விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் எழுதிய பராசர பட்டர், மகாலக்ஷ்மியின் திருக்கல்யாண குணங்களை வர்ணிக்கக் கூடிய ஸ்தோத்திரம் இயற்றி இருக்கிறார். குணரத்ன கோசம் என்று அதற்குப் பெயர் அதில் சீதா பிராட்டியின் கோஷ்டி, ராமபிரானுடைய கோஷ்டி என்று இரண்டாகப் பிரித்து, சீதையினுடைய கோஷ்டியே உயர்ந்து நிற்கிறது என்று தீர்ப்புச் சொல்கிறார்.

பிராட்டியின் கோஷ்டி ஏன் உயர்ந்து நிற்கிறதாம்..? 

சீதாபிராட்டியின் சரணாகத ரக்ஷணம் ராமனுடையதைக் காட்டிலும் உயர்ந்து நின்றது எப்படி...?

விபீஷணன், ராமனுடைய திருவடியைப் பிடித்துக் கொண்டபோது அவனை ரட்சித்து அருளினான் பரமாத்மா. 

சீதாபிராட்டியோ ஒரு படி மேலே போனாள் !

இந்திர புத்திரனான காகாசுரன் பிராட்டியினிடத்திலே அபசாரமாக நடந்து கொண்டான். அவனைத் தண்டிப்பதற்காக பகவான் பிரும்மாஸ்திரத்தைப் பிரயோகம் பண்ணினான். அசுரன் அஸ்திரத்துக்கு பயந்து ஓடுகிறது..!

இந்திரனாலும் கைவிடப்பட்டு, திரி மூர்த்திகளாலும் கைவிடப்பட்டு ஊர் ஊராகப் போய் வீடு வீடாக அலைகிறது காக்கை! ஆனாலும் ராம பாணத்தில் இருந்து அதனால் தப்பித்துக் கொள்ள முடியவில்லை.

இந்தக் காகம் வீடு வீடாகப் போய் சரணாகதி பண்ணியதற்கு ஒரு கதையை உபமானம் சொல்லுவார்கள். 

ஒரு யானையை வைத்துக் கொண்டு ஜீவிதம் நடத்திக் கொண்டிருந்தான் ஒரு பாகன். ஒரு நாள் அந்த யானைக்கு மதம் பிடித்து, அடர்ந்த காட்டுக்குள் ஓடிப்போய்விட்டது. யானைப் பாகன் வந்து பார்த்தால், யானையைக் காணோம்..! எங்கெங்கோ தேடியும் அது கிடைக்கவில்லை. கடைசியில் ரொம்ப சிந்தாகிரஹனாய் விழுந்து கிடந்தான் அவன்!

வீட்டுக்குப் போய் உருண்டு கிடந்த பானைகளை எல்லாம் எடுத்து, ஒவ்வொரு பானையாக யானையைத் தேடினானாம்.

பெரிய பெரிய இடங்களெல்லாம் தேடிக் கிடைக்காத யானை, பானைக்குள்ளே கைவிட்டால் கிடைத்துவிடுமா! அதைப் போலதான் காகாசுரனும் பலம் படைத்தவர்கள் எல்லாம் கைவிட்ட பின்னர் ஒவ்வொரு வீடாய்ப் போய் - சாமானியர்கள் வீடாய்ப் போய் அபயம் கேட்டானாம்!

எந்த வீட்டிலும் அசுரனுக்கு உதவி கிட்டவில்லை. கடைசியில் ராமனிடத்திலே தான் வந்து சேர்ந்தான்.  

சரணாகதி என்று அவன் திருவடியிலே வந்து இறக்கையைப் படியச் செய்தான். விழுந்தவனின் தலை, ராமனின் பாதங்களை நோக்காமல் எதிர் திசை நோக்கித் திரும்பியிருந்தது.

சீதாபிராட்டி பார்த்தாள் - குழந்தைக்கு சேவிக்கத் தெரியவில்லையே! என்று காகாசுரனின் தலையை ராமனின் திருவடி நோக்கித் திருப்பி வைத்தாள்!

எத்தகைய கொலைக் குற்றம் புரிந்திருக்கிறான் அவன்! அப்படிப்பட்டவனை என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் அல்லவா! ஆனால் பகவான் மகாலக்ஷ்மியினுடைய காருண்யத்தைப் பார்த்துத் தணிந்து போனான். காகாசுரனுடைய ஒரு கண்ணை மட்டும் போக்குவதோடு நிக்ரஹத்தை நிறுத்திக் கொண்டான்.

அதனால் தான் இன்றைக்கும் காக்கைகளுக்கு ஒரு கண் பார்வை இல்லாமல் இருக்கிறது. தலையைத் திருப்பித் திருப்பி, சாய்த்துத்தான் அதனால் பார்க்க முடியும்.

காகசுரனின் தலையைத் திருப்பி வைத்து அவனுக்கு அனுக்ரஹம் பெற்றுத் தந்ததை காகாஷி நியாயம் என்று சொல்வார்கள்!

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !