இறைவனின் திருநாமத்தைத் தியானித்திருத்தல். நாமஸ்மரணை என்பது மனமாசுகளை நீக்கக் கூடியது, உடம்பின் அழுக்கு நீங்க நீராடுகிறோம் மனதின் அழுக்கு நீங்க நாமஸ்மரணையில் ஈடுபடுகிறோம். கோயில்களிலும், பஜனை செய்யும் இடங்களிலும் இது வலியுறுத்தப்படுகிறது.
உடல் தூய்மையாக இருந்தால் நோய்கள் அணுகாது, மனம் தூய்மையாக இருந்தால் இன்னலுக்கு உள்ளாகும் நிலை இருக்காது. நம்முடைய அமைதியும், மகிழ்ச்சியும் மனத்தூய்மையைப் பொறுத்ததாகும்.
நேர்மறையான எண்ணங்களே உடல்நலத்துக்கும். மனோபலத்துக்கும் உதவும்.
நம் இதயம் அன்பால் நிரம்பியிருப்பின் நம்முடைய எண்ணங்கள் நேர்மறையாகவே இருக்கும். அது நம்மை நேரிய வழியில் நடக்கச் செய்யும், தனிமனித நேர்மையே தீமைகளற்ற சமுதாயத்தை உருவாக்கும்.
'எண்ணம் போல் வாழ்வு' என்பார்கள். கெடுமதி படைத்தவன் மற்றவர்களுக்கு மட்டுமல்ல தனக்கும் கேடு செய்து கொண்டவனாகிறான். தூய்மையற்ற எண்ணங்கள்அசுத்தமான செயல்களுக்குத் தூண்டிவிடும். ஆம், நமது எண்ணங்களை ஒட்டியே நம் செயல்களும் அமையும்.
வெற்றியையும் நற்பலன்களையும் பெற வெறும் ஆசைமட்டும் போதாது, முயற்சியும் போதுமானதாகி விடாது. அடிப்படையில் எண்ணத்தூய்மை வேண்டும். அதற்கு நாமஸ்மரணை உதவும்.
நம்மால் ஒரு வேளை உணவையும் ஒழிக்க முடிவதில்லை. காரணம் உடம்பைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்கிற அக்கறை. ஆனால், என்றாவது ஒருநாள் நாமஸ்மரணை செய்திருப்போமா? அது தான் மனதுக்கு ஊட்டமளிக்கும் உணவு என்பதை நாம் அறிந்திருக்கவில்லை.
நம்முள் உறையும் தெய்வசக்தியை நாம் உணரவேண்டும், அடையாளம் கண்டு அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டும். அதனை மங்காமல் ஒளிவிடச் செய்வது நாமஸ்மரணை.