கருடன் சிறிது யோசித்து மணிவண்ணப் பெருமானைத் தொழுது, “யமபுரி எங்குள்ளது? அங்கு செல்லும் மார்க்கம் எப்படிப்பட்டது என்பதை மீண்டும் எனக்கு விளக்கமாக கூற வேண்டும்.” என்று பிரார்த்தித்தார். திருமால் கருடனை நோக்கிக் கூறலானார்.
“மீண்டும் அதைப் பற்றிக் கேட்டதால் எஞ்சியவற்றை இப்போது சொல்கிறேன் கேட்பாயாக. யமபுரிக்கு செல்லும் வழியில் சிறிது தூரம் வரை செம்பை உருக்கி வார்த்தது போல் கனல் காந்திக் கொண்டிருக்கும். அதற்கப்பால் சிறிது தூரம் இண்டை முட்களாலும் தீக் கொள்ளிகளாலும் நிறைந்திருக்கும்.
“சிறிது தூரம் பொறுக்க முடியாத குளிர்ப்பிரதேசம் அமைந்திருக்கும். பூலோகத்திற்கும் எமலோகத்திற்க்கும் இடையே எண்பத்தாறாயிரம் காத வழி உள்ளது என்று முன்னமே உனக்குச் சொல்லி இருக்கிறேன். அத்தனை காதவழியிலும் பாபஞ் செய்த ஜீவனுக்கு அந்த வழி நெடுகிலும் மரத்தின் நிழலும் பருகுவதர்க்குத் தண்ணீரும் சிறிதளவு கூடக் கிடைக்காது. பாபிகளுக்கு யமலோகமும் அங்குச் செல்லும் மார்க்கமும் மிகவும் கொடுமையாக இருக்கும்.
“கருடா! இனி யம லோகத்தின் தன்மையைச் சொல்லுகிறேன், கேட்பாயாக! தென் திசைக்கும் நிருதியின் திசைக்கும் நடு மையத்தில் யமபுரியானது வஜ்ஜுர மயமாயும் தேவர்கள் அசுரர்கள் ஆகிய இருதரத்தாலும் சிதைக்கத் தகாததாயும் அமைந்திருக்கும்.
“அந்தப் பட்டினத்திற்கு நடுவில் சதுரமாய் நூறு யோசனை உயரமுள்ளதாயும் அநேகஞ் சாளரங்களைக் கொண்டதாயும், துகிர்க் கொடிகள், முத்துக் கோவைகள், தூரங்கள் இவற்றால் அலங்கரிக்கப் பெற்றதாயும் சுவர்ணமயமாகவும் எமதர்மராஜனின் அரண்மனை அமைந்திருக்கும்.
“அந்த அரண்மனையின் உள்ளே பத்து யோசனை அகல நீளமுள்ள அநேகமாயிரம் வைரத்தாலான தூண்கள் நிறுத்திய மண்டபமும் மாளிகையும் அமைந்திருக்கும்.
“அங்கு சைத்திய சௌரப்பியமான மென்காற்று இயங்குவதாயும் எப்போதும் ஆடலும் பாடலும் இடைவிடாமல் புழங்கும் ஒரு திவ்விய மண்டபம் இருக்கும்.
“அந்த மண்டபத்தில் யமதூதர்கள் கரங்குவித்த வண்ணம் ஒருபுறம் நின்று கொண்டிருப்பார்கள். ரோகங்கள் எல்லாம் கோர உருவத்துடன் நின்று கொண்டிருக்கும். அவர்களுக்கு நடுவில் கண்டவர்கள் அஞ்சும்படியான ரூபத்தோடு மகிழ்ச்சியாக யமதர்மன் வீற்றிருப்பான்.
“அவன் வீற்றிருக்கும் மண்டபத்திற்கு அருகில் இருபத்தைந்து யோசனை அகல நீலமுள்ளதாகவும், பத்து யோசனை உயரமுள்ளதாகவும் பலவித அலங்காரங்களால் அழகு செய்யப்பட சித்திரகுப்தனுடைய அரண்மனை இருக்கிறது.
“அந்த அரண்மனையில் ஒரு திவ்விய மண்டப்பத்தில் சித்திர குப்தன் வீற்றிருப்பான். அவன் சகல ஜீவன்களும் செய்யும் பாவபுண்ணியங்களை ஒன்று விடாமல் கணக்கு எழுதிக் கொண்டிருப்பான்.
“அவன் எழுதும் கணக்கில் ஒரு சிறு பிழையும் உண்டாகாது. அந்த சித்திரகுப்தனுடைய அரண்மனைக்குக் கிழக்குத் திசையில் ஜுரத்துக்கும், தென்திசையில் சூலைநோயோடு வைசூரி நோய்க்கும், மேற்குப் பக்கத்தில் காலபாசத்தொடு கூடிய அஜீரணத்துக்கும் அருசிக்கும், வடக்குப் பக்கத்தில் வயிற்று வலிக்கும், தென் கிழக்கில் மயக்கத்துக்கும் தென் மேற்கில் அதிசார நோய்க்கும், வடமேற்கில் ஜென்னிக்கும் தனித்தனியே கிரகங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
“அவ்ரோகங்கள் யாவும் யமனுடைய உத்திரவை எதிர்பார்த்துக் கொண்டே அம்மனைகளில் வசித்திருக்கும்.
“கருடா! யமனுடைய அரண்மனைக்குத் தென்திசையில் பாபஞ் செய்த சேதனர்கள் யமகிங்கரர்கள் பற்பலவிதமாக ஹிம்சை செய்வார்கள்.
“சிலஜீவர்களை உலக்கைகளால் நையப்புடைப்பார்கள். சிலரைக் கரிய கொடிய ஆயுதங்களால் சிதைக்கிறார்கள். சிலரைச் சூரிகையால் சீவுகிறார்கள். சிலரை செக்கிலிட்டு வதைக்கிறார்கள். சிலரை இரும்புச் சலாகையில் கோர்த்து பெருந்தலனில் வாட்டுகிறார்கள்.
“இன்னுஞ் சிலரை அக்கினிக் குண்டத்தில் வேக வைக்கிறார்கள். வைனதேயா! அங்கு செம்பினால் செய்யப்பட ஆண்பாவைகளும் பெண்பாவைகளும் அக்கினியில் சூடேற்றப்பட்டு தகத்தகாயமாய் தகித்துக் கொண்டிருக்கினறன.
“பரஸ்திரிகளை கூடி மகிழ்ந்த ஜீவர்களை யமதூதர்கள் பார்த்து, ‘பாவிகளே! தருமமும், மானமும் பாராமல் பிறன் மனைவியரைப் புணர்ந்த இன்பம் பூவுலகத்தில், இவ்வுலகத்தில் மாற்றான் பட்ட மனத்துன்பமே இப்போது நீங்கள் அனுபவக்க நேரிட்ட பயனாகும். அந்தப் பயன் இதுவேதான்!’ என்று அதட்டிச் சொல்லி, நெருப்பெனக் கொதிக்கும் பெண்பதுமையோடு, பாவிகளை ஒன்று சேர்ப்பார்கள்.
“பரபுருஷோடு சேர்ந்த மங்கையரை தகிக்கின்ற ஆண் பதுமையோடு அங்ஙனமே ஒன்று சேர்ப்பார்கள். வினுதையின் மைந்தனே! புருஷனானவன் தன் மனைவியைத் தவிர பரஸ்திரியை கூடிக் கலந்ததிற்கும், ஸ்திரியானவள் தனது கணவரையன்றி பரபுருஷனைக் கூடியதற்கும், யமலோகத்தில் விதிக்கப்படும் தண்டனையைப் பார்! இத்தகைய கொடிய தண்டனை உள்ளதாக இருந்தும் ஸ்திரி புருஷர்களில் நல்லொழுக்கத்தில் நிற்ப்பவர்களை பூவுலகில் காண்பதற்கே அரிதாகி விடுகிறது.
“யமபுரியில் சில பாவிகளைக் கரும்புகளை கரும்பாலையில் சக்க வைத்து கசக்கி சாறு பிழிவதைப் போல ஆலையில் கொடுத்து வதைக்கிறார்கள். சிலரை நரகங்களில் தள்ளி அடியாழம் வரையிலும் அழுத்துகிறார்கள்.
“கடன் வாங்கிக் கொண்டு திருப்பிக் கொடுக்காதவர்களை யமகிங்கரர்கள் அழைத்துச் சென்று கடன்கொடுத்தவனுக்கு அதை திருப்பிக் கொடுப்பதை விட்டு அவனிடம் வன்கண்மை பேசினீர்களே! என்று முனிந்து நையப்புடைக்கிறார்கள்.
“பாவிகள் படுகின்ற துயர்களை விளக்கிச் சொல்வதால் பயன் என்ன? இன்னவன் அறநெறியாளன், இன்னவன் அதகுமிஷ்டன், இன்னவன் சுவர்க்கம் புக வேண்டியவன், இன்னவன் நரகம் செல்ல வேண்டியவன் என்பதை அவரவர் ஒழுக்கத்தைக் கொண்டே உணரலாம்.
“தர்மம் செய்தவனே சுவர்க்கம் புகுவான் என்பது நிச்சயம். ஆகையால் யாவரும் தர்மநெறியிலேயே வாழ்ந்து தருமஞ் செய்வதே வாழ்வுக்கும் பரலோக வாழ்வுக்கும் நல்லது.