கருட பகவான் ஆதிபகவனைத் தொழுது வணங்கி, “சர்வேசா! பூவுலகில் பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என்ற நான்கு வகை குலத்தினர் இருக்கிறார்கள் அல்லவா? அவர்களல்லாமல் மிலேச்சர் என்று ஒரு வகை அமைப்பினரும் இருகிறார்கலல்லவா? அவர்களில் பலர் பலவிதமாகயிருகின்றார்கள். அவர்கள் குறிப்பிட்ட காலத்தில் இறத்தலுக்குக் காரணம் என்ன என்பதை நவின்றருல வேண்டும்.” என்று வேண்டினான்.
நெடுமால் கருடனை நோக்கி, “நீ கேட்ட கேள்வி சிறந்தது தான். அதற்குரிய விடையைக் கூறுகிறேன் கேள். உயிரினங்கள் மரிக்கும் காலத்தில் ஜீவனைக் கவர்வதற்கென்றே காலன் என்பவன் நியமிக்கப் பெற்றிருக்கிறான்.
“உலகத்தில் வாழ்கின்ற ஜீவர்கள் அவர்கள் செய்யும் பற்பல விதமான தோஷங்களால் ஆயுள் குறைந்து மாய்கிறார்கள்.
“மரித்தவன் வீட்டில் உணவருந்துவோனும் பிறனுடைய மனைவியைப் புணர்வதற்கு இச்சிப்பவனும், தனக்குத் தகாத இழிதொழிலைச் செய்பவனும் வாழ்நாளை இழப்பார்கள்.
“இகவாழ்வுக்கும், பரலோக வாழ்வுக்கும் உறுதியான தான நல்வினைகளைச் செய்யாதவனும் பெரியோர்களைப் போற்றி பூஜி யாதவனும், தூய்மையில்லாதவனும், தெய்வபக்தி இல்லாதவனும் யம லோகத்தில் எப்போதும் உழல்வார்கள்.
“பிறருக்குக் கேடு நினைப்பவனும் பொய்யுரைப்போனும், ஜீவன்களிடத்தில் கருணையில்லாதவனும், சாஸ்திர முறைப்படி வாழாதவனும் தனக்குரிய அறநெறிகளைத் தவிர்த்து, பிறருக்குரிய கர்மங்களை செய்பவனும் யம லோகத்தில் வேதனைப்படுவார்கள்.
“புண்ணிய தீர்த்தம் ஆடாத நாளும், ஜெபவேள்விகள் செய்யாத திவசமும், தேவராதனை செய்யாத தினமும், புனிதரான மகான்களையும், உலகிற்கு நல்லவைகளை செய்யும் நல்லவர்களை வழிபடாத பகலும், சாஸ்திரம் உணராத நாளும், வீணாளேயாகும்.
“கருடா! மனிததேகம் என்ன, பூவுலகில் சஞ்சரிக்கும். எந்த ஜீவனின் தேகமும் நிச்சயமற்றது. நிராதாரமானதாக உள்ளது. சுக்கில சுரோணிதத்தால்(விந்து, நாதம்) உண்டாவது, அன்னபானாதிகாளால் விருத்தியடைவது.
“காலையில் வயிறு நிரம்ப உண்ட அன்னம் மாலையில் நசித்து விடும். உடனே பசிக்கும். மீண்டும் அன்னம் உண்ணாவிடில் மெய் தளரும் குலையும்.
“ஆசையால் உண்டான சரீரம் அநித்தியமானதென்றும் அது கர்ம வினையினால் வருவது என்றும் எண்ணி, மீண்டும் பூவுலகில் பிறவி எடுக்காமல் இருக்கும் பொருட்டு நற்கர்மங்களைச் செய்ய வேண்டும்.
“பூர்வ கர்மத்தால் வருகின்ற தேகத்தை யாருடையது என்று கூறலாம்? அதை வீணாகச் சுமந்து திரிந்து மெலிகின்ற ஜீவனுடையது என்று சொல்லலாமா? யாருக்கும் சொந்தமில்லை. ஜீவன் போன பிறகு புழுவாகவும் சாம்பலாகவும் அழியும் உடலானது. ஒருவருடையதும் அல்லவென்று அறிந்தும், சரீரத்தின் மீது ஆசை வைக்காமல் பகவத் பாகவத ஆசாரிய கைங்கரியங்களைச் செய்ய வேண்டும்.
“பாவங்கள் என்பவை மனம், வாக்கு, காயம் ஆகியவற்றால் செய்யப்படுகின்றன. அதிகமாக பாவங்களைச் செய்தவன் நாய், நரி முதலிய இழிந்த ஜென்மம் அடைவான்.
“ஜீவன் கர்ப்ப வாசம் செய்யும் காலத்தில் தாயினுடைய மல மூத்தராதிகளால் அதிகமாகத் துன்பங்களை அடைவான். இறப்பதை விட பிறப்பதில் உள்ளதான துன்பத்தையும், கர்மாதியையும் எண்ணி ஜீவனானவன் நல்ல ஒழுக்க நற்பண்புகளுடன் ஜீவிக்க வேண்டும்.
“தாய் வயிற்றிலிருந்து பிறந்தவன் பால்ய வயதில் உண்டான விளையாட்டுகளால் தனக்கு உறுதியாக உள்ளது எது என்பதை அறிவதில்லை. முதுமைப் பருவத்தில் சோர்வாலும் கிலேசத்தாலும் ஒன்றையும் உணர்வதுமில்லை. இவ்விதம் உறுதியை உணராமல் ஒழிபவரே மிகப் பலராவர்.
“பூர்வ ஜென்ம புண்ணியத்தால் உறுதியானதை உண்பவன் எவனோ அவனே நிரதசிய இன்ப வீடாகிய நமது உலகையடைவான். கர்ம வினைகளாலேயே ஜீவன் பிறந்து, பிறந்து இறக்கிறான்.
“பிறந்து அதிக வயது உலகில் வாழாமல் ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக மரிப்பது என்பது மகா பாவத்தினால் என்பதை அறிவாயாக. கொடிய பாவம் செய்தவனே பிறந்த உடனே மறித்து, மீண்டும் பிறந்து மடிகிறான். அவன் பிறத்தலுக்கும் இறத்தலுக்கும் கணக்கென்பதில்லை.
“பூர்வ ஜென்மத்தால் நல்ல நெறிப்படி வாழ்ந்து தான தர்மங்களை மனங்கோணாமல் செய்து வரும் சேதனன் பூமியில் பிறந்து தன் மனைவி மக்களோடு நெடுங்காலம் சுகமாக வாழ்ந்து இறுதியில் நல்லுலகம் சேர்வான்.
“ஒ, வைனதேயா! கற்பந்தரித்த ஆறு மாதத்துக்குள் அந்தக் கர்ப்பம் எந்த மாதத்திலாவது கரைந்து விழுந்ததாயின் விழுந்த மாதம் ஒன்றாயின் ஒருநாளும், இரண்டானால் இரண்டு நாட்களும், மூன்றாயின் மூன்று நாட்களும், நான்காயின் நான்கு நாட்களும், ஐந்தாயின் ஐந்து நாட்களும், ஆராயின் ஆறு நாட்களும், கர்ப்பத்தை கருவுற்றிருந்த மாதாவுக்கு மட்டுமே சூதகத் தீட்டு உளதாகும். பிதாவுக்கு அத்தீட்டு இல்லை.
“கருவழியாமல் பத்தாம் மாதத்தில் பிறந்து மூன்று வயதுக்குள் மாண்டால், இறந்த அந்தக் குழந்தையை உத்தேசித்து பால்சோறு ஊர்க்குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
“மூன்று வயதுக்குமேல் ஐந்து வயதுக்குள் ஒரு குழந்தை இறந்து போகுமானால் மேற்சொன்னது போலவே பலருக்கு அன்னம் கொடுத்தல் வேண்டும்.
“இவ்விதமில்லாமல் பிறந்த ஒரு மாதத்திற்குள் குழந்தை இறந்தால் அந்ததந்த வர்ணதாருக்குரியபடி செய்து தீர்த்தமும், பாலும், பாயசமும் முதலிய உணவுப் பொருட்களைத் திரவ வடிவில் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
“உலகில் பிறந்தவன் இறப்பதும், இறந்தவன் மீண்டும் பிறப்பதும் திண்ணமாகையால் இறந்த பிறகு மீண்டும் மறுபிறவி எடுக்காமல் மீளாவுலகெய்ய முயற்சி செய்ய வேண்டும்.
“இவைகளை முறைப்படி செய்யாவிட்டால், ஒரு நாளில் ஒரு வேளை கூட பசியாற, உண்ண வழியற்ற தரித்தரனுக்கு புத்திரனாகப் பிறந்து கூழ் குடிப்பதற்கு வகையில்லாமல் வருந்தி விரைவில் மடிந்து, மீண்டும் பிறப்பான்.
“ஒருவன், தான் இறந்தால் மறு ஜென்மத்திலாவது உயர்ந்த குலத்தில் பிறக்க வேண்டும். சகல சாஸ்திரங்களிலும் நிகரற்ற நிபுணனாக விளங்க வேண்டும் என்று கருதி அதற்குரிய கர்மங்களைச் செய்வதைவிட, ஜென்மமே வராமைக்கு உரிய கர்மங்களைச் செய்வதே மிகவும் நல்லது.
“தீர்த்த யாத்திரை, சேது புனித நதிகளில் நீராடியவர், மனத்தூயமையுடயவர், பொய் சொல்லாமல் இன்சொல் பேசுவான், சகல சாஸ்திர சம்பன்னனாவான். ஏராளமான சம்பத்துக்கள் இருந்தும், தானதர்மம் செய்யாதவன் மறுபிறவியில் தரித்தனனாக பிறப்பான். மனிதன் தனக்குள்ள சம்பத்துக்குத் தகுந்த படி தானதர்மஞ் செய்ய வேண்டும்.” என்று திருமால் கூறினார்.