எடுத்த காரியம் தப்பாகி விடுமோ? நஷ்டத்தில் முடியுமோ? விடியல் விடியல் என்கிறார்களே, அந்த விடிவு காலம் நமக்கு மட்டும் வராமலேயே போய்விடுமோ?? இது போன்ற பயங்கள் அநேகர் மனதில் தோன்றி அலைக்கழிக்கிறது. இந்த எண்ணத்துக்கு பயத்துக்கு இடம் கொடுத்தால் வெற்றியடையவே முடியாது. வெற்றியடைந்தவர்கள் துணிந்து இறங்கி ஈடுபட்டவர்கள். கடினமாக உழைப்பவர்கள். ஆழ்ந்து பல கோணங்களில் யோசித்து காரியத்தில் இறங்குபவர்கள். தைரியம் மனதில் வேண்டும். பாரதியார் எவ்வளவு உரக்க அழுத்தமாக பாடுபவர்: ''மனத்தில் உறுதி வேண்டும் ''
கீதையில் ஒரு ஸ்லோகம்
2.37: हतो वा प्राप्स्यसि स्वर्गं जित्वा वा भोक्ष्यसे महीम्। तस्मादुत्तिष्ठ कौन्तेय युद्धाय कृतनिश्चयः॥३७॥
ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்க³ம் ஜித்வா வா போ⁴க்ஷ்யஸே மஹீம்| தஸ்மாது³த்திஷ்ட² கௌந்தேய யுத்³தா⁴ய க்ருதநிஸ்²சய: ||2-37||
''டேய் அர்ஜுனா, யுத்தம் என்றால் எல்லோரும் ஜெயிக்கமுடியாது, யாரோ சிலர் ஜெயிக்க யாரோ சிலர் இறக்கத்தான் வேண்டும். தைரியமாக இருக்கும் சக்தியை உபயோகித்து போரிட்டு இறந்தால் நீ சுவர்க்கம் போவாய். வென்றால் நீ இந்த உலகை ஆண்டு அனுபவிப்பாய். ரெண்டிலும் நீ புகழ் பெறுவது நிச்சயம் . ஆகவே துணிந்து எழுந்து நின்று போர் செய்'' என்கிறான் கிருஷ்ணன்.
எந்த காரியத்திலும் பாதியில் கழன்று கொள்ளக் கூடாது. இறுதி வரை தொடர்ந்து விடாமுயற்சியோடு தொடரவேண்டும். வெற்றி நிச்சயம் என்ற எதிர்பார்த்து நிச்சயம் பலிக்கும். உடலிலும் உள்ளத்திலும் தளர்ச்சி இருக்கவே கூடாது.
தோல்வி என்பது ஏற்கப்படவேண்டியது. விளைவு எல்லாம் எதிர்பார்த்தபடியே இருக்குமா? இது நம் முயற்சியைத் தவிர வேறு ரூபத்தில் விளைவது. மார்க்கெட் கண்டிஷன், மக்கள் எதிர்பார்ப்பு விலைவாசி உயர்வு தாழ்வு. பற்றாக்குறை இதெல்லாம் பெரிய பெரிய கம்பெனிகளைக் கூட வேரோடு கில்லி விடுகிறது. நம் உழைப்பு வீணானதற்கு நாம் மட்டும் காரணமில்லை.
என் பாட்டி அடிக்கடி சொல்வாள்: ''டேய் உனக்கு என்ன தெரியுமோ, என்ன செய்வியோ அதையே செய், அதற்கு என்ன பலன் கிடைக்குமோ, இதுவரை கிடைத்ததோ,அது விடாமல் கிடைத்துக் கொண்டே இருக்கும்'' எதையாவது வித்தியாசமாக பண்ணுகிறேன் பேர்வழி என்று பரிசோதனை பண்ணிப் பார்த்தால் அதன் விளைவு சாதமாகவோ பாதகமாவோ போகலாமே. ரெண்டுக்கும் சம்மதம் என்றால் சரி. வெற்றிக்கு படிக்கட்டு தோல்வி.
ஒரு காரியம் தவறாகப் போனால் என்ன தவறு? என்று ஆராயவேண்டும், ஏன் தப்பிதம் நடந்தது? எப்படி அதை தவிர்த்திருக்கலாம்? ஏன் அப்படி தவிர்க்க வில்லை? எதனால் தவறினோம்? அடுத்த முறை இது திரும்பவும் நடக்காமல் இருக்க என்ன வழி? இது தான் அனுபவ சிந்தனை.
நமது உழைப்புக்கு மேலே பகவான் மேல் நம்பிக்கையும் பிரார்த்தனையும் நமக்கு வைட்டமின் மாத்திரை.