வைணவன் ஞானமும், பக்தியும், வைராக்யமும் கொண்டிருக்கவேண்டும். தன்னிடம் உள்ள சிறப்புகள் குறித்து கர்விக்காமல் இருக்கவேண்டும். சாத்வீகிகளுடன் சகவாசம் வைத்திருக்க வேண்டும்.
பகவான் நம்மைக் காப்பாற்றுவார், ஒருபோதும் கைவிடமாட்டார் என்று முழுமையாக நம்புவது அவசியம். சதாவும் அவனைச் சிந்தித்திருந்து, அவனுடைய கைங்கர்யங் களில் ஈடுபட்டுத்தன்னை அவனிடம் முற்றாக ஒப்படைத்துக் கொள்கிறவன்தான் உண்மையான வைணவன்.
தனக்குத் தீமை செய்தவர்களிடம் பகைமை பாராட்டாமல், அவர்களிடம் வருத்தம் கொள்ளாமல் இருப்பது நல்லது. பொறுமை, தயவு, நன்றியறிதல், மகிழ்ச்சி இவை வைணவனிடம் இருக்க வேண்டிய பண்புகள்.
குறைகூறும் பண்பு மனிதனிடம் இயல்பாகவே அமைந்திருப்பது. ஆனாலும், யாரிடமும் குற்றம் குறைகாணும் போக்கைக் கைவிட வேண்டும். தன்னிடம் குறைகண்டு செய்யப்படுகிற விமர்சனங்களையும் பொருட் படுத்தத் தேவையில்லை. அப்படியான விமர்சனங்கள் வளர்ச்சிகண்டு பொறாமையில் செய்யப்படுகிறவை. அதற்காக எல்லா விமர்சனங்களையும் தவறாகக் கருதிக் கொண்டுவிடக்கூடாது. நல்ல நோக்கத்துடன் செய்யப்படுகிற விமர்சனங்களும் உண்டு. 'நம்மையறியாமலே சில குறைபாடுகள் நம்மிடம் இருக்கக் கூடும். சிலதவறுகளை நாம் செய்யக்கூடும். அவர்கள் சுட்டிக் காட்டியதற்காக அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். தன்னிடம் உள்ள குறைகளை, தவறுகளை உடனேதிருத்திக் கொண்டுவிட வேண்டும்.
'அவன் தான் வைணவன்!'
பணம், புகழ் இவற்றை விட தான் ஒரு வைணவன் என்பதே வைணவனுக்குப் பெருமை. உலகம் அமைதியும் மகிழ்ச்சியும் கொண்டு வாழ்வதே அவனுடைய குறிக் கோளாக இருக்கும். அவன் குருவிற்கும், இறைவனுக்கும் பணி செய்வதே
வாழ்க்கையில் முதற்கடமை என்று நம்புகிறவன்.
வைணவத்தில் சரணாகதி முக்கியம். 'நடக்கிற தெல்லாம் பகவான் இயக்கம். எல்லாவற்றையும் அவன் நல்லவிதமாக நடத்திக் கொடுக்க வேண்டும்' என்று தனக்குள் பிரார்த்தித்துக் கொள்வான் அவன். காலையில் படுக்கை விட்டு எழும் போது உள்ளமும் உதடுகளும் 'ஹரி ஹரி' என்றே சொல்லும்.
காலை நீராட்டத்துக்குப்பின் புஷ்பம், தீர்த்தம், திருத்துழாய் (துளசி) சேகரித்துக் கொண்டு பகவானுக்கு பூஜை செய்வான்.
நெறிமுறைக்கு மாறாகக் கிடைக்கிற எதையும் பூஜைக்கோ, சுயலாபத்துக்கோ அவன் பயன்படுத்துவதில்லை. தன் சக்திக் கேற்ற முறையில் பூஜித்து, நிவேதனம் செய்வான். பந்து மித்ரர்களும் புராண விஷயங்களைப் பேசுவதும், ஸஹஸ்ர நாமம் முதலிய தோத்திரங்கள் சொல்வதும், அண்ணலின் மகிமையை ஆழ்வார்களின் அருட் செயல்களை வியந்து போற்றுவதும் அவனது விருப்பத்திற்குரிய நடைமுறை செயல்களாக இருக்கும்.
வைணவனுக்கு நாராயணனே முதல் தெய்வம், முதன்மையான தெய்வம், கோயில் போன்ற புனிதமான ஸ்தலங்களை சுத்தமாக வைத்துக் கொள்வான் அவன். தன்னுடைய உடல் பொருள் ஆவி பகவானின் அருள் என்பதை அவன் ஒரு போதும் மறப்பதில்லை.
வைணவ சமயத்தாரிடையே அவன் சாதிப்பாகு பாடுகள் பார்ப்பது கிடையாது, மனிதர்களை அந்தஸ்து கருதி நடத்த மாட்டான். யாரையும் இழிவுபடுத்துகிற நோக்கம் இருக்காது.
சாத்வீக உணவைத்தவிர, குணக்கேட்டை உண்டு பண்ணும் மற்ற உணவுகளை அவன் புசிப்பதில்லை. தாமஸ் உணவு ஞானத்துக்கோ, நற் கதிக்கோ உதவாது என்பதும் அவனுக்குத் தெரியும்.
தகாத வழியில் வருகிற எதையும் அவன் ஏற்பதில்லை.
சுத்தமில்லாது சமைத்ததும், எச்சில்தும்மல் பட்டதும், உண்டு மீதமானதும், மிதமிஞ்சிய கசப்பு, காரம், உப்பு. புளிப்பு உள்ள உணவு வகைகளும் அவனுக்கு விலக்கத்தக்க உணவாகி விடும்.
அவன் சரீரத்துக்கும், ஆத்மாவிற்கும்
உள்ள வேறுபாட்டை அறிந்து வைத்திருப்பான். அதேபோன்று ஆத்மாவிற்கும்,பரமாத்மாவிற்கும் உள்ள வேறுபாட்டையும் அவன் அறிவான்.
'எது பெருமை?'
பெருமாளுக்கு மட்டுமன்றி, உவப்புடன் தொண்டு செய்வது.
பக்தர்களுக்கும்
ஆச்சார்யார்களின் கொள்கைகளில் நம்பிக்கை வைத்து நடப்பது.
புனித நூல்களைப் படிப்பதுடன், போதிக்கவும் செய்வது.
உலகியலில் பற்றற்றிருப்பது.
தொண்டனுக்கும் தொண்டனாதல்.
பகவத் சேவை செய்வோரை மதித்து நடத்துவது.
அடியாரிடத்து பணிவுடையவராயிருத்தல், உரிய மரியாதை செய்தல்.
எவரையும் இழிவுபடுத்தாதிருப்பது
ஞானம் பெறுவதில் ஈடுபாடு.
சுயநலமிகளின் கூட்டுறவைத்தவிர்த்தல்.
இறைவனுடைய பொருட்களை (பூக்கள் உட்பட) புலன் நுகர்ச்சிக்குப் பயன்படுத்தாதிருத்தல்.
சாஸ்திரங்களில் விதித்தபடி செயல்களை அமைத்துக் கொள்ளுதல்.