நாம் மீண்டும் யுதிஷ்டிரனைத் தேடி காட்டுக்குள் சஹாதேவன் கண்டுபிடித்த நச்சுப் பொய்கையை அடைந்து விட்டோம். யக்ஷனுக்கு என்ன, சௌகர்யமாக ஒரு மரத்தின் மீது சாய்ந்து கொண்டு சாவதானமாக கேள்வி கேட்க தயாராகி விட்டான். பதில் சொல்பவனுக்குத்தானே சிரமம். கேட்பதற்கு என்ன கஷ்டம்? மேலும் யுதிஷ்டிரனின் பதிலை ஒட்டித்தான் அவன் சகோதரர்களின் ஒருவன் பிழைக்க வழி இருக்கிறது. எனவே யுதிஷ்டிரன் கவனமாக அடுத்த கேள்விக்கு காத்திருந்தான்.
37. இது ஒரு சாதுர்யமான கேள்வி. சாகப்போகிறவனின் நண்பன் யார்?
அவன் செய்த தான தர்மம்.
38 யார் எல்லோரும் தேவை என கருதும் வஸ்து?
அக்னி. தீ இல்லையேல் ஒருவராலும் வாழ இயலாதே.
39. எதை செய்தால் சாஸ்வதம் ?
எது ஒருவனை அது நற்கதிக்கு கொண்டு செல்கிறதோ அச் செய்கை.
40. எது அம்ருதமாகும்?
சுத்தமான பசும் பால் அம்ர்தத்துக்கு சமானம். சோமம் என்பதும் அதே.
41. உலகம் நிறைந்தது எது தெரியுமா?
சர்வ வியாபி காற்று.
42 எவன் தனித்தே பிரயாணிக்கிறான் ?
சூர்யன்.
43 மீண்டும் மீண்டும் பிறப்பவன் ?
சந்திரன்.
44. பனிக்கு மாற்று எது?
உஷ்ணம்.
45. எல்லாவற்றையும் தன்னுள் தாங்குவது எது?
பூமி.
46. சரியாக ஒரு செயல் நடக்க எது காரணம் ?.
புத்திசாலித்தனம் .
47. புகழ் எதில் அடக்கம்?
செய்யும் தர்மத்தில் .
48. சுவர்க்கம் எதில் ஆதாரம்?
சத்தியத்தில்.
49. சந்தோஷம் எதில் உள்ளது ?
நற்குணத்தில், நன்னடத்தையில்.
50. மனிதன் ஒருவனின் ஆன்மா என்று யாரைச் சொல்லலாம் ?
அவனால் தோன்றிய மகன்.
51. கடவுள் தந்த துணை யார்?
அவன் மனைவி. ( இது யுதிஷ்டிரன் சொன்னது . நானல்ல )
52. உயிர் வாழ அத்தியாவசியம் எது ?
மழை .
53. ஒருவன் வாழ்க்கை முடிவை நிர்ணயிப்பது எது?
அவனது தர்மம்
54. அவனை கடைசியில் சுகப்படுத்துவது?
அவனது ஈகை, நற்செயல்கள்
55. ஒருவனுக்கு செல்வம் சேர்வது எதால் ?
அயராது உழைப்பு ஒன்றே அவனுக்கு விரும்பியதைப் பெற உதவும்
56. உலகத்தில் ஒருவன் தேடிப்பெறும் வஸ்துக்களில் மிகச் சிறப்பானது எது?
கற்றோரிடமும், அறிவாளிகளிடமும் ஒருவன் பெரும் ஞானம்
56. ஒருவனுக்கு உலகில் கிடைக்கும் மிகச்சிறந்த ஆசி என்ன?
""நோய் நொடியின்றி ஆரோக்யமாக வாழ்வாயாக" என்ற ஆசி.
57. ஒருவனின் சந்தோஷத்தில் மிகச்சிறந்தது யாது?
"திருப்தி அடைவது" ஒன்று தான் ஒருவனை மிகவும் மகிழ்விக்கும்.
58 . ஒருவன் செய்யும் செய்கையிலே மிக பாராட்டக்கூடிய செயல்.
அஹிம்சை நிரம்பிய மென்மையான செயல்.
59. எதில் ஈடுபட்டு ஒருவன் வேண்டியதைப் பெறமுடியும்?
முத்தீ வளர்த்து மனமார ஈடுபட்ட வேள்வி.
60 எதை அடக்கி ஒருவன் துயரத்தை தவிர்க்கலாம்?
மனத்தை எவன் அடக்க முடிகிறதோ அவனுக்கு துயரமோ துன்பமோ கிடையாது.
61. எவனுடைய நட்பு சாஸ்வதமானது?
இறைவனுடைய நினைப்பில் ஆழ்ந்தவனிடம் கொண்ட நட்பு சாஸ்வதமானது.
62. எதை விட்டுவிட்டால் துயரமே அணுகாது?
கோபத்தை அறவே ஒழித்தவனுக்கு துயரம் ஏது.
63. எதை தவிர்த்தால் செல்வந்தன் ஆகலாம்?
ஆசையை விட்டுப்பார். உன்னைப்போல் கோடீஸ்வரன் யாரும் இல்லை.
64. வாழ்க்கையில் சந்தோஷம் பெற வழி என்ன?
உன்னிடம் கொஞ்சமாவது கருமித்தனம் அதை இப்போவே விடு. பிறகு பார் உலகிலேயே சந்தோஷமான மனிதன்.
65. பிராமணர்களுக்கு தானம் செய்வது ஏன்?
அதன் மூலம் ஆத்மா திருப்தி கிடைப்பதால்.
66. உன்னுடைய தான தர்மம் ஆட்டத்துக்கும் பாட்டத்துக்கும் போவதால் பயன் என்ன ?
உனக்கு பெருமை புகழ் என்று நினைப்பதால்.
67. சரி அப்படியானால், நீ கொடுக்கும் தானம் தர்மம் உன் பணியாட்களுக்கும், வேலையாட்களுக்கும் சென்றால்?
அவர்கள் உன்னிடம் நன்றியுடன் நீ இட்டதை செய்யவே.
68. அரசனுக்கு செலுத்தும் பணம் எதற்கு?
உனக்கு இருக்கும் பயம் போவதற்கு .
69. எதால் இந்த உலகம் போர்த்தப்பட்டிருக்கிறது தெரியுமா உனக்கு ?
அறியாமை ஒன்றினால் தான்.
70. உலகம் என்றால் எது?
நமது ஆன்மா தான் உலகம்.
71. உலகம் ஜொலிப்பது எதால்?
நற்குணத்தால். தீய நினைப்பும் செயலும் ஒளி தராது.
72. உன் நண்பர்கள் எப்போது உன்னை பிரிகிறார்கள்?
உன்னிடம் ஒன்றும் பேராது என்று தெரிந்துகொண்டால்.
அப்பா யக்ஷா உன் கேள்விக்கணைகள் இங்கு படிக்கும் எங்களையே வாட்டுகிறதே. ஏற்கனவே தாகத்தால் வாடும் யுதிஷ்டிரன் மேல் கொஞ்சம் கருணை காட்டேன். எப்படித்தான் அவன் உனக்கு பொறுமையாக பதில் சொல்கிறானோ. நாளை சந்திக்கிறோம் உங்கள் இருவரையும்