இதுவரை யக்ஷனின் 72 கேள்விகளுக்கு உடனே பதில் சொன்ன யுதிஷ்டிரன் மற்ற கேள்விகளை யக்ஷன் கேட்பதற்கு காத்திருந்தான். நாமும் வந்து சேர்ந்தாச்சே. கேள்வி பதில் தொடர்கிறது. ரசிப்போம், ருசிப்போம்,
73. யுதிஷ்டிரா, இதற்கு பதில் சொல்லேன். மனிதன் ஏன் விண்ணுலகு எய்த முடியவில்லை?
இந்த பூவுலக வாழ்க்கையின் பிடிப்பு அவனை விட்டு அகலாததால்.
74 .மனிதன் எப்போது செத்தவனாக வாழ்கிறான்?
தான் எல்லா நற்செய்கைகளும் அறிந்தும், இருந்தும் உபயோகிக்காமல், பரம ஏழையாக தாழ்த்திக்கொண்டபோது.
75. எப்போது ஒரு தேசம் உயிரற்றதாக காண்கிறது?
ஆளுவதற்கு சரியான அரசனோ தலைவர்களோ இல்லாதபோது அது செத்த நாடாகிறது.
76. யாகம் எப்போது பலனளிக்காமல் போகிறது?
ஸ்ரத்தையாக அதை போஷிக்க வேதம் உணர்ந்த பண்டிதர்கள் இன்றி .
77.ஹோமாக்னி எப்போது பலன் தராது?
வேதம் உணர்த்தும் ஆஹூதி, ஹோமத்தீயில் இட வேண்டிய பொருட்கள் மனமின்றி, சரியானபடி இடாதபோது.
78 எது உகந்த வழி என்று கொள்ளலாம் ?
இறைவன் மீது சிந்தனையோடு உலவும் ஞானிகள் காட்டுவதே.
79. எது நீர்?
ஆகாசமே. ஆகாசமின்றி மழை ஏது, பின் நீர் ஏது ?
80. எது ஆகாரம் ?
ஒன்றுக்கு மற்றொன்று. எது உண்கிறதோ அதுவே மற்றொன்றின் ஆகாரம்.
81 எது விஷம் ?.
யாசகம் வாங்கி அனுபவிப்பது.
82. எது நீத்தோர்க்கு செயப்படவேண்டிய ச்லாக்கியமான செயல்?
சிறந்த வேதமந்த்ரம் உணர்ந்த சரியான பிராமணனுக்கு அன்னமளித்தல்,
83. நேம நியமத்தை விளக்கு?
அவனவன் தனக்கு விதித்த, ஏற்றுக்கொண்ட ஸ்வதர்மத்தை விடாமல் கடைப்பிடிப்பதே.
84. தர்மம் என்பது?
மனக் கட்டுப்பாடு
85. சிறந்த பொறுமை எதுவோ?
துன்பம், இன்பம், உயர்வு, தாழ்வு, பெருமை, சிறுமை,எது வரினும் நிலை குலையாமல், அடக்கமாக அமைதியாக
எதையும் சமநிலையோடு ஏற்பது.
86 ஞானம் எது?
அண்டத்தை பிண்டத்தில் காணும் அறிவு . சத்யத்தை உணர்வது.
87."சமம் "என்றால் என்ன?
மனத்திற்குள் அடையும், காணும், வேற்றுமை இன்மை.
88. கருணை என்பது?
எல்லோரும் இன்புற்றிருக்கவேண்டுவது.
89. எது நேர்வழி?
எல்லோரிடமும் மதிப்பும் அன்பும் கொண்ட எளிய வாழ்க்கை.
90. எந்த பலம் கொண்ட எதிரியை கூட ஒருவன் மனது வைத்தால் வெல்ல முடியும்?
கோபத்தை
91. எந்த வியாதிக்கு நிவர்த்தியே இல்லை ?
பேராசைக்கு
92. எவன் புனிதன் ?
எவன் அனைத்துயிர்களிடம் அன்புடன் பழகி நன்மையே புரிகிரானோ அவனே உத்தமன்.
93. எவனை நாம் தூயவன் இல்லை என்போம்?
மனதில் அன்பு என்பதே தெரியாது அறியாது வாழ்பவனை.
94. எது அறிவு பூர்வமற்ற செயலாகும் ?.
அதர்மம் அநீதியான சிந்திக்காத மனம்போனபடி செய்த செயல்.
95. பெருமை என்றால் என்ன?
ஒவ்வொருவனின் உள்ளேயும் தானே வளரும் சுய கர்வமும் எதிர்பார்ப்பும் தான் .
96. எதை சோம்பேறித்தனம் என்று சொல்லலாம்?
ஸ்வ தர்மத்தையும் தனது அன்றாட கடமைகளையும் செய்யாததை.
97. எது உண்மையிலேயே துயரம்?
அறியாமை
98. எதை ரிஷிகளும், ஞானிகளும் சாஸ்வதம் என்பார்கள்?
விடாப்பிடியாக தனது கர்மானுஷ்டனங்களை செய்வதை, ச்வதர்மத்தின் படி ஒழுகுவதை.
99. எது தைர்யம் எனப்படும்?
ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வது.
100. எது உண்மையிலேயே நல்ல ஸ்நானம் ஆகும்?
மனசிலிருக்கும் அழுக்காறுகளை நீக்குவது.
(யுதிஷ்டிரா நூறு கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டாயே சபாஷ்.)
101. எதை ஒருவன் சிறந்த தர்மம் எனலாம்?
மற்றவரை காத்து ரக்ஷிப்பது
102. எவன் உண்மையிலேயே கற்றுணர்ந்தவன்?
தர்மத்தை அறிந்தவன் புரிந்தவன்
103. எது நாத்திகம்?
தன்னையே அறியாது, நம்பாது, இயற்கையின் ரகசியத்தை புரிந்துகொள்ளாது. தன்னால் எல்லாம் முடியும் என கனவு
காண்பது.
104 . எதை ஒருவனின் ஆர்வம் எனலாம்?
எதன் மூலம் ஒருவன் அடுத்தடுத்து பிறப்பு இறப்பு அடைய நேரிடுகிறதோ அதை.
106. எதை செய்வதை |ஒவ்வாத போட்டி மனப்பான்மை என்கிறோம்?
எதைச்செய்ய நினைத்தாலும், செய்தாலும், மனதை அடுத்தவர் செய்வதிலேயே செலுத்தி, மனதைப் பாழ்படுத்திக்கொள்வதை.
107. எது டம்பம்?
அறியாமை.
108. எவனை ஏளனத்துடன் பார்க்கிறோம் ?
நான் மட்டுமே தர்மத்தை கடைப்பிடிப்பவன் என்று டமாரம் அடிப்பவனை.
109. எதை அத்ரிஷ்ட தேவதை என்கிறோம்?
நாம் செய்யும் தான தர்ம பலனை.
110. எதை துர்க்குணம் என்கிறோம் ?
மற்றவரிடம் குறை காண்பதை, அபாண்டமாக பேசுவதை
111. செல்வம், ஆசை, தர்மம் இவை எப்போது ஒன்று கூடமுடியும்?
இல்லற வாழ்வில் கணவன் மனைவி இருவருமே ஒரே நோக்கோடு பரோபகார சிந்தனையோடு ஒருமித்து சேவை செய்யும்போது எதிர்மறையானவை கூட ஒன்று கூடிவிடும்..
112. மீள முடியாத நரகத்துக்கு எவன் செல்வான்?.
மீள முடியாத நரகமே அடுத்தடுத்து பிறப்பது தான். ஒரு ஏழையை வலியச்சென்று உசுப்பி விட்டு, அவனுக்கு நிறைய தானம் செய்வதாக ஆசை காட்டி
ஏமாற்றுபவன், வேதம் சொல்லும் விதிப்படி அனுசரிக்காமல் பொய்யுரைப்பவன், தானும் அனுபவிக்காமல் பிறர்க்கும் உதவாத செல்வமுடையவன் கட்டாயம் இந்த மீளா நரகம் செல்வார்கள்.
113. பிராமணன், பிராமணீயம் என்கிறோமே அது எதால் உருவானது? ஒரு குறிப்பிட்ட குலத்தில் பிறப்பதாலா, குணத்தின் அடிப்படையிலா, வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்பதாலா?
யார் வீட்டிலோ பிறப்பதாலோ, படிப்பதாலோ ஒருவன் பிராமணன் ஆகமாட்டான். அவனது அடிப்படை நல்ல குணமே, நல்ல எண்ணமே, நற்செய்கையே பிராமணீயம், அதை கடைப்பிடிப்பவனே பிராமணன். எவன் வேதங்களை அறிந்து அதன் படி நடக்கிறானோ, நல்ல பண்புகளை உடையவனோ, புலனடக்கம் கொண்டவனோ, அவன் பிராமணன்.
114. இனிய வார்த்தைகளையே பேசுபவன் என்ன பெறுகிறான்?
அவனை அனைவரும் நாடுகிறார்கள், மதிக்கிறார்கள்.
115. எதையும் ஆலோசிஹ்து செயல்புரிகிறவன் என்ன அடைகிறான்?
எதிலும் வெற்றி அவனை அடைகிறது.
116. நண்பர்கள் நிறைய உள்ளவன் வாழ்க்கை எப்படி இருக்கும்?
அவனைப்போல் சந்தோஷமானவன் வேறு யாரும் இல்லை.
117.தர்மத்தை கடைபிடித்தால் என்ன கிடைக்கிறது
முக்தி கிட்டும்
118. எவனுக்கு சந்தோஷம் கிடைக்கிறது.?
எவனுக்கு கடனே கிடையாதோ, எவன் வெளி தேசங்களுக்கு செல்லாதிருக்கிரானோ, எவன் பச்சிலையையே சமைத்து உண்கிறானோ, அவனே உண்மையில் சுகவாசி. சந்தொஷமானவன்.
119. எவன் முட்டாள்?
அன்றாடம் அருகிலிருந்தோர், தெரிந்தோர் எல்லாம் ஒருவர் பின் ஒருவராய் இறப்பதைக் கண்டும், தாங்கள் சாஸ்வதம்
என்று நினைப்போர் வடிகட்டின முட்டாள்களே.
120. எதை புரிந்துகொள்ளமுடியாது.?
தர்மத்தை வேதங்கள் சொல்வதும் ரிஷிகள் விளக்குவதும் தவிர்த்து தான் எதையோ புரிந்து கொண்டு
விளக்குபவனைப் புரிந்துகொள்ளமுடியாது.
121. எது அன்றாடம் நிகழ்வது ?
இந்த உலகம் ஒரு பெரிய பாத்திரம். ஆகாசம் அதன் மூடி. காலம் என்கிற சமையல்காரன் அசையும், அசையா வஸ்துக்களை அதில் போட்டு, இரவு பகல் என்கிற விறகை சூரியன் என்கிற தீ மூட்டி , எரித்து, சமைத்து, அதை பருவங்கள், மாதங்கள் என்கிற கரண்டியினால் கிளருகிரானே இது தான் அன்றாடம் நிகழ்வது.
122. உண்மையில் எவன் "புருஷன்" என்று சாத்திரங்கள் கூறுகிறது?
பயனோ பலனோ எதிர்பாராது உழைப்பவன் புருஷர்களில் உத்தமன் அனா மண்ணிலும் விண்ணிலும் புகழ் எய்துகிறான்.
123. எவன் எதிலும் நிறைந்து காணப்படுகிறான்?
விருப்பு வெறுப்பு, சுகம், துக்கம், வருவது, வந்தது, வரப்போவது இதெல்லாவற்றையும் ஒரே சமநிலையில் எதிர்கொள்கிறானோ அவனே பிரம்ம ஞானி (பிரம்மத்தை அறிந்தவன்) என்கிற சர்வ வியாபி.
பல்லாயிரம் வருஷத்துக்கு முன்பு தர்மன் இருந்து, அவனை யக்ஷன் இந்த கேள்விகள் கேட்டு, இந்த பதில்கள் வெளிவந்ததாக எழுதப்பட்டு, அது இன்றும் பெரும்பான்மையான பிரச்சினைகளுக்கு நமக்கு வாழ்வில் உதவும்போது எப்படிச்சொல்லி போற்றுவது என்று வார்த்தைகளைத் தேடிக்கொண்டு இருக்கிறேன். நான் யுதிஷ்டிரன் இல்லையே உடனே எடுத்துரைக்க!