கருட புராணம் - 17

17. தோஷ பரிகாரமும், முதன்மையானவர்களை பூஜித்தலும்

“நைமிசாரணிய வாசிகளே! இவ்வாறு திருமால் கூறியதும் கருடாழ்வார், ஸ்ரீ மந்நாராயனமூர்த்தியைத் தொழுது “ஜெனார்தனா! பிரேத ஜென்மத்தையடைந்தவன் அந்த ஜென்மதிலிருந்து எவ்வாறு நீங்குவான்? எவ்வளவு காலம் ஒருவனுக்குப் பிரேத ஜென்மம் பிடித்திருக்கும்? இவற்றைக் கூற வேண்டும்.” என்று பிரார்த்தித்தான்.

அதற்கு திருமால் அவனை நோக்கி கூறலானார்.

“பட்சி ராஜனே! பிரேத ஜென்மத்தையடைந்தவன், தன் உறவினர்களின் கனவில் தோன்றினாலும், துன்பத்திற்கு மேல் துன்பங்கள் செய்தாலும் அதைப் பற்றி பெரியோரிடம் தெரிவித்து அவர்கள் விதிக்கும் தர்ம விதிகளில் சித்தம் வைத்து மாமரம், தென்னை மரம், சண்பகம், அரசு முதலிய விருட்சங்களை வைத்துப் பயிர் செய்ய வேண்டும். மலர் செடிகளை உண்டாக்கி நந்தவனம், அமைக்க வேண்டும். பசுக்கூட்டங்களை வயிறார மேய்வதன் பொருட்டு பசும்புல் வளரத் தக்க நிலங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும். தண்ணீருக்காக குளம் வெட்ட வேண்டும். பகவத் கைங்கரியம் பாகவத கைங்கரியம் முதலியவற்றைச் செய்ய வேண்டும்.


“கங்கை, யமுனை, காவிரி, தாமிரபரணி முதலிய நதிகளில் நீராடித் தானதர்மங்களைச் செய்ய வேண்டும். துன்பங்கள் எப்போது வருகின்றதோ, அப்போதெல்லாம் இவற்றை எல்லாம் அவசியமாக செய்ய வேண்டும். செய்யாவிட்டால் துன்பங்கள் மேலும் மேலும் விருத்தி யாகும்.

“பிரேத ஜென்மத் தோஷத்தால் தர்மச் செயல்களில் புத்தி நாடாமலிருக்க கூடும். பக்தியும் ஏற்படாமல் போகலாம். புத்தி நாடாவிட்டாலும், பக்தி வராவிட்டாலும் எவன் ஊக்கத்துடன் முயன்று அந்தந்த தர்மச் செயல்களைச் செய்கிறானோ அவன் இன்பமடைவான்.

“அதனால் பிரேத ஜென்மத்தை அடைந்தவனும் இன்பமடைந்து பூவுலகத்தை யடைந்து அங்கு தனது பிரேத சரீரத்தை நீக்கிக் கொள்வான். அவன் தனது குலம் விளங்க ஒரு புத்திரனை உண்டாகிக் கொள்வான் என்றருளினார்.
                       
அதற்கு கருட பகவான் திருமாலை நோக்கி, “ஆராவமுதே! ஒருவனுக்கு தன் குலத்தில் ஒருவன் பிரேத ஜென்மமடைந்திருகிறான் என்பது தெரியவில்லை. அப்பிரேத ஜென்மமடைந்தவன் சொப்பனத்தில் வந்து சொல்லவுமில்லை. அப்படியிருக்க, அவனுக்கும் அவன் குலத்தினருக்கும் துன்பம் மட்டுமே உண்டாகிறது. அவன் பெரியோரிடம் அந்த விஷயத்தை சொல்லி செய்ய வேண்டியவை யாவை...? என்று கேட்கிறான்.

“அவர்களும் பிரேத ஜென்ம தோஷத்தால் தான் இத்தகைய துன்பங்கள் நேரிடுகின்றன என்று சொல்கிறார்கள். அப்போது அவன் செய்ய வேண்டியவை யாவை? அவற்றைச் சொல்ல வேண்டும்.” என்று கேட்டான். திருமால் கருடனை நோக்கி கூறலானார்.
                         
“ஒ! புள்ளரசே! இது போன்ற சமயங்களில் பெரியோர் செய்வதைச் சத்தியம் என்றே உறுதியாக நம்ப வேண்டும். ஸ்நானம், ஜெபம், ஓமம், தானம், தவம் முதலியவைகளால் ஒருவன் தன் பாவங்களை நிவர்த்தி செய்து கொண்டு, நாராயண பலி செய்தல் வேண்டும்.

“பாவங்களை நிவர்த்தி செய்து கொள்ளாமல் நாராயண பலி செய்வதற்கு முயன்றால் அது நிறைவேறாமல் செய்யும் பொருட்டுப் பூதப் பிரேதப் பைசாசங்கள் பெரிய தடைகளை ஏற்ப்படுத்தும்.

“புண்ணிய காலங்களில் புண்ணிய ஷேத்திரங்களில் பிதுர்களைக் குறித்து எவன் ஒருவன் தானதர்மங்களைச் செய்கிறானோ, அவன் பூதப் பிரேத பைசாசங்களால் தொந்திரவும், துன்பமும் அடைய மாட்டான்.
                         
“சரீரத்தை உண்டாகுவதாலும் நல்ல நெறிகளைப் போதிப்பதாலும். தாய், தந்தை, குரு மூவரும் முதன்மையானவர்கள். எந்தக் காலத்திலும் அவர்களைப் பூஜிப்பது மனிதனின் கடமை.

“தாய், தந்தை மரித்த பிறகு அவர்களைக் குறித்துத் தானம் தர்மங்களை எவன் செய்கிறானோ அவற்றின் பயனை அவனே அடைகிறான். புத் என்ற நரகத்திலிருந்து தாய், தந்தையரைக் கரையேற்றுவதனாலேயே மகனுக்குப் புத்திரன் என்ற பெயர் உண்டாயிற்று. எவன் ஒருவன் தாய் தந்தையர் சொற்படி நடவாமல் தன் பெண்டு பிள்ளைகளின் சொற்படி நடக்கிறானோ, புலையனிலும் புலையனாவான்.

“ஒ, கருடா! கிணற்றிலாவது நதியிலாவது விழுந்து மரித்தவனுக்கும், வாளால் வெட்டப்பட்டு இறந்தவனுக்கும் தற்கொலை செய்து கொண்டவனுக்கும் ஓராண்டுக் காலம் வரையிலும் எந்தவிதக் கிரியைகளும் செய்யலாகாது. கர்மம் செய்வதற்கும் குடும்பத்தில் திருமணம் முதலிய வைபவங்களையும் விசேஷ தர்மங்களையும் செய்யலாகாது. தீர்த்த யாத்திரை, சேஷ்திராடனம் முதலியவற்றிலும் ஈடுபடலாகாது. வருஷ முடிவில் கர்மம் செய்து அதன் பிறகு யாவுஞ் செய்யலாம்.” என்று கூறியருளினார்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!