கருட புராணம் - 20

20. செய்த பாவத்தினாலேயே உலகில் பிறவி எடுக்கும் ஜீவன்

ஸ்ரீயப்பதியான ஸ்ரீமந் நாராயனமூர்த்தியானவர் கருடாழ்வானை நோக்கி கூறலானார், “ஒ! காசிப் புத்திரனே! மேலே சொன்னதைத் தொடர்ந்து இனி, தான் செய்த பாவத்தினாலேயே உலகில் பிறவி எடுத்த ஜீவன் மரிக்கிறான்.

“கர்ப்பத்திலேயே கருவானது சிதைந்து விட்டால் ஒரு கிரியையும் செய்ய வேண்டியதில்லை. ஐந்து வயதுக்குட்பட்டு இருந்தால் சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி செய்து ஊர்க்குழந்தைகளுக்கு  பால் பாயாசம் போஜனம் முதலியவற்றை வழங்க வேண்டும்.

“குழந்தை இறந்த பதினொன்றாம் நாளும் பன்னிரெண்டாம் நாளும் சாஸ்திரத்தில் சொல்லியுள்ளது போலச் சில கர்மங்களை செய்யலாம். விருசொர்ச்சனமும் விசேஷ தானங்களையும் ஐந்து வயதுக் குழந்தை மரித்தர்காகச்  செய்ய வேண்டியதில்லை.

“மரித்தவன் பாலகனாயினும், இளைஞனாயினும், விருத்தனாயினும், உதககும்ப தானத்தை அவசியம் செய்ய வேண்டும்.

“மூன்றாம் வயது ஆவதற்குள் மரித்து விடுங்குழந்தைகளைப் பூமியில் புதைக்க வேண்டும்.

“இருபத்து நான்காவது மாதம் முடிந்து இருபத்தைந்தாவது மாதம் பிறந்தவுடனே இறந்த குழந்தைகளை அக்கினியில் தகனஞ் செய்ய வேண்டும்.

“பிறந்த ஆறு மாதங்கள் வரையில் சிசுவென்றும், மூன்று வயது வரையில் பாலகன் என்றும், ஆறு வயது வரையில் குமரன் என்றும், ஒன்பது வயது வரையில் பவுண்டகன் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
 
“ஐந்து வயதுக்கு மேல் பன்னிரண்டு வயது நிரம்பியேனும் மரித்துவிட்டால் விருஷோந்தம்  செய்ய வேண்டும். பால் தயிர் வெல்லம் சேர்த்து பிண்டம் போடல் வேண்டும்.

“குடம், குடை, தீபம் முதலியவற்றை தானம் செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால், மறுபிறவியில் மரமாகத் தோன்றுவான். அந்த மரமும் நெல் குத்தும் உலக்கையாக செய்யப்பட்டு விடும்.

“பூணுலை இடதுபக்கம் தரித்துக் கொண்டு, தருப்பையுடன் ஏகோதிஷ்டி போன்ற சிரார்த்தங்களைச் செய்தால், மரித்தவன் மறுஜென்மத்தில் நல்ல குலத்தில் பிறந்து தீர்க்காயுளுடன் வாழ்வான். நல்ல புத்திரனையும் பெறுவான்.

“தனக்குத் தன்னுடைய ஆன்மாவே புத்திரனாக ஜெனித்தல் உண்மை! ஆகையால் புத்திரன் இறந்து விட்டான் என்றால், அந்தப் புத்திரனுக்கு அவனுடைய தந்தையும், தந்தை மாய்ந்தால் அவனுடைய புத்திரனும் கர்மம் செய்ய வேண்டும். ஒருவன், தனக்குத்தானே புத்திரன் ஆகிறான் என்று வேதஞ் சொல்கிறது.

“தண்ணீர் நிறைந்த குடங்களை வரிசையாக வைத்து பகலில் அவற்றின் உள்ளே சூரியனைப் பார்த்தாலும், பௌர்ணமி இரவுகளில் சந்திரனைப் பார்த்தாலும் ஒவ்வொரு குடத்திலும் சந்திர சூரிய உருவங்கள் தெரிவது போல், ஒருவனே தனக்குப் பல புத்திரர்களாக பிறக்கின்றான்.

“அதனால்தான் தன் தந்தைகளைப் போன்ற உருவமும் அறிவும் ஒழுக்கமும் உடையவர்களாக விளங்குகின்றான். ஆயினும் குருடனுக்கு குருட்டுப் பிள்ளையும், ஊமைக்கு ஊமைப் பிள்ளையும், செவிடனுக்குச் செவிட்டுப் பிள்ளையும் பிறத்தல் என்பது இல்லை. எனவே தந்தைக்கு அமைந்துள்ள சிறப்பான அம்சங்களில் ஏதேனும் ஒன்று தயையனுக்கும் பொருந்திருக்கும்.” என்றார் திருமால்.

கருட பகவான் பரமபதியை வணங்கித் தொழுது, “ஜெகன்னாதா! பலவிதமான புத்திரர்கள் பிறக்கின்றார்கள். விலைமகளுக்கு பிறந்த புத்திரன் தந்தைக்கு கருமம் செய்யலாமா? அப்படி அவன் கருமஞ் செய்தால் அவனுக்கு நல்லுலகம் கிடைக்குமா? பெண் ஒருத்தியிருந்து, அவள் வயிற்றிலும் பிள்ளை இல்லை என்றால் அவன் மரித்தபின் அவனது கருமத்தை யார் செய்ய வேண்டும். இவற்றை விளக்கியருள வேண்டும்.” என்று கேட்க, பக்தவச்சலனாகிய பரமன், கருடனை நோக்கி கூறலானார்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!