வேதங்களின் முடிவான உபநிஷதங்களில் கரை கடந்தவர் என்பதான பொருளில் " நிகமாந்த மஹா தேசிகன் " என்று ஸ்ரீ வேதாந்த தேசிகரை சொல்வார்கள். ' நிகமாந்த ' என்றாலும் ' வேதாந்த ' என்றாலும் ஒன்றுதான். "ஸர்வதந்திர ஸ்வதந்திரர் " என்றும் அவருக்குச் சிறப்பு உண்டு. குதிரை முகம் கொண்ட மஹா விஷ்ணுவான ஹயக்ரீவர் அவருக்குப் பிரத்யட்சம். வடகலை சம்பிரதாயத்துக்கு மூலபுருஷர் அவர்.
தமக்கென்று திரவியமே வைத்துக் கொள்ளாமல், பிஷை எடுத்துத்தான் ஜீவித்து வந்தார்.
பெரியவர்களாக யார் இருந்தாலும் அவர்களுக்கு விரோதிகள் இருப்பார்கள். அந்தப் பெரியவரை அவமானப்படுத்திப் பார்க்க வேண்டும் என்று சூழ்ச்சி செய்கிறவர்கள் இருப்பார்கள்.
ஸ்ரீ வேதாந்த தேசிகருக்கும் இப்படிப்பட்ட விரோதிகள் இருந்தார்கள். "ஸர்வதந்திர ஸ்வதந்திரர் " என்றால் வெளி சகாயம் எதுவும் இல்லாமலே தாமே எதையும் சாதிக்ககூடியவராக இருக்க வேண்டும். இந்த தேசிகன் அப்படி எதையும் சாதித்து விட முடியாது என்று நிரூபித்து விடவேண்டும். "ஸர்வதந்திர ஸ்வதந்திரப்பட்டம் அவருக்கப் பொருந்தாது என்று லோகத்துக்குக் காட்டி, மானபங்கப் படுத்த வேண்டும் " என்று அவருடைய விரோதிகள் நினைத்து ஒரு சூழ்ச்சி செய்தார்கள்.
பரம ஏழையான ஓர் அசட்டு பிராமணப் பையன் கல்யாணமே ஆகாமல் ரொம்பவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். பணம், புத்தி இல்லாதவனுக்கு, யார் பெண் கொடுப்பார்கள்? தேசிகனின் விரோதிகள் இந்தத் தடிமண்டுப் பிரம்மசாரியைக் கொண்டு, அவரை அவமானப்படுத்தி விடலாம் என்று நினைத்தார்கள்.
" இந்தப் பையன் போய் அவரிடம் தனக்குப் பணமுடிப்பு வேண்டும் என்று பிராத்தனை பண்ணட்டும். அவரிடமோ திரவியம் இல்லை. இவனுக்காக அவர் பிறத்தியாரையும் யாசிக்கக்கூடாது. ' ஸர்வதந்திர ஸ்வதந்திர ' என்றால், அவராகவே எப்படியோ இவனுக்கு வேண்டிய தனத்தை உண்டாக்கித் தந்துவிட வேண்டும். அவரால் இப்படிச் செய்ய முடியாது. உடனே, ' எப்படி ஐயா பெரிய பட்டத்தை வைத்துக் கொள்ளலாம்? ' என்று கேட்டு, அவருடைய மானத்தை வாங்கிவிட வேண்டும் " என்று திட்டம் போட்டார்கள்.
அந்தப் பிரகாரமே ஏழைப்பையனை அவர்கள் ஏவினார்கள். ஸ்ரீதேசிகனிடம் ஏழைப்பிரம்மசாரி போய்த் தன கல்யாணத்துக்குப் பணம் வேண்டும் என்று யாசித்தான்.
(எழுநூறு வரூஷத்திய முந்தைய காலம் அது. பிள்ளை வீட்டுக்காரன், பெண் வீட்டுக்கு பணம் கொடுத்து கல்யாணம் பண்ணிகொண்டதாகவும் வரதஷிணை வாங்குகிற வழக்கம் இல்லை என்பதாகவும் நிரூபணம் ஆகிறது )
வேதாந்த தேசிகருக்கு இது விரோதிகள் சூழ்ச்சி என்று தெரிந்து விட்டது. இருந்தாலும், அவர் தன்னை அவமானப்படுத்த வந்தவனிடமும் கருணை கொண்டார். மஹாலக்ஷ்மியை மனமுருக வேண்டி, ஒரு 'ஸ்துதி' செய்தார். அதுவே, உத்தமமான "ஸ்ரீஸ்துதி ஸ்தோத்திரம் ". உடனே பொன் மழை பொழிந்தது.
அதை பிரம்மசாரிக்கு கொடுத்தார். விரோதிகளால், பெரியவர்களுக்குக் கடைசியில் மேலும் பெருமையே உண்டாகும். தேசிகருக்கும் அப்படிப் பெருமை உண்டாயிற்று.