கருட புராணம் - 25

25. பலவகை தானங்கள்

திருமால் திருவாய் மலர்ந்து கூறலானார். “கருடா, தானங்களைச் செய்யும் முறைகளையும் அத்தானங்களால் ஏற்படும் பயன்களையும் கூறுகிறேன் கேள்.

“தானங்கள் யாவற்றிலும் பருத்தி தானமே மிகவும் சிறந்தது. அந்தப் பருத்தி தானமே மகர்தானம் என்ற பெயரைப் பெற்றது. அறப்படி வாழ்ந்து அறங்களையே புகன்று, நான்கு வேதங்களையும் நன்றாக அறிந்த அந்தணர்கள் பூணுகின்ற பூணூலுக்குப் பருத்தியே ஏதுவானது.

“சகல ஜீவன்களும் உலகில் வாழ்கின்ற காலத்தில் பருத்தியே பயனாவதால் அது மிகவும் சிறப்புடையதாகும். பருத்தித் தானம் செய்தால், மாமுனிவர்களும் பிரம ருத்திர இந்திராதி தேவர்களும் திருப்தியடைவார்கள். பருத்தி தானம் செய்தவன் வாழ்நாள் முடிந்த காலத்தில், சிவலோகத்தையடைந்து, அங்கேயே வாசஞ் செய்து, பிறகு சகலகுண சம்பன்னனாய் அழகிய மேனியையுடயவனாய், மகாபலசாலியாய், தீர்க்காயுள் உடையவனாய் மீண்டும் பூமியில் பிறந்து யாவரும் போற்றிப்புகழ நெடுங்காலம் வாழ்ந்து சுவர்க்கலோகத்தையடைவான். தானங்கள் செய்வதற்கு சிறந்த காலம், ஜீவன் மரிக்கும் காலத்தில் செய்வதேயாகும்.

“ஒ வைனதேயா! எந்த மனிதனும் தான் இன்பமாயும் மகிழ்ச்சியாயும் வாழுங்காலத்திலேயே தனக்கான தான கருமங்களைச் செய்து கொள்வது நல்லது. எள்ளையும், இரும்பையும் தானம் செய்தால் யமதர்மன் மகிழ்சியடைவான்.

“பருத்தித் தானத்தை செய்தால் யம தூதர்களிடத்தில் பயம் உண்டாகாது. தானியங்களைத் தானம் செய்தால், கூற்றவனும் அவனது தூதர்களும் மகிழ்ந்து, ஜீவனுக்கு வேண்டியவற்றையெல்லாம் வழங்குவார்கள்.

“மரணமடையும் நிலைமை அடைந்தவன், நம்மையே தியானித்து, நமது திருநாமங்களையே உச்சரிப்பானாகில் இன்ப வீடாகிய நமது வைகுண்டலோகத்தை அடைவான்.

“கயா சிரார்த்தம் செய்வதை விட தந்தை-தாய் இறக்கும் சமயத்தில் அவன் தன் தாய் தந்தை அருகிலேயே இருந்து தொண்டு செய்வதே உத்தமமாகும்.

“கூடாரமும் முசலமும் சூரிகையும் இரும்புத் தண்டமும் காலனுக்கு ஆயுதங்களாம். அந்த ஆயுதங்கள் இரும்பாலானததால் மரிக்கும் காலத்தில் இரும்பைத் தானம் செய்தால் யமன் மகிழ்வான். யமதூதர்கள் அஞ்சுவார்கள், காண்டாமிருகன், ஔதும்பரன், சம்பரன், சார்த்தூலன் முதலிய யமதூதர்கள் திருப்தி யடைவார்கள்.
   
“வைனதேயா! ஜீவனுடைய அங்கங்களாகிய கால் முதல் தலை வரையிலுள்ள உறுப்புகளில் பிரம்மருத்திர இந்திரராதி தேவர்களும் ஸ்ரீ கிருஷ்ண பகவானும் இருக்கிறார்கள். தாயும் தந்தையும் குருவும் சுற்றமும் ஜீவர்களுக்கு ஸ்ரீ விஷ்ணுவேயின்றி மற்றோருவருமில்லை.

“சர்வம் விஷ்ணு மயம் என்ற ஜகத் அருள்வாக்கை நீயும் உணர்ந்திருக்கிறாய் அல்லவா? நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சுவர்ணம், தானியம், தேன், நெய், பசு, யாகம், அந்தணர், அஜசங்கர, இந்திராதி தேவர்கள் ஒன்றைக் கொடுப்பவனும், வாங்குபவனும் பிறகு யாவரும் யாமேயின்றி வேறொன்றுமில்லை.

“ஜீவர்கள் பூர்வத்தில் செய்த தர்மத்தை நாமே நாடச் செய்கிறோம். புண்ணியம் செய்தவன் சுவர்க்கம் அடைவான். பாவம் செய்தவன் நரகத்தை அடைவான்.”

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!