, அர்ஜுனன் தாகத்திற்கு தண்ணீர் தேடி அலைந்தான். ஓரிடத்தில் அகத்தியர் கமண்டலத்தை அருகில் வைத்து தியானத்தில் இருப்பதை பார்த்தான். தியானம் முடிந்து கண்திறக்கும் வரை தன்னால் தாகத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என்பதால் அகத்தியரின் தியானத்தை கலைத்து தனக்கு தண்ணீர் தருமாறு கேட்டான். அவரது அனுமதியுடன் கமண்டலத்தை திறந்தான். அதில் ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்லை. கேள்விக்குறியுடன் அகத்தியரின் முகத்தை பார்த்த அர்ஜூனனிடம், ""அர்ஜுனா! நீ எப்போதும் எது வேண்டினாலும் கொடுக்கும் கடவுளான கிருஷ்ணனிடம் அல்லவா கேட்டிருக்க வேண்டும்,'என்றார். தன் தவறை உணர்ந்த அர்ஜுனன்,""கிருஷ்ணா! கிருஷ்ணா!'என அழைத்தான். கிருஷ்ணனும் அர்ஜுனன் முன் தோன்றி தன்னிடமிருந்த கத்தியை அவனிடம் கொடுத்து,""இந்த கத்தியை வைத்து நீ எந்த இடத்தில் தோண்டினாலும் தண்ணீர் வரும்,'என்று கூறி மறைந்தார். அர்ஜுனனும் அந்த கத்தியால் தரையில் கீறி கங்கையை வரவழைத்து தன் தாகத்தை தணித்து கொண்டான். இந்நிகழ்ச்சி நடந்த இடம் பார்த்தன்பள்ளி என புராணம் கூறுகிறது. 
சிறப்பம்சம் 
ராமர் யாககுண்டத்திலிருந்து காலைத்தூக்கி எழுந்து வருவது போல இரு தேவியருடன் காட்சிதருவது அதிசயத்திலும் அதிசயம்.

அமைவிடம்
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியிலிருந்து 11 கி.மீ. தூரத்தில் உள்ளது பார்த்தன்பள்ளி. இத்தலத்திற்கு சீர்காழியிலிருந்து பஸ் வசதி உள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம் : சீர்காழி

அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை, திருச்சி.

தங்கும் வசதி : நாகப்பட்டினம்

திறக்கும் நேரம்
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 

முகவரி
அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில்,பார்த்தன் பள்ளி (திருநாங்கூர்)-609 106. நாகப்பட்டினம் மாவட்டம் 

போன் : +91- 4364-275 478.