ஸ்ரீ ராமரின் உன்னதமான குணம்

ஸ்ரீராமாவதாரத்தின் நோக்கம் வெற்றிகரமாக நிறைவேறி விட்டது. 

வெற்றிவாகை சூடிய ஸ்ரீராமர் அயோத்திக்குத் திரும்ப வேண்டும்.
என அனைவரும் ஆர்வமாக காத்திருந்தனர். 

ஆனால் ஸ்ரீராமர் அவசரப்படவில்லை. ராவணனை வென்றதால் அவரது மனதில் கொஞ்சமும் ஆணவம் படரவில்லை பரமாத்மா ஆயிற்றே. 

அயோத்திக்குப் புறப்படும் முன் அவர் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் சில இருந்தன.

அவற்றில் முக்கியமானது நன்றி தெரிவித்தல். 

காட்டில் ஆதரவளித்தவர்களைச் சந்தித்து நன்றி சொல்லி விடைபெற விரும்பினார். 

எந்த வழியாக இலங்கைக்கு வந்தாரோ அதே வழியாகத் திரும்ப பயணித்தார்.

சீதையை மீட்டு அயோத்திக்குத் திரும்புகிறார் ஸ்ரீராமர். 

பரதன் தீயில் புகுவதற்கு காத்திருக்கிறார். 

அயோத்தி மக்கள் எல்லாம் ஸ்ரீராமரின் வரவுக்காக அயோத்தி எல்லையில் காத்திருக்கிறார்கள். 

ஸ்ரீராமனுக்கு அவர்களின் பரிதவிப்பு புரியும். 

ஆனாலும் அவர் அவசரப்படவில்லை. தந்தையின் கட்டளையை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் உடனே அயோத்தி செல்ல அவர் ஆசைப்படவில்லை. 

அரியணை ஆசையும் அவரிடம் இல்லை.

அணை கட்ட உதவிய சமுத்திர ராஜனுக்கு நன்றி தெரிவித்தார். 

கிஷ்கிந்தையில் இருந்த சுக்ரீவனைச் சார்ந்தவர்களுக்கு நன்றி கூறினார். 

தாங்களும் ஸ்ரீராமனுடன் அயோத்திக்கு வந்து விடுவதாகவும், அவனது அருகாமையிலேயே தொடர்ந்து வாழ விரும்புவதாகவும் தெரிவித்தனர்.

உடனே லஷ்மணன் குறுக்கிட்டார். 

''இப்போதைக்கு நீங்கள் உங்கள் இருப்பிடத்தில் தங்குவதுதான் உசிதம். 

காரணம் எங்களுக்கு உதவி செய்ய, உங்கள் குடும்பத்தாரிடமிருந்து நீண்ட காலம் விலகியே இருந்திருக்கிறீர்கள். 

அவர்களும் உங்களுடைய அன்பை எதிர்பார்ப்பார்கள். 

ஆகவே அவர்களை ஏமாற்றாதீர்கள். 

அயோத்திக்கு நாங்கள் சென்ற பிறகு எங்கள் அழைப்பின் பேரிலேயே நீங்கள் அங்கு வரலாம். 

சிலகாலம் தங்கியிருந்து நிறைவுடன் திரும்பலாம்'' என அவர்களுக்கு ஆறுதல் வார்த்தை கூறினார். 

அவர்களுக்கு ஸ்ரீராமரைப் பிரிய மனமில்லை என்றாலும் ஒருமனதாக சம்மதித்தார்கள்.

அதைப் பார்த்த ஸ்ரீராமர், கண்களாலேயே தம்பியைப் பாராட்டினார்.

அண்ணனுக்கு இருக்கும் அதே கல்யாண குணங்கள் ஆதிசேஷனுக்கும் இருக்காதா என்ன !!

சீதையும், தன் கணவருக்கும், கொழுந்தனுக்கும் அவர்கள் செய்த உதவிகளுக்காக மனப்பூர்வமாக நன்றி தெரிவித்தாள். 

அவர்களும் யதார்தத்தை புரிந்து கொண்டு விடை கொடுத்தனர்.

அதற்கடுத்து தானும், தம்பியும் தங்கிய ஒவ்வொரு இடத்தையும், அங்கங்கே உதவியவர்களையும் சீதைக்கு அறிமுகப்படுத்தியபடி நன்றியைத் தெரிவித்தார் ஸ்ரீராமர். 

தன் கணவருக்காக இவர்கள்தான் எத்தனை துன்பம் அனுபவித்திருக்கிறார்கள் என்ற பரவசத்துடன் சீதையும் கண்ணீருடன் நன்றி தெரிவித்தார்.

அடுத்ததாக பரத்வாஜர் ஆஸ்ரமத்துக்கு வந்தார் ஸ்ரீராமர். 

அவரை பணிந்து வணங்கினார். லஷ்மணனும், சீதையும் ஸ்ரீராமனைப் பின்பற்றினர். 

அந்தக் காட்டில் தனக்கு நல் வழிகாட்டிய முனிவருக்கு நன்றி தெரிவித்தார். 

ஆரத் தழுவிய அவர். ''அது என் பாக்கியம் ஸ்ரீராமா! உனக்கு உதவி செய்தது பேரானந்தம்,'' என்று மகிழ்ந்தார். 

''ராமா, நீயும், உன்னுடன் வந்திருப்போரும் என் ஆஸ்ரமத்தில் உணவருந்திச் செல்ல வேண்டும்.'' என வேண்டுகோள் விடுத்தார்.

ஸ்ரீராமனும் எந்த மறுப்பும் சொல்லாமல் சம்மதித்தார். 

ஆனால் லஷ்மணன் கலக்கமடைந்தான். 

'அடடா, அங்கே பரதன் எதிர்பார்த்துக் காத்திருப்பானே! 

குறிப்பிட்ட நாளுக்குள் ஸ்ரீராமர் வராவிட்டால் தீக்குளிக்கப் போவதாக சபதமிட்டுள்ளானே! 
அதற்குள் அயோத்தி எல்லையை அடைய வேண்டுமே... 
விருந்து, பேச்சு என்று நேரம் கடத்தினால் அங்கே பரதன் வேறேதும் தவறான முடிவெடுத்து விடுவானே! 

உடனிருப்பவர்கள் யாராவது 

'ராமன் சொன்ன காலக்கெடு முடிந்ததே. இனியும் அவன் அயோத்தி திரும்புவானா? 
ஏதேனும் காரணத்துக்காக அவன் வரத் தாமதம் ஆகுமானால், அதுவரை காத்திருப்பானேன்?
பரதன் முடிசூட்டிக் கொள்ளலாமே. 
பிறகு ஸ்ரீராமர் எப்போது வருகிறானோ அப்போது அவனிடம் அரசாட்சியை ஒப்படைத்தால் போகிறது. 
இன்னும் எத்தனை காலம்தான் அரசன் இல்லாமல் அயோத்தி அவதிப்பட வேண்டும்?' என்று சொல்லி அவன் மனதை மாற்றுவார்களோ எனக் கவலைப்பட்டான் லஷ்மணன். 

சீதையும் மனதிற்குள் வருந்தினாள். 

'பரதன் பிடிவாதக்கார குழந்தை ஆயிற்றே! 

ஏற்கனவே தாயின் வரத்தையும், தந்தையின் கட்டளையையும் முற்றிலும் புறக்கணித்து ஸ்ரீராமன் அயோத்திக்குத் திரும்ப வேண்டும் என வற்புறுத்தினான். 

அதில் அவனது முரட்டுத்தனமும் வெளிப்பட்டதே... 

பின்னர் ஸ்ரீராமர் சொல்லை மீற முடியாமல் அவரது பாதுகைகளை பெற்றுத் திரும்பினானே. 

இப்போது காலம் கடந்தால் வீம்புடன் தான் சொன்னதைச் செய்துவிடக் கூடியவனாயிற்றே அவன்''
அவர்களின் எண்ணத்தை அறிந்த ஸ்ரீராமர் புன்சிரிப்புடன், ''வாருங்கள், முனிவர் வழங்கும் பிரசாதத்தை ஏற்றுக் கொண்டு மரியாதை செய்வோம்'' என அழைத்தார்.

சீதை தயங்கியபடி ''வந்து… அங்கே பரதன்… தீயில் புகத் தயாராக….'' என இழுத்தாள்.

மென்மையான புன்னகையுடன் ஸ்ரீராமர், ''நான் எப்போதுமே பெரியவர்கள் சொல்லை மீறாதவன் என்பது உனக்குத் தெரியாதா? 

மிதிலையில் சிவதனுசை முறித்து உன்னை மணம் புரிய தகுதி அடைந்தாலும் திருமணத்துக்கு சம்மதித்தேனா? 

விஸ்வாமித்திரரிடம், 'என் திருமணத்துக்கு தந்தையான தசரதரின் சம்மதம் அவசியம்; 

அவரது அனுமதியின்றி மணக்க நான் தயாரில்லை' என்று கூறியவன் நான். 

பிறகு என் தந்தையார், தாயார்கள், வசிஷ்டர், அயோத்தி பிரமுகர்கள் அனைவரும் ஒப்புதல் அளித்த பிறகுதானே உன்னை மணந்தேன்?

ஆம் இதுவல்லவோ நற்குணம்
ராமன் என்றுமே ராமன் தான். 

அந்த வகையில் இந்த பரத்வாஜ முனிவரும் என் தந்தைக்கு நிகரானவர். அன்புடன் அவர் தரும் உபசரிப்பை புறக்கணித்துவிட்டு அவசரமாக அயோத்தி செல்வதை நான் விரும்பவில்லை.''

''உண்மைதான் அண்ணா. 

தங்களின் பெருந்தன்மை நாங்கள் அறியாததா?

ஆனால் அங்கே பரதன் விபரீத முடிவு எடுத்துவிடக் கூடாதே என்றே
யோசிக்கிறோம்,'' என்றான் லஷ்மணன்.

''இதோ.. என் அன்பிற்குரிய ஹனுமன் இருக்கிறானே! நம்மைக் காப்பாற்ற சஞ்சீவி மலையைக் கொண்டு வந்தவன் இவன்தானே! 

இவனுக்கு பரதனை நன்றாக அடையாளம் தெரியுமே! 

இவனை அனுப்புவோம். பரதனிடம் விபரம் தெரிவித்து அவனைக் காத்திருக்கச் சொல்வோம்,'' என்றார் ஸ்ரீராமன்.

'அட...இதுவும் நல்ல உக்திதான்...' என சீதையும், லஷ்மணனும் நிம்மதி அடைந்தனர்.

'எந்த வகையிலும் பெரியவர்களின் மனம் கோணாமல் நடக்க வேண்டும்' என்னும் நற்பண்பின் முன்னோடியாகத் திகழ்ந்தார் ஸ்ரீராமர்.

பெரியவர் சிறியவர் என் எல்லோரையும் சமமாகப் பார்ப்பவர் ஸ்ரீராமர் அதனால் தான் ஸ்ரீராமர் உலகம் போற்றும் உத்தமரானார்.

ஜெய் ஸ்ரீராம்
ஸர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!