மெய்யன் என்று இவனைச் சொல்ல வேண்டியிருக்க, 'மாயன்' என்றது ஆச்சர்யமான சேஷ்டிதங்களைப் பண்ணி லோகத்தை அனுக்ரஹம் பண்ணுபவன் என்று காட்டவே..! 

நம் பாபங்களை மாயமாய் போக்கடிப்பதால் (ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி) இவன் மாயன் 'பஹுலீலம் மாதவம் ஸாவதானா' என்று ஸ்வாமி தேசிகன் தயா சதகத்தில் 'அலகிலா விளையாட்டுடையான்' என்று இந்த மாயனுக்குப் பொருள் கூறுவார்.

நமக்கு ஒரு சந்தேகம்! 'பெருமாள் நம்மோடு பேசுவாரா, கலந்து பழகுவாரா, நமக்குச் சமமாய் உட்கார்ந்து விளையாடி உரையாடுவாரா'என்று! இதற்கு பதிலளிக்கும் வகையில் ஒரு அவதாரம் எடுக்க வேணும் என்ற நெடுநாள் ஆசையுடன் பெருமாள் எடுத்தது இக் கிருஷ்ணாவதாரம்!

ராமாவதாரம் முதலிய மற்ற அவதாரங்களில் தன்னைப் பெருமாளாகக் காட்டிக் கொள்ளாமல், சங்கு, சக்கரம், கதைகளைக் கையிலெடுக்காமல் இருந்தவர், இங்கு அத்திவ்யாயுதங்களுடன் அவதரித்தார். அர்ஜுனனுக்கு தன் விஸ்வரூபத்தையும் காட்டினார். இடைச் சிறுமிகள் கூட இவரை இன்னாரெனப் புரிந்து கொண்டு விட்டனர்.

இந்த அவதாரம் ஒருமுறைதான் என்பதில்லை..! 'யதா யதாஹி தர்மஸ்ய.......... ஆத்மானம் ஸ்ருஜாம்யஹம்' (ப கீ 4.7) 
என்று தாமே அருளிச் செய்தபடி 'தர்மத்துக்கு குறைவு ஏற்படும் பொழுதெல்லாம் அத்தர்மத்தை ஸ்தாபிப்பதற்காக (ஸம்பவாமி யுகே யுகே) நான் அவதரிப்பேன் என்று சொன்ன அவதாரமிது..! 

கிருஷ்ணா! நீ எப்ப வருவேன்னு கேட்டா, நீங்க வேத பாராயணம் பண்றப்போ, யாக யஜ்ஞங்கள் பண்றப்போ வருவேன்னு சொல்லாம, நீங்க அக்ரமம் நிறைய பண்றப்போ வருவேன்னு சொன்ன அந்த மாயனின் அவதாரமிது..!

'மாயாமயினம்' ஞானம் என்றதால் மாயா என்பது ஞானம் எனப் பொருள்படும். ஞானம் என்பது ப்ரதானமானது. அதனுடைய விசேஷம் ஆனந்தம். எனவே எம்பெருமான் ஞானானந்த மயமானவன் எனப்படுகிறான்.

ஞான ஸ்வரூபமான எம்பெருமானே மாயன்! 'தன் மதிக்கு விண்ணெல்லாம் விலையாகுமா' எனக் கேட்ட திருமழிசையாழ்வார் ஆதியாகி ஆயனாய மாயமென்ன மாயமோ?' என்று எம்பெருமானை வினவுகிறார்.

கிருஷ்ணனை இவர் அறிமுகப்படுத்தும் விதமிது! அனைத்துக்கும் ஆதியாகி நிற்கும் எம்பெருமான் பெற்றம் மேய்த்து உண்ணும் இடைக்குலத்தில் ஆயனாக வந்து பிறந்து விட்டானே என வியப்பு இவருக்கு! ஆதியானவன் ஆயனாக முடியுமா? ஆயனானவன் ஆதியாக இருக்க முடியுமா, இதுவன்றோ மாயம்..!( மாயன் என்பது ஆச்சர்யம் என்று பொருள் தரும்). இவனே மாயன்! இவன் தான் 'ஆதி' என்பதைக் காட்ட ஆதியாகி என்று இவன் அவதரித்த காலம் தொட்டே ஆரம்பிக்கிறார் இவ்வாழ்வார். இக்கண்ணனை அனுபவித்ததில் சுகருக்கு நிகரில்லை..! அவர் 'தமத்புதம் பாலகம்' என்று இவனை'அத்புதம்' என்று கூறி அதிசயித்துப் போகிறார்..! இவன் பெருமையை காவ்யமாகப் பாடிய ஸ்வாமி தேசிகனும், தம் யாதவாப்யுதயத்தில் ' இந்தப் பரம்பொருளானவன் இடைக்குலத்தில் வந்தவதரித்ததே காரணமாக இவனுக்கு பெருமை கூடிற்று' என்கிறார். இடைக் குலத்துக்குப் பெருமை தோன்றியதன்றோ..! யாதவர்களுக்குப் பெருமை அளித்ததால் இவன் மாயன்..!

ஜைனர்களின் அமரகோசம் 'மா' என்னும் சொல்லுக்கு லோகமாதா, ரமா, மங்கள தேவதை என்று பொருள் தருகிறது. 'மா' என்பவள் 'மங்களானாஞ்ச மங்களம்' என்று ஸ்வாமி தேசிகனின் ஸ்ரீஸூக்திப்படி பெருமாளுக்கே மங்களத்தைக் கொடுக்கும் லக்ஷ்மியாவாள். அதன்படி மாயன் என்ற சொல் ச்ரிய:பதி என்று பொருள் தருவதாகும். க்ருஷ்ணாவதாரத்தில் லக்ஷ்மி எங்கே என்று தேட வேண்டாம். கோபிகைகள் அனைவருமே லக்ஷ்மி ஸ்வரூபம்தான் என்பது நம் ஸித்தாந்தம். இந்த அவதாரத்திலுள்ளது போல் ஸ்ரீமத்வம் வேறு எதிலும் கிடையாது..!

வேங்கடாசல மாஹாத்ம்யம் 'மாயாவி பரமானந்தம் த்யக்த்வா வைகுண்டமுத்தமம், ஸ்வாமி புஷ்கரணீ தீரே ரமா ஸமோததே' என்று ஸ்ரீவைகுண்ட எம்பெருமானை 'மாயாவி' என்றே குறிப்பிடுகிறது. ப்ரபுத்வம் தோற்ற அங்கிருந்தவன் அதைவிட்டு (த்யக்த்வா) க்ஷீராப்திக்கு வந்தபின் 'மா' வுக்கு அதீனமானான்..! மாயனானான். ' மாயினம்து ப்ரக்ருதிம் வித்யாத்' என்பதால் ப்ரக்ருதிக்கு மாயை என்று பெயர். (மாயினம்து மஹேஸ்வரம் என்பது வழக்கு) 'மம மாயா துரத்யயா என்று பகவத் கீதையில் 'என்னுடைய மாயை' என இவன் அருளிச் செய்தான்.

மாயையை உடையவனானபடியால் மாயன் எனப்படும் இவன் ஸ்ரீக்ருஷ்ணாவதார எம்பெருமானே...!